Published : 17 Nov 2023 04:22 AM
Last Updated : 17 Nov 2023 04:22 AM
இந்தப் புத்தகத்தில், அழகிரிசாமியும் ஜீம்பூம்பா மரமும் தொடங்கி சிங்கத்தைப் பயமுறுத்திய அலமேலு வரை மொத்தம் 16 கதைகள். முதல் கதையே கஞ்சன் ஒருவரைப் பற்றிய கதை. அந்தக் கதையில் ஜீம்பூம்பா மரம் கேட்டது எல்லாம் கொடுக்கும். குழந்தைகளின் கற்பனைக்கு விருந்தாகும் கதை. விருந்துக்கு அழைத்த நண்பர்கள் கதையில் தவளையும் நண்டும் சேர்ந்து கொண்டு மீனைப் பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது. மீனை விருந்துக்கு அழைத்தது. ஆனால் மீன் இருவர் வீட்டுக்கு ஒரே நேரத்தில் வர முடியாது. ஆதலால், நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றது. அதன்பிறகு என்ன நடந்தது?
பல் தேய்க்காத பலசாலி கதையில், காட்டு ராஜா சிங்கம் பல் தேய்க்காத சோம்பேறி. தினமும் ஒருவர் வந்து பல் தேய்த்துவிட வேண்டும் என்று சிங்க ராஜா கட்டளை இடுகிறார். முதல் நாள் முயல் குட்டி சிங்க ராஜாவுக்கு பல் தேய்த்துவிடக் கிளம்புகிறது. முயல் குட்டி என்ன செய்தது? சிங்கராஜாவுக்கு பல் துலக்கிவிட்டதா? பழைய பாட்டியும் புதுவடையும் கதையில், உழைப்பை முன்னிறுத்தி இலவசம் வேண்டாம் என்று கூறும் ஒரு காகமாகவும், நான் தந்திரமானவன் அல்ல. எனக்கு வேலையைக் கொடுங்கள். அதன்பிறகு நான் உங்களிடம் வடையைப் பெற்றுக் கொள்கிறேன் என்று நரி கூறுவதும் புதிய சிந்தனை.
கட்டை விரலின் கதை மிக முக்கியமானது. புராணங்களை இதிகாசங்களைப் பற்றிய பார்வைக் கோணத்தை மாற்றுகிறது. புத்தகத்தின் தலைப்பில் வந்திருக்கும் கதையில், தினமும் கதை சொல்லும் அம்மா ஒரு நாள் குழந்தையிடம் கதை கேட்கிறார். அந்தக் குழந்தை சொல்லும் கதைதான் முயல்ஆமைக் கதை. ஆனால் எல்லோரும் அறிந்த முயல் ஆமை கதை இல்லை. இதுபோல புத்தகம் முழுவதும் சிந்திக்க வைக்கும் கதைகளாக இருக்கின்றன. 2021-ம்ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது பெற்ற புத்தகம். இப்புத்தகத்தை எழுத்தாளர் மு.முருகேஷ் எழுதி, அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், தற்போது சென்னையில் பத்திரிகையாளராக பணியாற்றுகிறார்.
- கட்டுரையாளர் எழுத்தாளர், கதை சொல்லி, பழைபாளையம், ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT