Published : 12 Oct 2023 04:30 AM
Last Updated : 12 Oct 2023 04:30 AM
சென்னை: மகிழ்ச்சிக்காக ஓடும் குதிரைதான் முதல் பரிசு பெறுகிறது. அதுபோல மதிப்பெண்களுக்காக படிக்காமல் மகிழ்ச்சியுடன் புரிந்து, ரசித்து படியுங்கள். மதிப்பெண்கள் தானாக உங்கள் மடியில் வந்து விழும் என்று மாணவர்களுக்கு தமிழக அரசுமுன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.
“எழுதுக" எனும் புத்தகம் எழுதும் அமைப்பு சார்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட இளம் படைப்பாளிகள் எழுதிய 150 புத்தகங்கள் வெளியிடும் விழா சென்னை மணப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பேரனும் எழுத்தாளருமான ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். தமிழக அரசு முன்னாள் தலைமை செயலர்வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 150 புத்தகங்களை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் கல்லூரியில் படிக்கும்போது கவிதை புத்தகம் வெளியிடமுயற்சித்தேன். பணம் தேவைப்பட்டதால் வெளியிட முடியவில்லை. பின்னர் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்தபோதுதான் கல்லூரி காலத்தில் எழுதிய கவிதைகள் கொண்ட எனது முதல் கவிதைப் புத்தகம் வெளிவந்தது.
எழுத்தும் வாசிப்பும்: எழுதுவதும், வாசிப்பதும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. வாசிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால்தான் எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். புத்தக வாசிப்பு ஆயிரம் வாசல்களை திறக்கும். புத்தகம் படிக்கும்போது எழுத்தாளரின் அறிவையும் அனுபவத்தையும் பெற முடியும். "குட்டி இளவரசன்" என்ற புத்தகத்தை அனைத்து மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டும்.
எந்த வயதிலும் புத்தகம் எழுதலாம். புத்தகம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு சில அறிவுரைகளை கூறுகிறேன். முதலில் நல்ல கருவைதேர்ந்தெடுங்கள். அதற்கு மனிதர்களை தெருக்கள், பேருந்துகள், ரயில்கள் என அனைத்து இடங்களிலும் சந்தியுங்கள். பராரி, பாமரன், பட்டினி கிடப்போர், சாதனைபடைத்தோர் என பலரைப் பற்றியும் எழுதலாம். நல்ல கருவைத் தேர்ந்தெடுத்துவிட்டாலே புத்தகம் எழுதுவதில் பாதி வெற்றி பெற்றுவிடலாம்.
எது கம்பீரம்? - அடுத்து புத்தகத்தில் என்னென்னவர வேண்டும் என்று வரைபடம் தயாரியுங்கள். மகத்தான பாத்திரங்களை தேர்ந்தெடுங்கள். கூலி வேலை செய்வோர், தூய்மைப் பணியில் ஈடுபடுவோரிடம் கம்பீரத்தைக் காணலாம். நேர்மையைவிட வேறு கம்பீரம் இல்லை. அதனால்தான் தூய்மைப் பணியின்போது கிடைத்த தங்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை தலைமை செயலகத்திற்கு வரவழைத்து பொன்னாடை அணிவித்து கவுரவித்தேன்.
புத்தகத்திற்காக தினமும் குறிப்பிட்ட நேரம் எழுதுங்கள். முதலில் கிறுக்கல் போல இருக்கும். அந்த கிறுக்கலில் இருந்து அழகான எழுத்துக்கள் பிறக்கும். எழுத்தும், எழுதுபவனும் மேன்மை அடைய வேண்டும். அதுவே சிறந்த நூலாக இருக்கும். செல்போனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மகத்தான நூல்களைவாசியுங்கள். வாசிக்க வாசிக்க தன்னம்பிக்கையும் சொற்திறனும் அதிகரிக்கும். பக்கங்கள் முக்கியமில்லை. கருத்தாளமே சிறப்பு. 19 பக்க நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது.
உங்கள் எழுத்தில் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். காலப்போக்கில் உங்கள் எழுத்துக்கள் ஆராதிக்கப்படும். மகிழ்ச்சிக்காக ஓடும் குதிரைதான் முதல் பரிசு பெறுகிறது.
அதுபோல மதிப்பெண்களுக்காக படிக்காமல் மகிழ்ச்சியுடன் புரிந்து, ரசித்து படியுங்கள். மதிப்பெண்கள் தானாக உங்கள் மடியில் வந்து விழும். இவ்வாறு இறையன்பு பேசினார்.
முன்னதாக ஆடிட்டர் ஜெ.பாலசுப்பிரணியம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மருத்துவர் சீனிவாசன், பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தின் தியான மைய சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வ.சுப்பிரமணியன், பதிப்பகத்தார் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ராம. மெய்யப்பன் ஆகியோர் பேசினர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை "எழுதுக" அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ம.த.சுகுமாறன், எஸ்.விஜயகிருஷ்ணன், வே.கிள்ளிவளவன் ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT