Published : 09 Jan 2024 04:25 AM
Last Updated : 09 Jan 2024 04:25 AM
இரண்டாம் வகுப்பு படிக்கும் ரதிதான் மந்திரக் கிலுகிலுப்பை நாவலின் நாயகி. பறவைகள், விலங்குகள் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். வீட்டிற்கு அருகில் பெரிய தோட்டம் ஒன்றை ரதியின் அப்பா உருவாக்கிருக்கிறார். அங்கு செடி, கொடி, மரங்கள், பறவைகள், ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் உண்டு. அவற்றோடு பேசும் மொழியை கற்றவள் ரதி. ஒருமுறை உள்ளூரில் சர்க்கஸ் பார்க்கச் செல்கிறாள். யானை, கரடி, சிங்கம், ஒட்டகம், பாம்பு, ஆமை போன்ற விலங்குகள் செய்யும் சாகசங்களைப் பார்க்கிறாள்.
ஆனால், அந்த விலங்குகளைக் கூண்டில் அடைத்துப் போட்டிருப்பதை எண்ணி வருந்துகிறாள். இந்த விலங்குகளின் வீடுகாடு தானே. அவை ஏன் அதனுடைய அப்பா, அம்மாவை பிரிந்து இந்த கூண்டுகளில் இருக்கின்றன? இவற்றுக்கு ஏன் இந்தப் பரிதாப நிலை? என்று யோசித்து விட்டு அவற்றின் நிலையை எண்ணி வருந்துகிறாள் ரதி.
சர்க்கஸ் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னும் அந்த விலங்குகளின் நினைவிலேயே இருக்கிறாள். ஒருமுறை பாட்டியின் ஊருக்குச் சென்ற ரதிக்கு கொள்ளுப்பாட்டி கொடுத்த மந்திரக் கிலுகிலுப்பை கிடைக்கிறது. அந்த மந்திரக்கிலுகிலுப்பையை எடுத்துக்கொண்டு சர்க்கஸ் கூடாரத்திற்குச் சென்று யானை, ஒட்டகம், கடல், ஆமை, அனகோண்டா பாம்புமற்றும் சீல் ஆகியவற்றை பிப்லோபல்பி ஹெய்சா என்ற மந்திரத்தை மூன்று முறை கூறி கிலுகிலுப்பையை ஆட்டி அந்த விலங்குகளைச் சிறிதாக உருமாற்றுகிறாள்.
அவற்றை ஒரு சின்ன டிபன் பாக்ஸில் வைத்து தானும் சின்ன உருவமாக மாறி டிபன்பாக்ஸில் அமர்ந்து கொள்கிறாள். அந்த விலங்குகளை அதனதன் வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க டிபன்பாக்ஸில் பறந்து செல்கிறாள். குளிர் மிகுந்த ஆர்டிக் பிரதேசம் உள்பட பல்வேறு இடங்களுக்கு போகிறார்கள். அடர்ந்த முதுமலை காட்டிற்குப் போகிறார்கள். இல்லை அவர்களோடு நாமும் சேர்ந்து பயணிக்கிறோம்.
இடையிடையே பல சோதனைகள். ஒரு முறை கிலுகிலுப்பை தொலைந்து விடுகிறது. வாசிக்கும் நமக்கும் ‘பக்'கென்கிறது. கிலுகிலுப்பையில் இருக்கும் கற்களின் எண்ணிக்கை அளவில்தான் மந்திரங்கள் பலிக்கும் என்பதை மறந்து விடுகிறாள் ரதி. கடைசி ஆளை இறக்கி விடும்போது இரண்டு கற்கள் மட்டுமே இருப்பதை உணர்கிறாள். கடைசியில் என்ன ஆச்சு? என்பதே கிளைமாக்ஸ்.
அவள் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள சூழலியல் பற்றியும் அங்கு இருக்கும் விலங்குகள் குறித்தும் சொல்லியிருப்பது நாவலின் சிறப்பு. பனிப்பாறைகள் ஏன் உருகுகின்றன? மனிதர்களின் சுயநலத்தால் வந்த வினை என்ன? கடல் ஆமைகளை பற்றியவிபரங்கள். அமேசான் காடுகளைப்பற்றி இப்படி பல்வேறு தகவல்களை கதை வழியாக சுவையாக சொல்லியிருப்பது தனித்துவம். குழந்தைகள் மொழியில் வாசிக்க வாசிக்க சுவாரசியத்தையும் மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுக்கிறது இந்த நாவல். இதனை ஈரோட்டைச் சேர்ந்த கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் விருது உள்ளிட்ட மூன்று விருதுகளையும் பெற்றுள்ள இந்த நூல், சமீபத்தில் "தி மேஜிக்கல் ராட்டில்" என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
- சாந்தி; புத்தக விமர்சகர் ஈரோடு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT