Last Updated : 25 Sep, 2023 04:20 AM

 

Published : 25 Sep 2023 04:20 AM
Last Updated : 25 Sep 2023 04:20 AM

விரலோடு விளையாடு...

பள்ளிப் படிப்பில் கணிதப் பாடம் என்றால் ஏராளமான மாணவர்களுக்கு கசக்கத்தான் செய்யும். கணிதப் பாடவேளையில் முதல் சில பெஞ்சுகளில் இருப்பவர்கள்கூட கடைசிப் பெஞ்சுக்கு போவதுண்டு. ஏனென்றால் கணித ஆசிரியர் ஏதாவது கணக்கு செய்யச் சொல்லிவிட்டால் கஷ்டமாகிப் போய்வி்டும் என்பதாலேயே இந்த இடமாற்றம் நடக்கும்.

கணித ஆசிரியர் பிடித்தமாதிரி பாடம் நடத்தினால் பலருக்கும் கணிதப் பாடம் இனிக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக கணிதம் மாணவர்களுக்கு கசப்பதும், இனிப்பதும் தொடக்கக் கல்வி் ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. அதுதான் அடிப்படை.

கணித ஆசிரியர்கள் கணக்குப் பாடம் நடத்த பல்வேறு யுத்திகளைக் கையாளலாம். ஆனால், மாணவர்களின் கைவிரல்களைக் கொண்டு அவர்களை கணிதம் கற்கச் செய்வதே எல்லா கணித ஆசிரியர்களுக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. உயிருள்ள அனைத்து ஜீவன்களும் உடல் உறுப்புகளோடு பிறக்கின்றன.

மனித உடலின் முக்கிய அங்கமாக கைகள் இயங்குகின்றன. கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் விரல்கள் அமைந்திருக்கின்றன. அந்த விரல்களுக்கும் கணிதத்திற்கும் மிகப்பெரிய பிரிக்க முடியாத நெருங்கிய பந்தம் இருக்கிறது.

சுட்டியும் குட்டி விரல்களும்: குழந்தை பேச ஆரம்பித்தவுடன் பள்ளிக்குச் செல்லாமலே என்ன சாப்பிட்டாய் என்றால் தோசை, இட்லி, பூரி இப்படி ஏதாவது ஒன்றைச் சொல்வார்கள். எத்தனை சாப்பிட்டாய் என்று கேட்டால் மழலைக் குரலில் ஒன்று இரண்டு என கை விரலைக் காட்டி சொல்வார்கள். அது சரியோ தவறோ கைவிரலால் கணக்கை சொல்லும் பழக்கம் வரும். இதுவே கணிதப் பாடம் கற்பதற்கு அடிப்படை என்றால் மிகையாகாது.

பள்ளிக்குச் சென்றதும் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம் என்று ஆரம்பித்து, ஒன்று ஒன்றாய் கூட்டுவதால் கூட்டல் பாடலையும் தோசையம்மா தோசை பாடல் மூலம்ஒன்று ஒன்றாய் குறைவதால் கழித்தல்பாடலையும் கணிதம் கற்க தயார்படுத்தப்படுவார்கள். இதுபோன்ற பல பாடல்கள் மூலமாகவும், விரல்களை நீட்டியும், மடக்கியும் கூட்டல், கழித்தலை களிப்புடன் கற்பித்தல் கற்றல் தொடங்கும். இதுவே வகுப்பறையின் முதற்படி.

நல்லவற்றை கூட்டிக் கொள், தீயவற்றை கழித்துக் கொள், மகிழ்ச்சியை பெருக்கிக் கொள் என வாழ்வியல் தத்துவத்தையும் கைவிரல்களால் கற்றுத் தரும் பழக்கம் இன்றளவும் தொடர்கிறது. கைவிரல்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், மடங்குகள், பெரிய எண், சிறிய எண், அதிகம், குறைவு, முன்னி, தொடரி இடைப்பட்ட எண் என்று சிறிய கணக்கை சிங்கார விரல்களால் சிறப்பாக செய்வது அற்புதம்.

சிலேட்டும் குச்சியும், பேப்பரும்பென்சிலும் இல்லாமல் குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு போலவே விரல்களால் கணிதம் கற்பிப்பது ஆசிரியர்களுக்கு கைவந்த கலைதான். கைவிரல்களோடு கால் விரல்களும் அவ்வப்போது ஆட்ட நாயகர்களாக களம் இறக்கப்படும். பள்ளிகளில் பலவிதமான துணைக் கருவிகள் கணக்கிற்கேற்றாற் போல் வலம் வந்தாலும் பல்லக்கில் முதலில் ஏறுவது கைவிரல்கள் தான்.

எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய நவீன தொழில்நுட்பம் கொண்ட கால்குலேட்டர், கணினி என எத்தனை வந்தாலும் விரல்கள்தான் கணிதத்தை எளிதில் கைகூடச் செய்யும் ஆகச் சிறந்த துணைக் கருவிகள் ஆகும். தற்போது ஆணி மணி சட்டம் என்பதே ஆங்கிலத்தில் அபாகஸ் என்று அழைத்து விரல்களுக்கு என்று தனி மதிப்பு கொடுத்து அதன்மூலம் கணக்குகளை எளிதாக்கி உள்ளன.

தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு விரல்கள் மூலம் கணிதம் கற்றுத் தருவது தொன்று தொட்டு இருந்து வரும் பாரம்பரிய பழக்கம். எத்தனை புதுமைகள் வந்தாலும் பழசுக்கு எப்போதும் மவுசுதான் என்பதற்கு கல்வெட்டு போன்ற சான்றாகத் திகழ்கிறது கைவிரல்கள்.

- கட்டுரையாளர் இடைநிலை ஆசிரியை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முத்துநாகையாபுரம், சேடபட்டி ஒன்றியம், மதுரை மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x