Published : 03 Jan 2024 04:30 AM
Last Updated : 03 Jan 2024 04:30 AM
பள்ளி மேலாண்மைக் குழுவை தமிழக பள்ளிகளில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசின் மற்றொரு திட்டமாக கேரளாவில் உள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பு மற்றும் செயல்பாடுகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட 38 பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாநில கருத்தாளர்கள் குழு என மொத்தம் 50 பேர் கேரளா பள்ளிகளை பார்வையிட அனுப்பியது.
2023 நவம்பர் இறுதி வாரத்தில் அமைந்த அப்பயணத்தில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நானும் சென்றிருந்தேன். பயணத்தின் ஒரு பகுதியாக வரலாற்றில் இடம்பெற்ற ஒரு பள்ளிக்குச் சென்றோம். கடந்த நூற்றாண்டில் கேரளாவில் ஒடுக்கப்பட்ட புலையர் இன மக்கள் கல்வி கற்க ஆதிக்க சக்திகள் தடையாக இருந்தன. மேலாடை அணியவே அனுமதி மறுக்கப்பட்ட அம்மக்களுக்குக் கல்வி முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது. இவர்களை கல்வி கற்க அனுமதித்தால் வயலில் யார் வேலை செய்வார்கள்? என கேள்வி எழுப்பி, ஆதிக்க சாதியினர், புலையர் இன மக்கள் கல்வி கற்க தடையாக இருந்தனர்.
அய்யன்காளியின் போராட்டம்: ஒடுக்கப்பட்ட மக்கள் மாட்டு வண்டியில், ஆதிக்க சாதியினரின் வீதிகளில் வர அனுமதிக்கப்படவில்லை. கம்பீர தோற்றம் கொண்ட அய்யன்காளி, வெள்ளை மாடுகளை வண்டியில் பூட்டி, கையில் கத்தியோடு ஆதிக்க சாதியினரின் வீதியில் வந்து புரட்சி செய்தார்.
எங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால், வயலில் களைகள் பெருக்கமடையும் என எச்சரித்து போராட்டத்தில் இறங்கினார் அய்யன்காளி. அரசு பள்ளிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி கற்க தடையாக ஆதிக்க சாதியினர் இருந்ததால், 1904-ல் வெங்கனூரில் அய்யன்காளி தலைமையில்மக்களே ஒரு பள்ளியை நிறுவினர்.
கரும்பலகைக்குப் பதிலாக மணலில் பாடம் கற்பிக்கப்பட்டது. இதனால் புலையர் இன குழந்தைகள் கல்வி கற்க ஆரம்பித்தனர். இப்பள்ளிதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதல் பள்ளி என்று சொல்லப்படுகிறது.
அனைத்து பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட குழந்தைகளைச் சேர்க்க அரசு பணித்தும், ஆதிக்க சாதியினர் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடைபெறக்கூடாது என்றனர்.
பஞ்சமி படைத்த வரலாறு: 1910-ல் கல்வி கற்க ஆசை கொண்ட பஞ்சமி என்ற புலையர் இன சிறுமியை மகாத்மா அய்யன்காளி அருகிலுள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்று ஒருநாள் முழுவதும் அமர வைத்தார். ஆதிக்க சாதியினர் இதனைக் கேள்விப்பட்டு, தங்களது குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
அன்றைய இரவு பள்ளி ஆதிக்க சாதியினரால் தீக்கிரையாக்கப்பட்டது. அதில் தப்பித்தது பாதி எரிந்த ஒரு மேசை மட்டுமே. அந்த மேசை தான் நீங்கள் படத்தில் காண்பது. பின், மீண்டும் அதே இடத்தில் பள்ளி புதுப்பிக்கப்பட்டது. ஓர் ஆண்டு கழித்து, அதே பள்ளியில் மீண்டும் பஞ்சமி படித்தார் என்பது வரலாறு.
அன்று போராட்டம் நிகழ்ந்த அப்பள்ளிக்கு போராடிய அய்யன்காளியின் பெயரோடு, போராடிய சிறுமி பஞ்சமி பெயரையும் இணைத்து அப்பள்ளிக்கு பெயராக சூட்டியுள்ளது இன்றைய கேரள அரசு. அப்பள்ளியின் பெயர் ’அய்யன்காளி பஞ்சமி சமரக அரசு உயர் தொடக்கப்பள்ளி’. போராட்டம் நடைபெற்ற அப்பள்ளி அமைந்துள்ள இடம் ஊருட்டம்பளம்.
புறத்தில் வைத்த தீயை, அகத்தில் எரிந்து கொண்டிருந்த கல்வி வேட்கைத் தீ, அணைத்துவிட்டது. இன்று கேரளாவில், எழுத்தறிவு நூறு சதவீதம் எட்டியதற்கு காரணம் அய்யன்காளி, நாராயணகுரு போன்ற போராளிகள்தான் என அரசும் மக்களும் போற்றுகின்றனர்.
கேரளாவின் வளர்ச்சிக்கு அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் வழிவகை செய்துள்ளன. எல்லோரின் கையிலும் ஆயுதம் கொடுப்போம். அந்த ஆயுதம் புத்தகமாக இருக்கட்டும். அறிவால், அன்பால், சமத்துவத்தால், ஒற்றுமையால், சுதந்திரத்தால் மனிதத்தை வளர்ப்போம்.
- கட்டுரையாளர் அரசு பள்ளி ஆசிரியர், செங்கல்பட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT