Published : 23 Nov 2023 04:30 AM
Last Updated : 23 Nov 2023 04:30 AM
"இன்று கதை சொல்வேன். ஆனால் இடையில் எதுவுமே பேசக் கூடாது சரியா? அப்படி ஏதாவது பேசினால் கதையும் கிடையாது ஒன்றும் கிடையாது" என்ற கண்டிஷனில் இரவு கதை சொல்லல் ஆரம்பமானது. "சரி அம்மா" என்று கூறி விட்டு கதையைக் கேட்க ஆர்வமானான் அமுதன். "அம்மா ஏன் ரதிக்கு விலங்குகள் பிடிக்கிறது?" என்றான் ஆர்வமாக. "நான் என்ன சொன்னேன் இடையில் கேட்கக்கூடாது என்று தானே சொன்னேன்" என்றார் ராகவி செல்லக் கோபத்தோடு. "சரிங்க அம்மா கேட்கல" என்றான் அமுதன் சோகமாக. மீண்டும் கதையைக் கூற ஆரம்பித்தார் ராகவி.
சற்று நேரத்தில் "அம்மா பாலைவனத்தில் வாழ்கின்ற ஒட்டகத்தி னாலே காடுகளில் வாழ முடியாதா?" என்று கேட்டுவிட்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தபோது கோபமாகத் தெரிய, நாக்கை கடித்து "அய்யய்யோ மறந்துவிட்டேன் அம்மா. நீங்கள் கதை கூறி முடிக்கும் வரை பேசலை" என்று கூறி கைகளை வாயின் மீது வைத்து மூடிக்கொண்டான். "இல்லடா தங்கம் நீ இடையில் பேசினா கதையோட ஃப்ளோ போயி டும். கதையைக் கூறி முடித்தபின் நீ என்ன வேணும்னாலும் கேளு" என்று கூறிவிட்டு மீண்டும் கதைக்குள் பயணித்தார். அப்போது கைபேசி ஒலித்தது. கைபேசியை எடுத்துப் பேச ஆரம்பித்தார் ராகவி. அமுதன் ராகவியின் அருகில் அமர்ந்து அம்மா பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தான்.
அப்போது "அக்கா ஒன்னே ஒன்னுசொல்லுறேன் அப்புறம் மறந்துடும்... நம்ம பக்கத்து வீட்ல" என்று ஆரம்பித்து ராகவி கதை கதையாய் பேசிக் கொண்டிருந்தார். பேசிவிட்டு சற்று நேரத்தில் கைப்பேசியை அணைத்து விட்டு, "கதையை எங்கே விட்டேன்" என்று கேட்டுவிட்டு சற்று நேரம் யோசித்து "ரதிமந்திரக் கிலுகிலுப்பையை ஒரு ஆட்டு ஆட்டினாள்" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே இடையில் "அம்மா ஒரு நிமிஷம்" என்று அமுதன் கூறியவுடன் "என்ன அமுதன் இப்போதான சொன்னேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கதை முடிந்துவிடும் இரு" என்றார் ராகவி.
"அம்மா நீங்க கதையை முடிச்சதுக்கு அப்புறம் என்ன கேட்கணும்னு நினைக்கிறனோ அதுஎனக்கு மறந்தே போயிடுது அம்மா" "ஞாபகம் வைத்திருந்து கேளு. படிக்கிற பையனுக்கு இது கூட ஞாபகத்துல இருக்காதா?" "பெரியம்மாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, நீங்க ஒன்னே ஒன்னு சொல்லிடுறேன். எனக்கு மறந்துடும் அப்படின்னு சொன்னீங்க இல்லையா? பெரியவங்க உங்களுக்கே மறந்துவிடும் எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்" என்று அம்மாவின் கைகளைப் பற்றியபடி கேட்டான் அமுதன்.
அமுதனை வாரி அனணைத்தார் ராகவி. அன்றிலிருந்து கதை சொல் லலை கதையாடலாக மாற்றினார். அன்று தொடங்கிய கதை இன்னும் முடிவுக்கு வரவில்லை. கதை எப்படி முடியும்? அமுதன்தான் பேசிக் கொண்டே கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறானே. பெற்றோர்களோ ஆசிரியர்களோ குழந்தைகளுக்குக் கதை கூறும்போது, கதை கூறுவதை ஒரு வேலையாக கடமையாக அதை முடித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். கதை சொல்வதன் நோக்கம் கதையைத் தாண்டி அது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உரையாடல். இந்த உரையாடலைத் தொலைத்ததினால்தான் பதின் பருவத்தில் ஏதோ ஓரிடத்தில் காதுகள் கிடைக்கும்போது ஏதோ ஓரிடத்தில் தோள்கள் கிடைக்கும்போது சாய்ந்து கொள்கிறார்கள் குழந்தைகள்.
கதையாடல், புதிய தேடலையும் அதன் வழியாக புதியதை உருவாக்கும் மனநிலையையும் ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு கேள்வி கேட்கும் திறனையும் வளர்க்கும். இந்த திறன்தான் நாளை சமூகத்தை நோக்கி கேள்வி கேட்கும் தைரியத்தைக் கொடுக்கும். கதைகளில்இருக்கும் மாயாஜாலங்கள் குழந் தைகளை மகிழ்ச்சிப்படுத்தும். கதை மாந்தர்களாக தங்களைச் சித்தரித்துக் கொண்டு பிரச்சினை களைக் கையாள்வது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சமூகம் மீதான புரிதல், சகஉயிர்கள் மீதான நேசம், பிரியம்,கருணை உண்டாகும். உரையாடலாக மாறும்போதுதான் கதைகள் உயிர்பெறும்.
- கட்டுரையாளர் எழுத்தாளர், கதை சொல்லி, பழையபாளையம், ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT