Last Updated : 24 Nov, 2023 04:30 AM

 

Published : 24 Nov 2023 04:30 AM
Last Updated : 24 Nov 2023 04:30 AM

படைப்பாளிகளான மாணவர்கள்...

கற்றல் என்பது ஒரு உயிரோட்டமான நிகழ்வு. ஆசிரியரும் மாணவரும் ஒரு சேர வளரும் இடம் வகுப்பறை. வகுப்பறை என்பது பூட்டிய வாய்களும் திறந்த செவிகளும் இருந்த காலகட்டம் என்பது மாறி இருக்கிறது. வகுப்பறைக்குள் உற்சாகம் பிறந்திருக்கிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் இரண்டறக் கலந்து இருவரின் பங் கேற்பும் அதிகரித்திருக்கிறது. பாட போதனையை தாண்டி செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக் கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. செயல்பாடுகளின் மூலம் கற்றல் நடை பெறும் போது மாணவர்களுக்கு புரிதல் அதிகரிக்கிறது. குறிப்பாக வகுப்பறையில் மாணவர்களுக்கான சிறப்பு செயல்பாடுகளை திட்டமிட்டு கொடுத்து வந்தாலே வகுப்பறை உற்சாகம் பெறும்.

மாணவர்கள் பெரும்பாலும் செயல்பாட்டுகளின் மூலமே வெளிப்படு கின்றனர். ஒவ்வொரு மாணவரும் நிறைய திறமைகளைக் கொண்டுள் ளனர். அந்தத் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆசிரி யர் ஒரு முக்கிய புள்ளியாக இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் வெளிப்படுவதற் கான வாய்ப்புகளை ஆசிரியர்தான் உருவாக்கித் தர வேண்டும். வகுப்பறையில் கற்பனை என்பது மிக அவசியமான ஒன்றாகும். கற்பனை என்பது ஒரு சிலருக்கே உரியது.அது மிகவும் அரிதான ஒன்று என்றெல்லாம் நம்மிடம் பல கருத்துக்கள் உண்டு. ஆசிரியர் நினைத்தால் ஒவ்வொரு மாணவரையும் மிகச் சிறந்த கற்பனையாளராக மாற்ற முடியும்.

பயிற்சி அளித்து உருவாக்குவதன் மூலம் அத்திறனைப் பெற முடியும். குழந்தைகள் தனியாக இருக்கும் போது மட்டுமே தோன்றுவது அல்ல கற்பனை. அவர்கள் விளையாடும் போதும், உரையாடும் போதும் கூடிப் பேசும் போதும் கற்பனை உருவாகிறது. இதற்கு ஒரு வகுப்பறை அனுபவத்தை உதாரணமாக சொல்லமுடியும். வகுப்பறையில் மாணவர் களுக்கு பத்து வார்த்தைகள் கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு வார்த்தை. வட்டத்தில் அமர்ந்து முதலில் அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தை குறித்து பேசினார்கள்.

அதனடிப்படையில் அவர்கள் கூறியவாக்கியங்களை வரிசைப்படுத்தினார் கள். அவ்வாறு வரிசைப்படுத்தும் போது ஆங்காங்கே ஒரு சில வார்த்தைகளை இணைத்து மெருகூட்டினார்கள். என்ன ஆச்சரியம் வார்த்தைகளில் இருந்து ஒரு கதை உருவாகிவிட்டது. மிகச் சிறப்பாக இல்லை என்றாலும் கதை கோர்வையாக இருந்தது. ஒருவாக்கியத்திற்கும் மற்றொரு வாக்கியத்திற்கும் இடையே ஒரு பிணைப்பு இருந்தது. தாங்களே ஒருகதையை உருவாக்கிவிட்டோம் என்றுமாணவர்களுக்கு மகிழ்ச்சி. கொடுக் கப்பட்டது என்னவோ 10 வார்த்தைகள் தான். ஆனால் உருவாக்கப்பட்டது ஒரு கதை. கற்பனை இல்லாமல் இது சாத்தியமா?

அவர்களுக்கு வழங்கப்பட்ட வார்த்தைகள் குறித்து ஒரு கற்பனை மனதில் தோன்றியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் வாக்கியம். வாக்கியங்களை இணைத்து சொன்னது கூட அவர்களின் கற்பனை தான். இது மட்டுமல்ல, கதை உருவானபின்னர் தாங்கள் வகுப்பறையில் கற்றுக் கொண்ட காகித மடிப்பு உரு வங்களையும் கதைக்கு பக்கபலமாக இணைத்துக் கொண்டனர். படைப் பாளிகளாக குழந்தைகளை உருவாக்குவதற்கு இம்மாதிரியான செயல்பாடுகள் அவசியம். ஆசிரியரும் மாணவரும் கை கோர்த்து பயணிக்கும் களமாக வகுப்பறைகள் மாறி வருவது மகிழ்ச்சியே. அவர்கள் செய்த மகிழ்ந்த கிரீடத்தை நீங்களும் செய்ய ஆவலாக இருக்கிறீர்களா... இதோ செய்து பாருங்கள்...

- கட்டுரையாளர் ஓரிகாமி பயிற்சியாளர், தலைமை ஆசிரியர் ஆர்.சி.தொடக்கப்பள்ளி, மணியம்பட்டி, விருதுநகர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x