Published : 10 Oct 2023 04:30 AM
Last Updated : 10 Oct 2023 04:30 AM
அன்புள்ள கவின்,
உன் கடிதத்தைப் படித்தேன். நான் உன் வகுப்பு ஆசிரியராக வரவேண்டும் என்று பல ஆண்டுகள் ஏங்கியிருந்ததாக எழுதி இருந்தாய், மிக்கநன்றி. நான் வகுப்பறையில் பொதுவாய் பேசிய விஷயம் உனக்கானது தான் என்று புரிந்து கொண்டதாகவும் எழுதியிருக்கிறாய் நல்லது. மகன் தவறு செய்தால் கண்டிக்கும் உரிமை தாய்க்கு இருக்கிறதல்லவா? நானும் உன் அம்மா தான்! நீ செய்கிற, தவறை நான் கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டும்.
பதின்ம பருவத்தில் குழப்பங்களும் சிக்கல்களும் வருவது புதியது இல்லை. ஹார்மோன் உற்பத்தியால் உடலில் மாற்றங்கள் ஏற்படுவது போல் உள்ளத்திலும் கிளர்ச்சியும், ஆசையும் தோன்றும். பெண்ணால் ஈர்க்கப்படலாம். அது இனக்கவர்ச்சி ஆகும். அதை காதல் என்று நினைக்காதே!
ஈர்ப்பும், நட்பும் காதல் ஆகாது. காமமும் காதல் அல்ல. ஆடை பார்த்து, அழகைப் பார்த்து வருவதும் காதல் அல்ல! பார்த்தவுடனே ஒருவரைப் பிடிக்கலாம், ஆனால் அது காதல் ஆகாது. பார்க்க பார்க்க வருவது தான் காதல் என்று தப்பாக புரிந்து கொள்ளாதே! பார்த்தால், சிரித்தால், பழகினால் காதல் என்றுஇந்த வயதில் நினைக்கத் தோன்றும் டெஸ்ட்டோஸ்டீரான் மீசையுடன் ஆசையையும் உனக்குள் முளைக்கவைக்கிறது. இந்த இன ஈர்ப்பு ஏற்பட்டால் உன் உடலில் ஹார்மோன்கள் சரியாக வேலை செய்கின்றன என்று பொருள். அவ்வளவு தான்! ஆணும் பெண்ணும் பேசினாலே காதல் பற்றிக் கொள்ளும் என்ற எண்ணம்தவறானது.
ஒரு பெண்ணை பிடிப்பது தவறல்ல. அது ஒரு உணர்வு. அதைக் கடந்து செல்ல கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், நீ என்ன செய்தாய்? அவள் பின்னாலேயே சென்று அவளைத் தொந்தரவு செய்தது தப்பு. உன் தப்பை உன் கடிதத்தில் ஒத்துக் கொண்டாய். ஆனால் அவள் மட்டும் எந்த தப்பும் செய்யவில்லையா? எனக் கேட்டு இருந்தாய். இதில் நீ உணராத உண்மை என்ன தெரியுமா? பெண்கள் பழகிவிட்டால் யாராக இருந்தாலும் பாசமாய் இருப்பார்கள். அதைமெச்சூரிட்டி இல்லாதவர்கள் காதலென்று புரிந்து கொள்வார்கள்.
அக்கறை காட்டினால், அன்புடன்பழகினால் காதல் ஆகிவிடுமா? நீயும்அப்படி நினைத்திருக்கலாம். இதைமாற்றிக் கொள்ள முடியும். நம்மைபற்றிய வடிவம் நம் நண்பர்களை வைத்து தான் உருவாகிறது. எண்ணத்தில் தவறு இருந்தால் அதுபேச்சிலோ, செயலிலோ கண்டிப்பாய்வெளிவரும். காதல் என்பது நல்லபுரிதல் மட்டுமில்லை. யாரையும் காயப்படுத்தாது ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடத்தும் நல்ல உணர்வு.
ஆனால் ஒரு பெண்ணின் நிராகரிப்பை எளிதாக ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை. தன் வாழ்க்கையே முடிந்தது போல் நினைத்து தவறான முடிவு எடுக்கிறான். கத்தியால் பெண்ணை குத்துவதோ, தன்னை மாய்த்துக் கொள்வதோ, மிக மோசமான செயலாகும். மனப்பக்குவம் இல்லாத இடத்தில் காதல் எப்படி வரும்? திரைப்படங்களிலும், தொடர் நாடகங்களிலும் காட்டப்படுவது போல் காதல் வருவதுமில்லை, இருப்பதுமில்லை.
தன்னையே புரிந்து கொள்ளாதவன் பெண்ணை எப்படி புரிந்து கொள்வான்? ஒரே வயதிலிருக்கும் ஆண், பெண் இருவரில் பெண்ணின் மனப்பக்குவம் அதிகம். உறவில் நேர்மையும் தூய்மையும் மிக மிக அவசியம். படிக்கிற வயதில் இனஈர்ப்பை தவறாக எண்ணி படிப்பையும் தொலைத்து உன்னையும் தொலைக்கவேண்டுமா? நீயே உன் பெற்றோரை சார்ந்திருக்கிறாய். உன்னால் ஒரு குடும்பத்தை வழி நடத்த முடியுமா? என யோசி. முழு கவனத்தையும் படிப்பில் செலுத்து. உன் ஆற்றல் முழுவதும் உன் எதிர்காலத்தை செதுக்குவதில் செலவிடு.
சுயசார்புடன், சொந்தக்காலில் சுதந்திரமாய் நிற்கும் போது மனப்பக்குவம் வரும்போது பெண்ணை புரிந்து மரியாதை கொள்ளும்போது வரும் காதல் தான் நிலையானதாகவும், தெளிவானதாகவும் இருக்கும். இலக்கை நோக்கிய பயணத்தில் கவனத்தை திசை திருப்பும் இடைஞ்சல்கள் எதற்கு? நீ புரிந்து கொள்வாய் என்று நான் நம்புகிறேன். நேரம்விலை மதிப்பில்லாதது. அதனை உன்வளர்ச்சிக்கு செலவிடு, சிறப்பான வாழ்வு அமையும்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், பள்ளி முதல்வர், நவபாரத் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி இ.வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT