Published : 18 Dec 2023 04:20 AM
Last Updated : 18 Dec 2023 04:20 AM
வகுப்பறையில் மாணவர்களிடம் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு படம் வரைந்து வாருங்கள் என்றேன். என்ன படம் வேண்டுமானாலும் வரையலாமா ஐயா? என்றான் ஒரு மாணவன். ஆம்! உன் மனதில் தோன்றியதை ஓவியமாக்கு என்றேன். வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்கள் நாற்பது பேரில் முப்பதுக்கும் மேற்பட்டோர் இயற்கை காட்சிகளையே வரைந்து வந்தனர். ஒரு சிலர் சோட்டா பீம், மோட்டு பட்லு என கார்ட்டூன்களை வரைந்திருந்தனர். மரங்கள் மண் தந்த சீதனங்கள். எனவே, இன்று மரங்களைப் பற்றிபேசுவோமா? என்றேன். இந்த மாதத்தில் பிறந்த நாள் கொண்டாடியவர்கள், கொண்டாட உள்ளவர்கள் யார்? யார்?என்றேன். ஒரு சிலர் கை தூக்கினார்கள்.
அப்படி கை தூக்கிய ஒரு மாணவனிடம், உன் பிறந்த நாளை எப்படி கொண்டாடுவாய் என்றேன். புதுச்சட்டை போடுவேன். அம்மா கேசரி செய்து கொடுப்பார்கள். நண்பர்களுக்கு கடலை மிட்டாய் கொடுப்பேன். அப்புறம் நம்ம பள்ளிக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன் என்றான். அப்படியா? அது என்ன பரிசு? என் பிறந்த நாளன்று நம் பள்ளி வளாகத்தில் மரக்கன்று ஒன்று நட உள்ளேன் ஐயா என்றான். மொத்த வகுப்பும் கைதட்டி வரவேற்றது. பிறந்த நாளில் யாரெல்லாம் மரக்கன்றுகள் உங்கள் வீட்டிலோ, வீதியிலோ நட்டு வைத்து வளர்க்கிறீர்கள் என்றேன். ஒரு சில மாணவர்கள் கை தூக்கினார்கள். பிறந்த நாளில் மரக்கன்றுகள், பூச்செடிகள், மூலிகைச் செடிகள் வைத்து வளர்க்கும் மாணவர்களுக்கு காலை வழிபாட்டுக் கூட்டத்தில் புத்தகம் வழங்கப்படும் என்றேன். கைதட்டல் மீண்டும் ஒலித்தது.
ஐயா, இனி வரும் எங்கள் பிறந்த நாளில் நாங்களும் மரக்கன்று, மூலிகைச் செடி , பூச்செடி நட்டுவைத்து வளர்ப்போம் என்றனர். நம் பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களைப் பாரக்கலாம் வாருங்கள் என்றேன். இந்த வேப்பமரம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் நட்டு வைத்தது. இந்த புங்கை மரம் உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று நடப்பட்டது. இந்த வேப்பமரம் நம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்தபோது நடப்பட்டது. இந்த வாகை மரம் நமது மாவட்டக் கல்வி அலுவலரால் நடப்பட்டது. இந்தக் குமிழ் தேக்கு மாணவி ஒருவரின் பிறந்த நாளன்று வைத்தது என்று ஒவ்வொரு மரமும் அது எப்போது நடப்பட்டது, எதற்காக நடப்பட்டது என்பது பற்றி சொன்னேன். இதுபோல் அம்பேத்கர் பிறந்தநாள், பாரதியார் பிறந்த நாள், சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழா என முக்கிய விழாக்களை நினைவு கூரும் விதமாக மரங்கள் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன என்றேன்.
நம் வகுப்பில் உள்ள உங்கள் அனைவருக்கும் ஒரு பொறுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு மாணவர்கள் சேர்ந்து ஒரு மரத்தைப் பராமரிக்க வேண்டும். அந்த மரத்திற்கு நீங்களே ஒரு பெயரையும் வைத்துக் கொள்ளலாம். அது தேசத்தலைவர்களின் பெயர்களாகவோ, தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களாகவோ இருக்கலாம் என்றேன். மாணவர்கள் தங்கள் மரத்திற்கான பெயர்களை வைக்கத் தொடங்கினர். இன்னும் 4 ஆண்டுகளில் 12-ம் வகுப்பு முடிப்பார்கள். அவர்களும் வளர்ந்திருப்பார்கள். மரங்களும் பெரியதாக வளர்ந்திருக்கும். தம் கரங்களால் மரங்களை அணைத்து மகிழ்வார்கள். பள்ளி வளாகமும், அவர்களது வாழ்வும் பசுமையாகவும், பசுமை நிறைந்த நினைவுகளாகவும் இருக்கும். ஆம்! மரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கு மனப்பறவை மகிழ்ச்சிச் சிறகு விரிக்கும்.
- கட்டுரையாளர் தமிழாசிரியர், அரசு ஆதிந.மேல்நிலைப் பள்ளி, இளமனூர், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT