Last Updated : 01 Dec, 2023 04:30 AM

 

Published : 01 Dec 2023 04:30 AM
Last Updated : 01 Dec 2023 04:30 AM

பிள்ளைகளை நம்புங்கள்...

பிள்ளைகளுக்கான படிப்பைத் தேர்வு செய்வதில் பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளில் அதிகமாகப் பாதிப்பு அடைவதாகக் கருதுவது பிள்ளைகள்தான். அது சரியானதே. பெற்றவர்கள், தாங்கள் எவ்வாறுவாழவேண்டும் என்று முடிவு செய்துஅதன்படி வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். அதனால், அவர்களுக்குப்பிள்ளைகள் எந்த படிப்பினைப் படித்தாலும் பிரச்சினையில்லை. பிள்ளைகள் மட்டும் தான் தங்கள் வாழ்வின்ஆரம்ப காலக்கட்டத்தில் உள்ளார்கள். அதனால், இக்குழப்பங்களின் விளைவுகள் பிள்ளைகளுக்குத்தான் தாக்கத்தை ஏற்படுத்துமென பெற்ற வர்கள் உணர வேண்டும்.

எங்கள் பெற்றோர் படிக்கச் சொன்ன படிப்பைத் தான் எவ்வித எதிர்ப்பும் கூறாமல் படித்தோம் என்கிற இன்றைய பெற்றவர்கள் தங்களின் மனசாட்சியைக் கேட்டால், அப்படிப்பு தங்கள் விருப்பமானது இல்லையென்று பலரின் மனம் நிச்சயம் சொல்லும். இன்றைய பிள்ளைகளில் பலர்,பெற்றவர்களிடம் அனைத்துவிதமானஉரிமைகளையும் எடுத்துக்கொள் ளும் அளவிற்கு, அன்பாய் வளர்க்கப் படுகிறார்கள். அக்காலத்தில், இதுபோன்று உரிமையை எடுத்துக் கொள்ளும் விதத்தில் எத்தனை தந்தைகள், ஒரு சிலரைத் தவிர, பழகியிருக்கிறார்கள்? அக்காலத்தில், அப்பாவைக் கண்டாலே பெரும்பா லான பிள்ளைகளுக்கு பயம் தான்.

எனவே, அப்பா சொல்வதை மீறமுடியாமல், சொல்கிற படிப்பினைப் படித்திருப்போம் என்பதும் மறுக்க முடியாத உண்மை. காலம் மாறிவிட்டது. இன்னும் நான் அப்படியிருந்தேன், இப்படியிருந்தேன் என்றுகூறுவதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் பிள்ளைகள் இல்லை. இவை மட்டுமல்லாமல், அக்காலத் தில் இப்பொழுது உள்ளது போன்று, எல்லாவற்றையும் அறிந்து தேர்ந்தெடுத்துப் படிப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லையென்பதும் உண்மை. இன்றைய காலக்கட்டத்தில், பல பெற்றவர்கள் பிள்ளைகள் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு முன்னரே முடிவு எடுத்து அதற்கேற்றவாறு தங்கள் பிள்ளைகளை உருவாக்குகிறார்கள். இந்த முடிவும் பிள்ளைகள் விருப் பத்துடன் செய்யப்படுகிறதா என்பது கேள்விக்குறிதான்?

பிள்ளையின் விருப்ப மாறுதல், பிள்ளையின் படிக்கும் தன்மை மாறுதல், பிள்ளைகளின் எதிர்கால உயர்வுக்கான வேறு படிப்பின் அவசியம் போன்ற காரணங்களால், தாங்கள் முன்னர் எடுத்த முடிவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதனை மாற்றிக்கொள்ளத் தயாராகப் பெற்றவர்கள் இருக்கிறார்களா என் பதும் கேள்விக்குறி? இன்றைய பிள்ளைகள் பெற்றவர் களைவிடப் பல விதத்தில் அறிவிலும் முடிவெடுப்பதிலும் உயர்வாக உள்ளார்கள். சில நேரங்களில் அவர்களின் முடிவு தவறானாலும், அதை அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை.

ஏனெனில், அதை தங்களால் சரிசெய்து கொள்ளமுடியும் என்ற தன்னம்பிக்கையும், சரி செய்து கொள்வதற்கான வாழ்வின் கால அளவு தங்களிடம் நிறைய இருக்கிறது என்கிற துணிவும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், எந்தப் படிப்பு இன்றைய காலக்கட்டத்திற்கும் பிற்காலத்திற்கும் தேவையாய் இருக் கிறது என்பதற்கான விழிப்புணர்வும், அதற்குத் தேவையானவற்றை அறிந்துகொள்ள விரும்பும் மனமும் பிள்ளைகளிடம் இருக்கிறது. மேலும், வளர்ச்சியடைந்த இன்றைய உலகில் அவையெல்லாம் இலகுவாகக் கிடைக்கும் சூழல், வசதிகள், வாய்ப்புகள் அதிகமாக அவர்களுக்கு இருக்கிறது.

இதுவும் பெற்றவர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் பிள்ளைகளையுடைய பெற்றோர்களில் எவ்வளவு பேருக்கு, உலகில் என்னென்ன புதிய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்றும், அதற்கு எத்தகைய படிப்புகள் தேவை என்பதையும் அறிந்து பிள்ளைகளுக்கு கூறமுடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. உலகின் இன்றைய வளர்ச்சிஓட்டத்தில், பெரும்பாலான பெற்றவர் கள் மிக பின்தங்கியுள்ளோம் என்பதைப் புரிந்துகொண்டால், பிள்ளைகளின் முடிவுக்கு ஒத்துழைப்பவர் களாகவும், தேவையான உதவிகளைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள். இந்தப் புரிதலைப் பிள்ளைகளும், பள்ளிகளும், கல்வியாளர் களும், அரசும் தான் ஊட்டமுடியும். பெற்றவர்கள் எவ்வித கட்டாயப்படுத்தலும் இல்லாத கலந்தாலோ சித்தலை மட்டும் பிள்ளைகளுடன் செயல்படுத்தலாம். பிள்ளைகளின் மீது உண்மையான நம்பிக்கை வைத்து, முடிவு எடுப்பதைப் பிள்ளைகளிடம் விட்டுவிட்டால், அவர்கள்வாழ்வை சிறப்பாக்கிக் கொள்வார்கள்.

- கட்டுரையாளர் எழுத்தாளர், வல்லமை சேர், வேர்களின் கண்ணீர் ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x