Last Updated : 21 Nov, 2023 04:30 AM

 

Published : 21 Nov 2023 04:30 AM
Last Updated : 21 Nov 2023 04:30 AM

கல்வி பேசுகிறேன்...

என் இனிய கற்போரே! ஆற்றல்மிகு கற்பிப்போரே! உங்கள் கல்வி பேசுகிறேன். கல்வியைப் பெற்றிட பெற்றோரும், மாணவரும், படும் இன்னல்களும், போதித்திட ஆசான்கள் படும் கஷ்டங்களும் சமீபகாலமாக எல்லை மீறிச் செல்வதை பார்க்கும் போது உங்கள் பாதை மாறிய பயணம் என்னை வேதனைக்கு உள்ளாக்குகிறது. கல்வி என்பது என்ன? ஒவ் வொருவருக்குள்ளும் இருக்கும் அறியாமையை அகற்றி அறிவை புகட்டும் ஒரு கருவி தானே. ஆனால் கல்வியை பெறுவதிலே அதிகரித்து வரும் அறியாமையை எண்ணும் போது மானுடச் சிந்தனைகள் திசை மாறிச் செல்வதை உணர முடிகிறது. கண்களை விற்று சித்திரம் வாங்கு வது எத்தகைய அறியாமையோ அதுவே உங்களின் நிலையும்.

ஏன் இந்த வேகம்? ஏன் இந்த அவசரம்? ஏன் இந்த குறுக்கு வழிகள்? கல்வியின் மூலமாக உங்களின் தேவைகளை அடைய முயற்சிப்பது சிறந்த செயல்தான். இருப்பினும் மக்கள் தொகை பெருக்கம் தவிர்க்க இயலாததாகவே உள்ளது. அதற்கு ஏற்ப தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி, இருப்பதை பகிர்ந்து வாழப் பழகுங்கள். கல்வி என்பது காசு கொடுத்து அடைவது அல்ல. பட்டங்களும் பதவிகளும் திறமையினால் பெறுவதே ஒழிய குறுக்கு வழியில் அடைவதுஅல்ல.

இது கல்வியின் ஆணி வேரிலே வெந்நீர் ஊற்றுவது போன்றது. பசி, தாகம் போன்று கல்வி என்பது இயல்பாக உருவெடுக்க வேண்டியது. கண்களால் பார்த்தும், காதுகளால் கேட்டும் மனதுக்குள் அசைபோடும் போது புதிய கருத்தாக உருவெடுப்பதே கல்வி. உற்று நோக்கியும் உற்று கவனித்தும் உணர்ந்து கொண்டவைகளை புதிய சிந்தனைகளாக வெளிப்படுத்துவதே கல்வி. உண்ட உணவு வயிற்றுக்குள் செரித்து ஆற்றலாக வெளிப்படுவது வளர்ச்சி. ஏதோ காரணத்தால் உள்ளே சென்ற உணவு அப்படியே வெளியேறுவது வீழ்ச்சி.

அதுபோல் ஏதோ ஒன்றை படித்து நினைவாற்றல் துணைகொண்டு அதை அப்படியே வெளிப்படுத்தி மதிப்பெண் பெற்றும் பட்டமும் பதவியும் பெறுவது சிறந்தகல்வி ஆகாது. மாறாக கற்றதைபயன்படுத்துவதும் வெளிப்படுத்து வதும் கற்றதிலிருந்து புதியனவற்றை உருவாக்குவதுமே கல்வி. தாய் மொழியில் புலமை பெறுவதும் பிற மொழியில் அறிவைப் பெறுவதும் கல்விக்கு அடிப்படை. "எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" என்பதற்கிணங்க கணித அறிவும் அடிப்படை தேவை. மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் எழுதுவதும் அல்ல கல்வி.மனதில் உள்வாங்கி, உணர்ந்து, புரிந்து கொண்டு, வெளிப்படுத்துவது கல்வி.

குளத்தில் ஒரு கல்லை எறிந்தால் விழுந்த இடத்தில் தொடங்கி வட்டமாக விரிந்து விரிந்துகுளம் முழுவதும் பரவுவதைப் போல அறிவு என்பது தனிமனிதன், குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என்று பரந்து விரிந்ததாக இருக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் தொடர் பயணமாக இருக்க வேண்டும், இயற்கைக்கும், சக மனிதர்களுக்கும், பிற உயிரினத்திற்கும் பாலமாக வாழ சிந்திப்பதே அறிவு. படித்து பட்டம் பெற்று பொருளீட்டுவதற்கான கருவி அல்ல கல்வி. மனிதனை ஆழமாக சிந்திக்கவும் அழுத்தமாக செயல்படுத்தவும் வழிகாட்டுவதே கல்வி. ஏட்டுக்கல்வி அவசியமே. ஆனால் ஈட்டிய பொருளைக் கொண்டு பொருட்பட வாழ ஏற்றகல்வி உனக்குள் மட்டுமே உள்ளதுஎன்பதை உணர்த்துவதே உண்மையான கல்வி. சரி, கற்போரே விடைபெறுகிறேன். கற்பிப்போரே விடைபெறு கிறேன்.

- கட்டுரையாளர் எழுத்தாளர், மயிலாடுதுறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x