Published : 31 Oct 2023 04:30 AM
Last Updated : 31 Oct 2023 04:30 AM
மாணவர்களின் கல்வி பயணத்தில் பலவிதமான வாகனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 1980, 1990-கள் வரை பயின்றவர்கள் மனதில் அந்தப் பயணம் காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுக்களாக மலரும் நினைவுகளாக நிலைத்து நிற்கிறது. அந்தப் பயணம் பல்வேறு நினைவுகளை மட்டும் சுமந்து வரவில்லை. ஏராளமான படிப்பினையையும் கொடுத்துள்ளது.
அப்போதெல்லாம் பெரிய கிராமங் களில் தான் அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளி அல்லது தனியார் பள்ளிகள் செயல்பட்டன. நூற்றுக்கணக்கான குக்கிராமங்களில் போக்குவரத்து வசதி கிடையாது. அதனால் பெரும்பாலான மாணவ, மாணவியருக்கு நடைப்பயணம்தான்.
காலாற நடந்து கையில் ஒரு தூக்குவாளி (சாப்பாட்டு பாத்திரம்), மஞ்சள் பையோடு சக மாணவனோடு, மாணவியோடு தோள் மேல் கை போட்டு நடந்து செல்லும்போது கிடைத்த மகிழ்ச்சியே அலாதிதான். பள்ளிக்குப் போய் வரும் வழியெல்லாம் நண்பர்களோடு விளையாடி, சண்டை போட்டு, இயற்கையை ரசித்தபடி பள்ளிக்கு போய் படித்து வந்த அந்தக் காலம் ஒரு பொற்காலம்.
ஆரம்பக் கல்வியைத் தாண்டி அடுத்து மேலே படிக்க வேண்டும் என்றால் வெளியூர் சென்றால் மட்டுமே முடியும். சிறிய நகரங்களில்தான் பெரிய பள்ளிக்கூடங்கள் இருந்தன. அதனால் நீண்ட தூரம் கால் கடுக்க நடந்த வர்களும் உண்டு. வசதியானவர்கள் மாட்டு வண்டி, வில் வண்டி, குதிரைவண்டி என்று வீதியில் மணியோசையோடு வலம் வந்த மாணவர்களும் இருந்தார்கள். அதுமட்டுமல்லாமல்மூன்று சக்கர சைக்கிளில் பணம்கொடுத்து பள்ளிக்கு வந்து சென்றவர்களும் உண்டு.
வீட்டில் வாங்கித்தந்த பழைய சைக்கிளோ அல்லது புத்தம் புது சைக்கிளோ அதை விடுமுறை நாளில் தண்ணீர் ஊற்றி கழுவி நன்றாக துடைத்து பாதுகாப்பாக வைத்திருந்த அனுபவத்தை இப்போதும் நினைவுகூர்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பள்ளிக்கு நடந்து சென்ற காலங்களில் காலையில் எழுந்து, புறப்பட்டு உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்றதால் நேரம் தவறாமை என்ற நற்பண்பு இயல்பாகவே வந்து சேர்ந்தது. சைக்கிளில் சென்ற காலங்களில் மழைக்காலங்களில் லாவகமாக சைக்கிளை ஓட்டிக் கற்றுக் கொள்ள முடிந்தது. நடந்தும், சைக்கிளிலும் பள்ளிக்கு சென்று வந்த போது சக மாணவர்களுடன் ஏற்பட்ட சண்டையும் சமாதானமும் நட்பின் ஆழத்தையும், ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும் வளர்ந் தது. இப்படிப் பல பண்புகள் இயற் கையாகவே வளர இந்தப் பயணம் வழிவகுத்தது.
மிதமான வேகத்தில் செல்லும் சைக்கிள்கள் மிகப்பெரிய அளவில் இல்லாவிட்டாலும் பள்ளிக்கு வந்து செல்லும் பயணத்தில் அன்று மட்டும் அல்ல இன்றும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வசதி படைத்தவருக்கு மட்டும் வசமாகியிருந்த சைக்கிள் வறியவர்க்கும் கிடைக்க அரசு வழி ஏற்படுத்தித் தந்தது.
சைக்கிளில் அதிகம் பயன்படுத் தப்பட்ட காலத்திலும் பணக்கார வீட்டுக் குழந்தைகளின் ஸ்கூட்டர் பயணமும் பரிணமித்தது. மகிழ்ச்சி யோடு கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனநிறைவான கார் பயணமும் அவ்வப்போது அலங்காரமாய் வந்து சென்றது. இப்போது ஏழை முதல் பணக் காரர்கள் வரை பேருந்து பயணம் என்பது பெரிய இடத்தைப் பிடித்து பெருமையாக நிலைத்து நிற்கிறது.
மாநிலத்திற்கு உள்ளேயும் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கல்வியைத் தொடர தொல்லை இல்லா தொடர் வண்டி பயணமும், பறந்துபட்ட உலகில் பன்முகத்திறமையோடு பட்டம் பல பெறுவதற்காக பன்னாட்டு பல்கலைக்கழகங்களை நோக்கி வானில் ஒரு உலாவாக வானூர்தி பயணமும் காலத்திற்கு ஏற்றார் போல கல்வியும் பயணமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்தான்.
தொலைநோக்கோடு பாதைகள் மாறினாலும் கல்விப் பயணத்தில் சைக்கிள் முதல் விமானம் வரை யிலான வாகனங்களின் பங்கு அளப்பறியது. தொட்டுத் தொடரும் இந்தப் பயண அனுபவத்தை அந்தகால மாணவர்கள் முதல் இக்கால மாணவர்கள் வரை புத்தகமாகவோ, சமூக வலைத்தளங்களிலோ பதிவிட்டால் வருங்கால தலைமுறை யினருக்கு அவை நல்ல வழிகாட்டியாக அமையும்.
- கட்டுரையாளர்: ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முத்துநாகையாபுரம், சேடப்பட்டி, மதுரை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT