Published : 13 Dec 2023 04:30 AM
Last Updated : 13 Dec 2023 04:30 AM

மாணவர்களின் கற்பனை திறனுக்கு உயிரூட்டும் மேக ஓவியர்

வளர்ச்சியை நோக்கி ஓடுகின்றன நாம் பொழுது சாயும் நேரம் வீட்டின் மொட்டை மாடியில் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து முகில்கள் செய்யும் ஜாலங்களை ரசிக்கிறோமா? நாம் குதூகலிக்கத் தவறும் அந்த அற்புதத் தருணங்களுக்குத் தனது தூரிகையால் உயிரூட்டுகிறார் ஓவியர் மரியான் பிரிட்டோ. இதேபோன்று மலைகள், நீர்நிலைகள் என பல வடிவங்களை ஆதாரமாக வைத்து புதிய ஓவியங்கள் அவற்றிலிருந்து உதித்தெழ செய்கிறார். ஓவியக்கலை, கதை சொல்லல் மூலம் தமிழகத்தின் கிராம, மலை வாழ் சிறார் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள இவர் புதுச்சேரியை சேர்ந்த பயோ மெடிக்கல் இன்ஜினி யர். தனியார் நிறுவன ஊழியர், பிரஞ்ச் மொழி பயிற்றுநர். கடந்த ஏழு ஆண்டுகளாக குழந்தைகளுக்கான கல்வி சார்ந்து, அரசு சாரா அமைப்பு களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2019-ல் இருந்து தொடங்கப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி அளித்து வருகிறார்.வழக்கமான ஓவியப் பயிற்சிபோல் அளிக்காமல், தனது ஓவியங்களை காட்சிப்படுத்தி அந்த காட்சிகளை பார்க்கும் குழந்தைகளிடம் அவர்களுக்கு என்ன தோன்றுகிறது என தொடங்கி அதை வைத்து கதை சொல்ல தூண்டுகிறார். அவருடன் பேசியதிலிருந்து...

மலைவாழ் சிறார் கூர்மையானவர்கள்: கிராமத்துக் குழந்தைகள் தானே என்கின்ற பார்வையில் நான் அணுகியதே கிடையாது. நம்மை விடஅவர்களுக்குக் கற்பனை திறனும் படைப்பாற்றலும் அதிகம். ஏனென்றால் அவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் வாழ்கின்றனர். அவர்கள் அன்றாடம் பார்க்கக்கூடிய மலை, அருவி, மேகம், வானம், மழை, பறவைகள், செடிகள், விலங்குகளிடம் எப்படி பழக வேண்டும் என்று அந்தகுழந்தைகளிடமிருந்து அதிகம்கற்றுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி மலைவாழ் குழந்தைகளுக்குக் கற்பித்தல் மிகவும் எளிது. ஏனென்றால் இன்றைய நகர குழந்தைகளுக்கு இருப்பதுபோன்ற ஸ்மார்ட்போன் போதையோ, அதனால் விளையும் கவனச்சிதறலோ மலைவாழ் குழந்தைகள் மத்தியில் கிடையாது. இதனால் கூர்மையான கவனிப்பு திறன் கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்துதான் எனது கலைப் பயணம் தொடங்கியது. கிராமங்கள், மேகம் உள்ளிட்ட தலைப்புகளை கொண்டு பல கதைகளை உருவாக்கினேன். ஓவியங்கள் மூலம் மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவித்து, கதை சொல்லல் திறன், மொழித்திறனையும் ஊக்கப்படுத்தத் தொடங்கினேன்.

வானத்தில் உள்ள மேகங்களை நாம் பார்க்கிறோம். ரசனை இருந் தால் அந்த மேகமே விலங்காக, பறவையாக தோன்றுவதை வைத்துகதை சொல்ல முடியும். சமையலறை பண்டங்களை வைத்து கதை சொல்லலாம். வட்டம், சதுரம், கோணம், சாய்சதுரம் என வடிவங்களை வைத்துகதை சொன்னால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது. எது பிடிக்கிறதோ, எது உங்களுக்கு மகிழ்ச்சிஅளிக்கிறதோ அதை செய்யுங்கள். கஷ்டப்பட்டுப் படித்தால் மட்டுமேபடிப்பு தலையில் ஏறும் என்பது தவறான நம்பிக்கை. குழந்தைகளுக்கு பிடித்தமான வழியில் படித்தால் எதையும் அவர்களால் எளிதில் கற்க முடியும். ஓவியக்கலையும், கதை சொல்லலும் அதற்கு உதவும் சிறந்த வழியாகும்.

நான் ஆசிரியர் அல்ல! - சேலம், திருவண்ணாமலை, ஊட்டி,சிதம்பரம் ஆகிய ஊர்களின் அருகேஉள்ள கிராமங்களுக்கு 2 நாள் பயணமாக சென்று அங்குள்ள மாணவர்களுடன் உரையாடி இருக்கிறேன்.அப்போதெல்லாம் ஆசிரியராக என்னிடம் இருப்பதை எதிரில் இருக்கும் மாணவர்களிடம் திணிக்க நான் முயன்றதில்லை. நான் ஒன்றைநினைத்து ஓவியம் வரைந்திருப்பேன். மாணவர்களோ அதை வைத்து 5 நிமிடம் கதையே சொல்லிவிடுவார்கள். அவர்களிடமிருந்துதான் நான் அதிகம் கற்றுக் கொள்கிறேன். சொல்லித் தருவதில் மட்டும் இல்லைஆசிரியர் பணி; மாணவர்களிடம் கற்றுக்கொள்வதில் தான் அதன் ஜீவன்உள்ளது. கலை ஊடாக மாணவர்களையும் மெருகேற்றி என்னையும் செதுக்கிக் கொள்வதே எனது கலைப்பயணத்தின் இலக்கு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x