Published : 17 Nov 2023 04:25 AM
Last Updated : 17 Nov 2023 04:25 AM
சமீபத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்துள்ளனர். சென்ற மாதம் 50 மாணவர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு சென்று வந்தனர். இதோ இந்த மாதம் இன்னும் 50 பேர் ஜப்பானுக்கும் தென்கொரியாவுக்கும் சென்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தவும் அதை ஊக்குவித்து வளர்க்கவும் பல்வேறு முயற்சிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக சென்ற ஆண்டு முதல் ‘கலைத் திருவிழா’, ‘உலகப் படங்கள் திரையிடல்' நடைபெறுகிறது. இவை போக மாணவர்களிடையே கணிதம் மற்றும் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பள்ளிகள்தோறும் வானவில் மன்றம் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கும் வெளிநாடு சுற்றுலாவுக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது.
கலைத் திருவிழாவில் நடனம், பேச்சு, கவிதை, சிற்பம், நாடகம் முதலான பல்வேறு கவின் கலைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் பள்ளி அளவில் தொடங்கி, பிறகு வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் இறுதியாக மாநில அளவிலும் நடைபெறுகின்றன. இதில் வெல்லும் மாணவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு பரிசாக வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு போட்டிகளில் வென்ற 50 மாணவர்கள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இப்போது அடுத்த மாணவர் குழுஜப்பானுக்குச் சென்றுள்ளது. இந்தமாணவர்கள் எடுத்த குறும்படங்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்தஜப்பான் சுற்றுலா. கடந்த ஓராண்டாக மாணவர்களின் கலை ரசனையையும் திரைத்துறை குறித்த அறிவை வளர்க்கவும் ‘உலகப் படங்கள் திரையிடல்’ நிகழ்ச்சி தமிழக அரசு பள்ளிகளில் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இத்திரையிடலில் உலகெங்கும் வெளியான பிரபலமான சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, அதுகுறித்து சினிமாஆர்வலர்கள் உரைகளும் நிகழ்த்துகின்றனர். திரைப்படம் குறித்து மாணவர்களிடையே விவாதமும் நடத்தப்படுகிறது. இத்திரைப்படங்களை மாணவர்கள் பார்ப்பதோடு, அதுகுறித்த விமர்சனங்களை கட்டுரையாகவும், பேச்சாகவும், ஓவியமாகவும், சுவரொட்டியாகவும் இன்னும் பல்வேறு கலை வடிவங்களிலும் வெளிப்படுத்தலாம். இதில் சிறந்த விமர்சனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுகின்றன. இப்படி பரிசு பெற்ற மாணவர்கள் இடையே வட்டார அளவிலும் மாநில அளவிலும் திரையிடல் சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் வென்ற மாணவர்களுக்கு குறும்படங்கள் எடுப்பது குறித்த மாநில அளவிலான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பயின்ற மாணவர்கள் குறும்படங்கள் எடுத்தனர். அந்தக் குறும்படங்களில் சிறந்த படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதோடு, அந்த 25 மாணவர்கள்தான் தற்போது ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆறு நாட்கள் ஜப்பானில் தங்கி அங்குள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிடவுள்ளனர். இவர்களுக்குப் பிறகு தென் கொரியாவுக்கு ஒரு மாணவர் குழு செல்லவுள்ளது. இவர்கள் பள்ளிக் கல்வித் துறையின் வானவில் மன்றப் போட்டிகளில் பங்குபெற்று பரிசுபெற்றவர்கள்.
வானவில் மன்றம் மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான சிந்தனையைத் தோற்றுவிக்கவும், எதையும் அறிவியலின் கண்கொண்டு ஆராய்ந்து அணுக மாணவர்களைப் பழக்கவும், அறிவியல், கணிதம் தொடர்பான புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி ஆர்வத்தை உண்டாக்கவும் உருவாக்கப்பட்டது. இதில், அறிவியல், கணிதம் சார்ந்து பல்வேறு கருத்தரங்குகள், பயிற்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வென்ற 25 மாணவர்கள்தான் இப்போது தென்கொரியாவுக்குச் சுற்றுலா செல்கின்றனர். இப்படி வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தேவையான குளிர்கால உடைகள், காலணிகள், பைகள் முதலானவற்றை அரசே வழங்குகிறது. இரண்டு அரசு அலுவலர்களும் ஆறு ஆசிரியர்களும் இவர்களுக்குத் துணையாகச் செல்கின்றனர். இது ஒரு நல்ல தொடக்கமாகும். இது மாணவர்களிடையே வகுப்பறைகளைத் தாண்டிபல்வேறு திறன்களில் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, பல்வேறு நாடுகள்பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கிஇருப்பது போற்றத்தக்கது.
- கட்டுரையாளர் இதழியலாளர், எழுத்தாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT