Published : 18 Oct 2023 04:25 AM
Last Updated : 18 Oct 2023 04:25 AM
கொலு என்றால் அழகு என்று பெயர். கொலு வானது புரட்டாசி மாதத்தில் நவராத்திரி காலமான ஒன்பது நாள்களில் கோவில்களிலும், வீடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு பெருவிழாவாகும்.
இதில் ஒற்றைப்படையாக மூன்று முதல் பதின்மூன்று படிகள் வரை அமைத்து, அவற்றில் வண்ண, வண்ண பொம்மைகளை இடம்பெறச் செய்து, வண்ண விளக்குகளால் அழகுற அலங்கரித்து வைப்பர். பூமியில் உயிரினங்கள் படிப்படியாக தோன்றியதாகும்.
முதல் படியில் உடலால் உணரும் ஓரறிவான புல், பூண்டு, செடி, கொடி, மரம், தாவரங்களையும் பொம்மைகளாக வைத்திருந்தது அவற்றின் பயன்களையும் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துவதாக இருந்தது.
இரண்டாம் படியில் உடல் மற்றும் நாக்கால் உணரும் ஈரறிவான நத்தை, சங்கு,மீன் வகையான கடல்வாழ் உயிரினங்களையும், மூன்றாம் படியில் உடல், நாக்கு, மூக்கால் உணரும் மூவறிவான கரையான், எறும்பு, அட்டை ஊர்வனங்களையும் அமைத்திருந்தனர். மூன்றாம் படியில் இடம்பெற்ற பொம்மைகள் சுறுசுறுப்பையும், வரிசை முறையையும் நமக்கு உணர்த்தியது.
நான்காம் படியில் உடல், நாக்கு,மூக்கு, கண்ணால் உணரும் நான்கறிவான வண்டு, ஈ, பூச்சி இனங்களையும், ஐந்தாம் படியில் உடல், நாக்கு, மூக்கு, கண், காதுஎன ஐம்புலன்களால் உணரும் ஐந்தறிவு விலங்குகள், பறவைகளையும் ஆறாம் படியில் உடல், நாக்கு, மூக்கு, கண், காது மற்றும் மூளையால் உணரும் ஆறறிவு மனிதர்களையும், ஏழாவது படியில் மனிதர்களில் உயர்ந்த மகான்களையும், சாமி சிலைகளையும் வைத்திருந்தனர்.
எட்டாவது படியிலும் ஒன்பதாவது படியிலும் கல்விக்கான கலைமகளும் செல்வத்திற்கான லட்சுமியும் வீரத்திற்கான பார்வதியும் வண்ண பொம்மைகளாக வீற்றிருந்தனர். மாணவர்களும், ஆசிரியர், ஆசிரியைகளும் தங்களது வீடுகளில் இருந்து எடுத்து வந்த வண்ணவண்ண கொலு பொம்மைகள்அனைவரையும் கவர்ந்தது.
விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என பலவிதமாக வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் அவைகளிடம் உள்ள குணங்களையம், தனித்தன்மை யையும் உணர்த்துகிறது. சாதி, மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றுகூடி எங்கள் பள்ளியில் அமைத்த இந்த கொலு, காலம்கடந்து நிற்கும் நினைவலைகள்.
- கட்டுரையாளர் இடைநிலை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முத்துநாகையாபுரம், சேடபட்டி, மதுரை மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT