Published : 14 Nov 2023 04:31 AM
Last Updated : 14 Nov 2023 04:31 AM
மழலைச் சொல்லுக்கு பஞ்சம் இல்லாத பள்ளியில் குழந்தைகளை கொண்டாடுவதில் கோடான கோடி இன்பம். குறு குறுக்கும் கண்களையும், குவிந்த தாமரையின் கன்னங்களில் கள்ளமில்லாச் சிரிப்பும் கொண்ட குழந்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது. அந்த மழலைகள் தந்த நினைவுகளை குழந்தைகள் தினத்தையொட்டி நினைவுகூர்வதில் மனமகிழ்கின்றேன். பள்ளிக்கு முதன் முதலில் காலடி எடுத்து வைக்கும் குழந்தைகள் முதல் பட்டம் பெற்று பல்வேறு பணிகளில் இருப்பவர்கள் வரை நேரில் பார்க்கும் போதும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போதும் "நல்லா இருக்கீங்களா டீச்சர்" என்று உள்ளார்ந்த அன்போடு கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
தொடக்கப் பள்ளியில் எப்போதும் மழலைகளின் சத்தம் கேட்டபடியே இருக்கும். அதனால் எரிச்சலடையும் ஆசிரியர்களும் உண்டு. ஆனால், அந்த சத்தத்தை கேட்டுக் கேட்டுப் பழகி ஆனந்தமடைபவர்கள் ஏராளம். வகுப்பறையில் சற்று சோர்வாக இருப்பதைப் பார்த்தால் தங்களது மழலை மொழியாலும் கள்ளம் கபடமற்ற சிரிப்பாலும் புத்துணர்வு பெறச் செய்துவிடுவார்கள். புத்தகத்தையோ அல்லது கரும்பலகையையோ கஷ்டப்பட்டு பார்ப்பதைக் கவனித்தால் எனது கைப்பையில் இருந்து கண்ணாடியை எடுத்துவந்து போட்டுவிடும் குழந்தையின் உற்று நோக்கலை என்னவென்று சொல்வது!
குட்டீஸ்களின் அன்பு: அன்புக்கு வானமே எல்லை என்பார்கள். குட்டீஸ்களின் அன்பும் அப்படித்தான். ஆசிரியர்களிடம் நிறைய நேரம் செலவிடுவதாலோ என்னவோ வீட்டுக்குப் போனதும் எங்கள் டீச்சர் இந்த கலர் சேலை கட்டியிருந்தாங்க... இப்படி சிமிக்கி போட்டிருந்தாங்க... ஆப்பிள் வாங்கி வந்து அதுபற்றி சொல்லித் தந்தாங்க... அதைச் சாப்பிடவும் கொடுத்தார்கள் என்று பெற்றோரிடம் பெருமையாகப் பேசுவது பேரின்பம்.
வீட்டில் அம்மா செய்யும் பலகாரம் அல்லது பெட்டிக் கடையில் வாங்கிய தின்பண்டம் என எதுவானாலும் உங்களுக்கும் தான் கொண்டு வந்திருக்கிறேன் என்று வலுக்கட்டாயமாக திணிக்கும் போது வாயடைத்து நின்றதுண்டு. நான் படித்து, வேலைக்குப் போனதும் டீச்சருக்கு கார் வாங்கி தருவேன். பெரிய வீடு கட்டித் தாறேன் என்று சொல்லும் குழந்தைகளின் அன்பை சொல்வதற்கு வார்த்தையே இல்லை.
தாயின் பரிவு: அனைத்து குழந்தைகளும் பள்ளியில் தான் சாப்பிடுவார்கள். சாப்பிடும் முன் புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என எதை எடுத்து வந்திருந்தாலும் டீச்சருக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஓடி வந்து கொடுக்கையில் ஆளுக்கொரு வாய் வாங்கிக் கொள்வேன். யாரிடமாவது வாங்காமல் விட்டுவிட்டால் அந்த குழந்தையின் முகம் தொட்டால் சிணுங்கி செடி போல உடனே வாடிவிடும். அதைப் பார்த்தால் மனம் தாங்காது. இப்படி வாஞ்சையோடு சாதத்தை கொடுப்பதும், வாயில் ஊட்டி விடுவதும் தாயை நினைவுபடுத்தும் மறக்க முடியாத அனுபவம்.
என்றும் எங்கள் ஆசான்: எங்களுக்கு உடல் நிலை சரியில்லாவிட்டால் வீட்டுக்குப் போய் தூங்கச் சொல்றீங்க. நீங்க மட்டும் உடம்புக்கு முடியாவிட்டாலும் வகுப்பிலேயே இருக்கீங்க. நீங்களும் வீட்டுக்குப் போய் தூங்குங்க! நாங்கள் வகுப்பறையை பார்த்துக் கொள்கிறோம் என வெள்ளந்தியாக சொல்வார்கள். இந்த உணர்வு சுகமானது. உங்களை அம்மா, அத்தை, சித்தி, அக்கா என உறவு சொல்லி அழைக்கட்டுமா என்று கேட்பார்கள். சரி என்றதும் அடுத்த நொடியே உறவு சொல்லி அழைத்துவிடுவார்கள். பாசக்கார குழந்தைகள் இப்படி அடிக்கடி பரவசத்தில் ஆழ்த்துவதும் உண்டு.
இயற்கை உபாதையை அடக்க முடியாமல் இருந்த இடத்திலேயே கழித்துவிடும்போது கோபம் வரத்தான் செய்யும். ஒருவருக்கொருவர் சண்டையிடுவது, அடித்துக் கொள்வது, நோட்டு, புத்தகத்தை கிழித்துவிடுவது போன்ற செயல்கள் ஆத்திரமூட்டும். இருந்தாலும் நம்ம குழந்தையாக இருந்தால் என்ன செய்வோம் என மனதில் கேட்டுக் கொண்டு கோபத்தை ஆற்றுப்படுத்தும் நிகழ்வும் அரங்கேறும்.
வகுப்பில் அமர்ந்திருக்கும்போது, விளையாட செல்லும்போது, சாப்பிடும்போது என பல நேரங்களில் குழந்தைகளின் குறும்புகள், சேட்டைகள், அழுகை, கோபம் என பல காட்சிகளைக் காண்பது நவரசம். இதுபோல பல மனநிறைவான நிகழ்வுகளைப் பட்டியல் போடலாம். இந்த வாய்ப்பும், வசந்தமும் என்னைப் போன்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கே கிடைத்த வரம்.
- கட்டுரையாளர் இடைநிலை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முத்துநாகையாபுரம், சேடபட்டி ஒன்றியம், மதுரை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT