Published : 26 Oct 2023 04:30 AM
Last Updated : 26 Oct 2023 04:30 AM
இன்றைய இளையோர்களும் மாண வர்களும் தான் எதிர்காலத்தில், தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அரசாங்கம் போன்றவற்றின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கப் போகிறார்கள் என்பது ஒரு பேருண்மை. அப்பொறுப்பில், திறம்படச் செயல்படப் போகிறவர்களில் சிலர் மட்டும் தான் பிறப்பியல்பாகவே தலைமைப் பண்பைப் பெற்றவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள், அத்தகுதிக்குத் தேவையான பண்புகளை வளர்த்துக் கொண்டாக வேண்டும். இல்லையெனில், தலைமைப் பொறுப்பை அடைய முடியாது. நல்வாய்ப்பாக அடைந்தாலும், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் அப்பொறுப்பில் சிறப்படைய முடியாமல் தோல்வியடைவார்கள் என்பதும் மெய்.
நம் நாட்டின் ‘சந்திராயன் 3’ விண்கலம் நிலவில் கால்பதித்த நிகழ்வு, நேற்று ஆரம்பித்து இன்று வெற்றியடைந்த நிகழ்வல்ல. நம் விண்வெளி ஆராய்ச்சி மையம் 1960களில் ஆரம்பிக்கப்பட்டது முதல்படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய உயர்வை அடைந்துள்ளோம்.
தலைமை பண்பு: அதேபோல் தான், தலைமைப் பண்பு நினைத்தவுடனோ விரும்பிய வுடனோ அடைந்துவிடக் கூடியதல்ல. தேவையானவற்றைக் கற்றுக்கொள்வதையும், கற்றவற்றைப் பயன்படுத்துவதையும், வாழ்வியலாக்கிக் கொண்ட பின்னர் தான் தலைமைத் துவத்தில் சிறக்க முடியும்.
உங்களிடம் தலைமைத்துவத்திற்கு தேவையான பண்புகள் உள்ளனவா என்பது அதற்கான சூழல் ஏற்படும்போது தான் உங்களாலும் மற்றவர்களாலும் அறிந்துணர்ந்து கொள்ள முடியும்.
உங்கள் எண்ணங்களின் தன்மை, பேசிக்கொண்டிருக்கும் சொற்கள் மற்றும் செய்து கொண்டிருக்கும் செயல்கள் உங்கள் பண்பின் தன்மைகளைப் பொறுத்து வேறுபடும்.
எனவே, சிறந்த தலைவனாக உருவாக வேண்டும் என்கிற மெய்யான உணர்வுடன், உங்களின் நற்பண்புகளை உயர்த்தி, எண்ணம், சொல்மற்றும் செயல்களை தற்போதிலிருந்து வெளிப்படுத்த ஆரம்பிக்க முயலுங் கள்.
மக்கள் எல்லோராலும் சிறந்த தலைவனாகப் போற்றப்படுபவர்கள் அனைவரும் நற்குணம் கொண்டவர் களாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்பது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பேருண்மை.
அன்னப்பறவை போல... பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்து விட்டு பாலை மட்டும் அருந்துவதாகக் கூறப்படும் அன்னப்பறவையைப் போல், உங்கள் தன்மைகளிலிருந்து, தலைமைத்துவத்திற்கு எதிரான குணங்களை, தீயவைகளை, குறைகுணங்களை பிரித்துவிட்டு, தலைமைப்பண்புக்கு உகந்த நல்லவற்றை தேர்ந்தெடுத்து கடைப்பிடியுங்கள்.
இதற்கு முன்னோர்களும் நல்லறிஞர்களும் சிறந்த வழிகாட்டுதல்களை, அறிவுரைகள், வழிமுறைகள், நூல்கள் மூலமாக வழங்கியுள்ளனர். இவற்றைக் கற்றுணர்ந்து விழிப்புடன் எந்நிலையிலும் பின்பற்றப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
கற்கை நன்று. நல்லதை கற்பதுமிகவும் நன்று. நல்லதைத் தேடிப்படியுங்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில், ஒப்பற்ற நூலகமாகக் கைப்பேசியும் (பலரிடம் மடிக்கணினியும்) இணையமும் கலந்த கலவை 24x7 உங்கள் வசம் உள்ளது. அதில் தேடினால், தலைவராகத் தேவையான அனைத்தும், மற்றும் கற்றலுக்கும், பயிற்சிக்கும், நடைமுறைப்படுத்திக் கொள்வதற்குமுரிய வழிமுறைகள் உங்கள் வசம்.
வாழ்வியல்: பிறப்பியல்பாகவே தலைமைப் பண்போடு இருப்பவர்கள், தலைவராக வாய்ப்பு வரும் முன் நம்மைதகுதியாக்கிக் கொண்டு காத்திருப்பவர்கள், தலைவராக வாய்ப்புக்கிடைக்கும் போது, தவறவிடாமல்தைரியமாக ஏற்றுக்கொள்பவர்கள், பிறரால் தலைமைப் பண்புள்ள வர்களாக கருதப்பட்டவர்கள் மட்டும் தான் தலைவராகும் வாய்ப்பைப் பெறக்கூடியவர்களாக இருக்க முடியும்.
சதுரங்க விளையாட்டில் ஒரு சிப்பாய் தகுந்த பாதுகாப்புடன் முன்னேறிச் சென்று அதிக திறனுள்ள அரசியாவது போன்றும், அருவருப்பான கம்பளிப்புழு கூட்டுக்குள் அடைந்துகிடக்கும் வாழ்வியலைக் கடைப்பிடித்து மாற்றமடைந்து அனைவரும் விரும்பும் வண்ணத்துப்பூச்சி யாவது போன்றும், இளையோரும் மாணவர்களும் சிறந்த தலைவராக தேவையான வழிகாட்டுதல்களை, துணையாகவும், பாதுகாப்பாகவும், வாழ்வியல் முறையாகவும் மாற்றிக்கொண்டால், நற்திறனும் நற்குணமும் நிறைந்த சிறந்த தலைவராக மாறலாம்.
தேவையான முதன்மை பண்புகளான நற்பண்பு வளர்த்தல், நற் திறமையுடன் செயலாற்றுதல், உறுதியான துணிவு, அறவழி நடப்பவ ராயிருத்தல், மனிதம் காப்பவராயிருத்தல், மக்கள் விரும்பும் மனிதராக உயர்தல் என எந்த நிலையிலும் இவற்றை விட்டு விலகாத மனத்துணிவை ஏற்படுத்திக் கொண்டால் நாளைய தலைவர்களில் நீங்களும் ஒருவர்தான்.
- கட்டுரையாளர் எழுத்தாளர், வல்லமை சேர் மற்றும் வேர்களின் கண்ணீர் ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT