Published : 07 Nov 2023 04:30 AM
Last Updated : 07 Nov 2023 04:30 AM
ஒருவனை தண்டிப்பதும் பாவம். தண்டனை கொடுப்பதும் பாவம். ஆம், ஆனால் தண்டனை என்ற ஒன்று இல்லை என்றால். மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பாம்பு படமெடுப்பதற்கு முன் எல்லோரும் அடித்தார்களாம். படமெடுத்ததும் மக்கள் அஞ்சி ஓடினார்களாம். மக்களைக் கண்காணிக்கவும் வேண்டும். தவறு செய்தால் தண்டிக்கவும் வேண்டும் என்று மந்திரி கூற அரசன் மறுத்தார்.
ஒரு சோதனை செய்தார்கள். ஊர் மக்களுக்கு கோவில் அபிஷே கத்திற்காக வீட்டிற்கு ஒருசொம்பு தண்ணீர் ஊற்றாத பால் கொண்டு வந்து ஊற்ற வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. அதன்படி மக்களும் அண்டாவில் பால் ஊற்றினார்கள். பின்னர் பால் பாத்திரத்தை திறந்து பார்த்தால் அதில் தண்ணீர் தான் இருந்தது.
காரணம் ஒவ்வொருவரும் அண்டா பாலிலே ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றினால் தெரியவா போகிறது. அதுவும் நான் தான் என்று தெரியவா போகிறது என்று நினைத்து பாலுக்குப் பதில் தண்ணீர் தான் மக்கள் ஊற்றியுள்ளனர் என்பதை மன்னன் உணர்ந்தான்.
கண்ட இடங்களில் எச்சில் துப் பினால், குப்பை போட்டால் தண்டனை என்று கூறினான் மன்னன். உடனே துப்புரவுத் தொழிலாளர் தூய்மை செய்யாமலே தெருவும் நகரமும் தூய்மையானது. அரசன் நன்கு உணர்ந்தான். மக்களைத் திருத்தவும் நல்வழிப்படுத்தவும் தேவை கண் காணிப்பும், தண்டனையும் தான்.
எப்படி திருத்தலாம்? - பள்ளியிலும் ஒழுக்கம், படிப்பில் கவனக்குறைவு என்றால் சாம, பேத, தான, தண்டம் என்ற நால்வகை முறையில் தான் திருத்த வேண்டும். ஆசிரியர் மாணவனை அடித்துத் திருத்தக்கூடாது என்றால் அவன் எப்போது திருந்துவான். அப்படி அவன் திருத்தப்படவில்லை என்றால் காவல் துறையினரால் லத்தி அடி தான் வாங்குவான், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
பெற்றோர், ஆசிரியர், தாத்தா, பாட்டி, உற்றார். உறவினர் என எல்லோரிடமும் அன்பாகப் பேசிப் பழக சிறுவர் சிறுமியருக்கு இளமை யிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் பெற்றோர், ஆசிரியர் அடித்தாலும் திட்டினாலும் அதைத் தாங்கிக் கொண்டு சகித்துக் கொள்ளும் தன்மையும் பிள்ளைகளுக்கு அவசியம். ஏனென்றால் அடி வாங்காமல், திட்டு வாங்காமல் இருந்து பெரிய பிள்ளையானால் எதையும் தாங்கிக் கொள்ளும் மனசு இருக்காது.
யானையின் பழக்கம்: காட்டில் தாய் யானை குட்டி யானையை பலம் உண்டாக்க பந்துபோல் தென்னை மரத்தில் தூக்கிப் போட்டுப் பழக்கப்படுத்துமாம். சாப்பிடும் போது நாவைப் பல் கடித்துவிட்டது என்றால் பல்லைப் பிடுங்குவோமா? நடக்கும் போது கால் இடறி விழுந்தால் கால் மேல் கோபித்து கொண்டு அடிப்போமோ? இல்லையே... அதையெல்லாம் எப்படி தாங்கிக் கொள்கிறோம். அதுபோல எதையும் தாங்கிக் கொள்ளப் பழக வேண்டும்.
பத்துமாதம் சுமந்து பெற்ற தாய் உன்னை அடித்தார், திட்டினார் என்பதற்காகவும் அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் ஆசிரியர் உன்னை அடித்தார் என்பதற்காகவும் குறைவான மதிப்பெண் பெற்றுவிட்டேன் என்பதற்காகவும் தற்கொலை செய்துகொள்வது முட்டாள்தனம் உயிரைமாய்த்துக் கொள்வதற்கு உனக்கு உரிமை இல்லை. இந்த உடல் மீண்டும் ஒரு முறை பிறக்கப் போவதில்லை.
இருக்கும் வரை முடிந்த வரை நல்லது செய்வோம் என்று நினைத்து வாழ்வதற்கு பள்ளியில் நீதிபோதனை கற்றுத்தர வேண்டும். மனதில் உறுதி வேண்டும் என்று பல கதைகள் பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைத்தல் அவசியம். இறைவன் எல்லோர் மனங்களிலும் உள்ளான்.
அவன் காற்றாகவும் உள்ளதால், யாரும் அறியாமல் தவறுசெய்தால் நீ கடுமையாகத் தண்டிக்கப்படுவாய் என்ற அச்சுறுத்தலும் வேண்டும்.எனவே, தண்டனை என்ற ஒன்றும்,கூடவே கண்காணிப்பு என்ற ஒன்றும் இருந்தால்தான் உலகில் நேர்மையும் உண்மையான நீதியும் கிடைக் கும். அமைதியும் உண்டாகும்.
- கட்டுரையாளர், ஓய்வுபெற்ற ஆசிரியை, கும்பகோணம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT