Last Updated : 27 Nov, 2023 04:35 AM

 

Published : 27 Nov 2023 04:35 AM
Last Updated : 27 Nov 2023 04:35 AM

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... வந்ததே... நண்பனே...

கொண்டாட்ட மனநிலையை உயிர்ப்பிப்பது எப்போதுமே இனிப்புகள் தான். சிறியவர் முதல் பெரியவர் வரை, ஏன் இடையில் உள்ள நடுத்தர வயதினரும் இனிப்புகள் இன்றி இன்பங்களைப் பரிமாறப் பெறுவதில்லை. இனிப்புகள் என்பது பாரம்பரிய முறையில் வீடுகளில் செய்வது என்பது தற்போது வழக்கொழிந்து விட்டது என்றே கூறலாம்.

தித்திக்கும் இன்னட்டு: குழந்தைகளை உற்சாகப்படுத்துவது தித்திக்கும் இன்னட்டு போல வேறு எதுவும் இல்லை. சாக்லேட், இன்னட்டு எனும்தமிழ் பெயரைக் கொண்டது.இன் என்றால் இனிப்புச் சுவையைக் குறிக்கு ஒருசொல். ‘அட்டு' என்றால் அழுக்கு நிறத்தைக் (கபிலம்) குறிக்கும் ஒரு சொல் லாகும்.

வண்ண வண்ண மிட்டாய்:மிட்டாய் என்று சொல்லும் போதே மின்னல் போன்ற மகிழ்ச்சி ஒட்டிக் கொள்ளும் குழந்தைகளை. பிறை வடிவத்தில் ஆரஞ்சு பழச்சுளை போல ஆரஞ்சு, மஞ்சள், பச்சை என கற்பனை வண்ணங்களில் அழகழகாய் கண்களைக் கவரும் மிட்டாய்கள் தற்போது காணக் கிடைப்பது அரிது. வாயில் இட்டு நாவால் சுவைத்து, நிறம் மாறிய நாவைக் கண்டு ரசிப்பது மிட்டாயை விட இனிமை.

ஜவ்வு மிட்டாய்: அழகான மணியை அடித்துக் கொண்டு பள்ளியின் வாசலில் குழந்தைகளுக்கு மிகவும் அழகாக காட்சித் தருபவர் மிட்டாய்க்காரர். அதிலும் மாய மந்திரம் நிறைந்தது... ஜவ்வு மிட்டாய்... எனக்கு வாட்ச் வேண்டும் செஞ்சு தருவீங்களா? எனக்கு கண்ணாடி வேணும் செஞ்சு தருவீங்களா? என நாம் நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் மந்திரக்காரர் தான் ஜவ்வு மிட்டாய்க்காரர். இக்கால குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர்.

குச்சி ஐஸ்: தற்போது பனிக்கூழ் வண்ண வண்ண சிறிதும் பெரிதுமான குடுவைகளில் அடைக்கப்பட்டும், நெகிழி உரையிட்டும், அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் அக்கால குச்சி ஐசுக்கு, அது தந்த மகிழ்ச்சிக்கு இணையாகுமா! ஐஸ்...ஐஸ்... பால் ஐஸ், கப் ஐஸ், கோன் ஐஸ்.... ஐஸ் ஐஸ்.... என்று காற்று ஒலிப்பானை பாம் பாம் என்ற ஒலி தெருமுனையில் கேட்கும்போது அழுது, அம்மாவிடம் அடம்பிடித்து பெற்ற ஒரு ரூபாயைக் கொண்டு ஒரு ஐஸ் வாங்கி சுவைக்கும் சாதனை இக்கால மழலையர் அனுபவிக்காத சுகம். கல்கோணா என்றும் கம்மர்கட் என்றும் சொல்வார்கள். ஒரு ரூபாய் கொண்டு சென்று ஒரு கல்கோணா கொடுங்க என்ற கேட்டதும், ஒன்றுக்கு நான்காக கொடுக்கும் கடைக்காரரை அதிசயமாக பார்த்துச் சென்ற குழந்தைப் பருவம் என்ன அழகானது.இன்னும் நினைவில் நிற்கிறது ருசியும் கூட. கடிக்க முடியாமல் கல்லால் உடைத்து சாப்பிட்ட அந்தக் காலம் கற்காலம் தான்.

பஞ்சு மிட்டாய்: சின்ன வண்டி கிணிங்...கிணிங்... மணி சத்தம் கண்ணாடி பெட்டிக்குள் காணும் அதிசயம் பஞ்சு மிட்டாய் தவிரவேறு என்ன இருக்க முடியும். தற்காலத்தில் என்னதான் வண்ண வண்ணமாக நெகிழிப்பைகளில் அடைத்துக் கொடுத் தாலும் கண்ணாடி பெட்டியில் அடைத்து வைத்திருக்கும் பஞ்சுமிட்டாயை விற்பவர் தன் கைகளை அகன்று விரித்து அலசி எடுத்து கொஞ்சமாக காகித தாளில் நிரப்பித் தருவாரே அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுமே இல்லை.

வித, விதமான சுவையில்... வீடுகளில் செய்யப்படும் எள் மிட்டாய், கடலை மிட்டாய், அதிரசம் என ‌இனிப்புகள் பட்டியல் நீளும். மனித உழைப்பு பணம்‌ நோக்கி நகர்ந்து போனதால் அங்காடிகள் அவ்விடத்தை நிரப்பிக் கொண்டுள்ளன. அன்னையின்‌ அன்பிட்டு செய்யப்பட்ட எல்லாமே இனிப்புகள் தான்...! இனிப்புகள் இன்றி இன்பங்கள் நிறைவு அடைவதில்லை. சுவைப்போம்... இன்பங்கள் தொடரட்டும்.

- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர் எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி பிராட்டியூர், திருச்சி மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x