Published : 03 Nov 2023 04:30 AM
Last Updated : 03 Nov 2023 04:30 AM
டிபன் பாக்ஸ் எடுத்துட்டியா? சட்டுனு சாப்பிடு, ஷூ எங்க? சாக்ஸ் போடு, டைரி சைன் வாங்கினியா? இன்னைக்காவது தண்ணியா முழுசா குடிச்சிட்டு வாடா சச்சினு என்ற காலை நேர பரபரப்போடு அன்றைய நாள் ஆரம்பித்தது. சச்சினை பள்ளிக்கு அனுப்பிவிட்டு சோபாவில் அமர்ந்தேன்.
நாளை ஒரு தனியார் பள்ளி யிலிருந்து நூலகத்தைப் பார்வையிட குழந்தைகள் வருகிறார்கள் வந்துடு என்று ஈரோடு நவீன நூலகத்தின் நூலகர் ஷீலா அக்கா கைபேசியில் கூறினார். அன்று காலை முதல் மாலை வரை கதைத் தேர்வு பயிற்சி என்று ஓடியது. இரவு படுக்கையில் எனது மகன் சச்சினுக்கு கதையைச் சொல்ல ஆரம்பித்தேன் பாடலாக பொம்மையும் வைத்து. சச்சினுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.
ஆடும்வரை ஆடுவோம்: நூலகத்தில் நிகழ்வு ஆரம்பமா னது. பொதுவாக பாடலோடு ஆடல் ஆரம்பிக்கும் போது அந்த அறைக்குள் இருக்கும் அனைவரும் ஆட வேண்டும் என்று கூறி விடுவேன். ஒருவர் ஆடவில்லை என்றாலும் அவர் ஆடும் வரை நாம் ஆடிக்கொண்டே இருப்போம் என்று கூறுவேன். விடுவார்களா குழந்தைகள் எல்லோரையும் கெஞ்சியாவது ஆட வைத்து விடுவார்கள். அன்றும் அப்படித்தான் ஆசிரியர்கள் ஆடு வதைப் பார்த்த குழந்தைகளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி என்று கைதட்டி ஹேஹே ன்னு குதித்தார்கள்.
ஆட மறுத்த ஓட்டுநர்: அதில் ஒரு ஓட்டுநர் ஆட மறுத்துவிட குழந்தைகள் எவ்வளவோ கெஞ்சியும் ஆடவில்லை. முடிவாக ஒரு குழந்தை அப்பா ப்ளீஸ் வா எனக்காக என்று கெஞ்சியது. அந்தக் குழந்தை கூறியவுடன் அவர் ஆட ஆரம்பித்துவிட்டார். அது அவ ருடைய குழந்தை.
பொம்மைகளோடான கதை அவர்களைப் பெரிதும் ஈர்த்தது. நிகழ்வு முடிந்தது. குழந்தைகளோடு வாகனத்திற்கு ஒருவராக வந்திருந்த வயதான பெண்கள் மூன்று பேரும் என்னிடம் வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு "ராசாத்தி நீநல்லா இருக்கணும். தாயி எங்களையே ஆடவச்சுட்டியே நாங்க எப்ப ஆடனோம்னு எங்களுக்கு நினைவிலேயே இல்லை. வீடு வேலை கொழந்த குட்டிகளைப் பாக்கிறது. பேரன் பேத்திகளப் பாக்கிறது இப்படியே காலம் போயிடுச்சு"என்று கைகளை என் முகத்திற்கு அருகில் கொண்டு வந்து நெட்டி முறித்தார்கள்.
ஓட்டுநர்கள் கிளம்பும்போது ஆட மறுத்தவர் என்னைப் பார்த்துப் புன்சிரிப்போடு கிளம்பினார். குழந்தைகள் பிரிய மனமின்றி கைகளை அசைத்து முத்தங்களை என் கன்னங்களிலும் காற்றிலும் பறக்க விட்டுக் கொண்டே சென்றார்கள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு நூலகத்திற்கு ஒரு பெண்மணி வந் திருக்கிறார் "இரண்டு நாட்களுக்கு முன் பள்ளியிலிருந்து குழந்தைகள் வந்தார்களா? அவர்களிடம் இங்கே என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டபோது ஷீலா அக்கா "கதைகள் சொன்னோம் பாடல்கள் பாடினோம் ஆடினோம் விளையாடினோம்" என்றாராம் சற்றே பதட்டத்தோடு.
உடனே அந்தப் பெண்மணி சிரித்தபடி ஷீலா அக்காவைக் கட்டி அணைத்து "கடந்த இரண்டு நாட்களாக என்குழந்தைகள் கதைகளைச் சொல்லியும் பாடல்களைப் பாடியும் மகிழ்ந்ததோடு காலையில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தண்ணீரும் உணவும் வைக்க வேண்டும் அம்மா நீங்களும் வாருங்கள் என்று எங்களையும் அழைத்துக் கொண்டு வாசலிலும் மொட்டை மாடியிலும் தண்ணீரும் உணவும் வைத்தார்கள்" என்று அந்தப் பெண்மணி கூறினாராம்.
இருப்புக்கும் வாழ்வுக்குமான இடைவெளிகளை இட்டு நிரப்புகிற மகத்தான பணியை காலந் தோறும் செய்துகொண்டே இருக் கின்றன கதைகள். மீண்டும் கதைப்போம்.
- எழுத்தாளர், கதைசொல்லி ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT