Published : 02 Jan 2024 04:30 AM
Last Updated : 02 Jan 2024 04:30 AM
பதின்ம பருவம் பக்குவப்பட தயாராகும் நிலம் போல. பருவமழைக்குக் காத்திருக்கும் பயிர்கள் போல. எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, வானம் என்ன எல்லை..... அதையும் தாண்ட முயற்சிக்கும் துள்ளல் பருவம். எண்ணங்களை வண்ணச் சிறகுகளாக்கி தன் கண் எல்லைகளுக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும் சுற்றித் திரிய கனவு காணும் அழகிய உலகம் பள்ளிப் பருவ காலம். இன்று பெற்றோர்களில் பலர் இருவரும் பணி செய்பவர்.
பெற்றோர்களின் மாபெரும் மனச் சுமைகுழந்தைகள் வீட்டில் சரியாக பேசுவதில்லை. வீட்டில் எதிர்த்து பேசுகிறார்கள். எரிந்து எரிந்து விழுகிறார்கள். அதிக நேரம் நண்பர்களோடு நேரம் செலவழிப்பதையே விரும்புகிறார்கள். எத்தனை முறை கேள்வி கேட்டாலும் ம்ம்....ஆமா... சரி...இல்லை...என்ற ஒற்றைச் சொல்லே வருகிறது.
கோபத்திற்கு காரணம் என்ன? வீட்டில் மட்டுமே கோபமா? வீட்டில் ஒரு மாதிரி, வகுப்பறையில் வேறுமாதிரி, பொதுஇடங்களில் சற்றேவேறு விதமாக என பல பிம்பங்களைத் தாங்கி வாழும் அதிசயகுழந்தைகளை எப்படி உருவாக்குவது? வீட்டில் எந்த அளவுக்கு காது கொடுத்து கேட்காமல் கோபத்தையே பதிலாக தருகிறார்களோ, அது போலத்தான் வகுப்பறையிலும் காட்சி அளிக்கின்றனர்.
உடன் பழகும் தோழர்களுடனும் பெரிதாக நட்பு பாராட்டுவது இல்லை.அனைவரையும் சமமாக கையாள் வதில்லை. உடன் பயிலும் அனைவரோடும் சிரித்து பேசி, விளையாடி, கேலி செய்து அழகான பள்ளி பருவத்தை மேலும் அழகாக்கும் அற்புதங்களை மறந்து வாழ்கின்றனர். நட்புகள் தற்போதெல்லாம் அவ்வளவு ஆழமாக இல்லை என்பதுதான் உரக்க கூற வேண்டிய உண்மை. வீட்டில் தொடங்கிய முகம் சுருக்கும் பழக்கமானது நண்பர்களோடு பயணித்து அடுத்ததாக ஆசிரியரிடமும் எட்டிப் பார்க்கிறது.
ஏதேனும் வினாக்கள் எழுப்பினால் கோபம் எழுகிறது. தன் மன உணர்வுகளை, எதிர்ப்புகளை அவர்கள் புத்தகத்தை மேசையின் மீது வேகமாக தூக்கிப் போடுவதும். தங்களுடைய நீர் புட்டிகளை மேலிருந்து கீழாக சாய்த்து விடுவதும் எந்த பதிலும் கூறாமல் முகம் சுருக்கி பார்வை அகற்றி அமைதியாக நிற்பதும் என தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் குணத்தை எவ்வாறு கையாள்வது? ஒவ்வொரு பாடவேளையிலும் ஆள் மாற்றம், புத்தகங்கள் வேறு, வினாக்கள் வேறு, விடைகள் வேறு, கருப்பொருள்கள் வேறு என வெவ்வேறாக இருப்பதை உணர்ந்து கொள்ள காலம் எடுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம் பள்ளிப் பருவமே.
வயதுக்கு ஏற்ப உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு உள சிக்கல்களில் ஆட்கொண்டு நண்பர் களிடமோ அல்லது மற்றவர்களிடமோ எதையும் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியங்களை உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் சுமையான பருவம். பள்ளிப் பருவம் பாடங்களை மட்டுமே கற்கும் பொற்காலம் என்ற முடிவு முற்றிலும் முரணானது. அழகு உணர்வும், உடல் ரீதியான மாற்றங்களும் மாறி மாறி அவர்களை அடைகாக்கும் பருவ காலம் அது.
சரிசெய்வது எப்படி? - வீடுகளில் நுழையும் போதே முகவாட்டம் கண்டால் காரணம் கேட்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களின் காரணம் எதுவாக இருந்தாலும் அமைதியாக கேளுங்கள். அப்போதைக்கு அமைதி காட்டி,வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் காயம் ஏற்படுத்தாதீர். வகுப்பறையில் முக வழி அகம் காண முயற்சி செய்யுங்கள். தங்கள் மாணவர்களின் மனம் வாசிக்கும் நுண்மை அறியுங்கள்.
பெற்றோர் தங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும். வகுப்பறை கோபங்களை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம். அவர்களின் மன உணர்வுகளை மதிப்போம். குடும்ப பின்னணியைக் காது கொடுத்து கேட்போம். அவர்களின் சூழலை அவர்களுக்குப் புரியவைக்க புதிய வழிகளைத் தேடுவோம்.
- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர் எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT