Published : 13 Oct 2023 04:26 AM
Last Updated : 13 Oct 2023 04:26 AM
இன்றைய மாணவர்கள் படிப்புக்கு இடையே புதிய உபகரணங்களை கண்டுபிடிக்கும் புத்தாக்க செயல்பாடுகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியில் கல்லூரி மாணவர்கள் இந்தியளவில் சுற்றுலாதலங்கள், முக்கிய கோயில்கள், பிரசித்தி பெற்ற இடங்கள், அங்குள்ள வசதிகளை பெறுவது போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கியசெயலியை வடிவமைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் முனைவர் ரேவதி,சரவணன் மேற்பார்வையில் இக்குழுவில் மாணவர்கள் ஆர். பாலாபிரதீப், கே. அஸ்வின், பி. தரணீஷ், ஜே. கேத்ரின் பிரிஜித் , ஏ. செரோம் பிரகாஷ், ஏஎஸ். அக்மால் பவுமிலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களுக்கான ‘ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான்’ போட்டியில் சுற்றுலா பிரிவில் இக்குழுவினரின் படைப்புக்கு முதல் பரிசு கிடைத்து. இச்செயலியை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியிலும் தொடர்ந்து இக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண்டகசாலை பிரிவில் பணிபுரியும் அலுவலர் ரமேஷ் என்பவரின் மகனும், பிடெக் இறுதியாண்டு மாணவருமான பாலபிரதீப் அக்குழுவில் இடம் பெற்றிருந்ததால் மாநகர காவல் ஆணையராக இருந்த நரேந்திரன் நாயர் இம்மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டிக் கவுரவித்தார்.
இது குறித்து பாலாபிரதீப் மற்றும் குழுவினர் கூறியதாவது: பொதுவாக, சுற்றிப் பார்க்கும் இடங்கள், வசதிகள் குறித்து அந்தந்த மாநில சுற்றுலாத்துறை மூலம் ஓரளவுக்கு விவரம் கிடைக்கிறது. இருப்பினும் செல்போனை பயன்படுத்தி ஆன்லைனில் இந்தியளவிலுள்ள சுற்றுலாத் தலங்கள், தங்கும் விடுதிகள் வசதி போன்ற பல்வேறு விவரங்களை உடனுக்குடன் தெரிந்து பயன்படுத்தும் வகையில் ’டூர் ட்ரெண்ட் ஆப்’ எனும் ’டூரிசம்’ செயலியை உருவாக்கியுள்ளோம். 2022 ஜூன் முதல் ஆகஸ்டு வரை இதற்கான முயற்சியில் ஈடுபட்டோம்.
எங்களை போன்ற மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக ‘ஸ்மார்ட் இந்தியாஹாக்கத்தான்’ போட்டி மத்திய பிரதேசத்திலுள்ள ஐஇஎஸ் பல்கலையில் ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. இந்தியளவில் இருந்து பங்கேற்ற மாணவர்களின் படைப்புகளில் சுற்றுலா பிரிவில் எங்களது படைப்பு முதலிடம் பெற்றது மகிழ்ச்சியை அளித்தது. இதற்காக ரூ.1 லட்சம் மற்றும் குழுவினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இச்செயலி மக்கள் பயன்பாட்டு வரும்போது, இந்தியளவில் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என, நம்புகிறோம். படிக்கும்போது, இதற்கான முயற்சியில் ஈடுபட்ட எங்களை மாநகர காவல் ஆணையர், கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள் பாராட்டியது கூடுதல் ஊக்கமளிக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT