Last Updated : 12 Sep, 2023 04:30 AM

 

Published : 12 Sep 2023 04:30 AM
Last Updated : 12 Sep 2023 04:30 AM

அன்றாட வாழ்வை எளிமையாக்கும் அறிவியல்

அன்றாடம் வாழ்வு எளிமையாக நகர தினசரி தொடர்ச்சியான சில செயல்களை நாம் செய்ய வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு காலைக்கடன் முடித்தல், பல் துலக்குதல், ஆடை அணிதல் இன்னும் பல. இவற்றை நாம் சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை என்றால் தினம் தினம் அதைக் கற்றுக் கொள்ள மூளை எவ்வளவு நேரம் மற்றும் ஆற்றலைச் செலவழிக்க வேண்டிவரும் தெரியுமா?

காலைக்கடன் முடித்தல் என்ற ஒரு செயலை மட்டும் எடுத்துக் கொள்வோம். அதை ஒவ்வொரு நாளும் புதியதாக கற்றுக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? எவ்வளவு நேரமும் ஆற்றலும் தினம் தினம் செலவழிக்க வேண்டிவரும் என்று யோசித்து பார்த்தால் நம் தலையே சுற்றுகிறதல்லவா? இயல்பாக ஒரு நாளை நகர்த்த எவ்வளவு சிரமமாக இருக்கும்?

காலைக்கடனை காலையிலேயே முடிக்கப் பழகவில்லை எனில் அதனால் நினைத்த நேரத்தில் மலம்கழித்தல், சரியாக உணவு உண்ணாமை என பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. அதில் உடலும் மனமும் கெடுகிறது.

பொதுவாக நம் உடலில் செலவழிக்கப்படும் ஒட்டுமொத்த ஆற்றலில்மூளை மட்டும் 20% ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. இன்னும் அன்றாட பணிகளைத் தினம்தினம் கற்றுக் கொண்டிருந்தால் என்னவாகும் எவ்வளவு ஆற்றல் தேவைப்படும் என்று நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை. பழக்கங்கள் நம் அன்றாட வாழ்வை எளிதாக்குகிறது என்பதே அறிவியல் கூறும் உண்மை.

செயலும்... நடத்தையும்... ஒரு செயலை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து செய்யும்போது நடத்தையாக மாறி, அது நாளடைவில் பழக்கமாக மாறும். இதனால்தான் அத்தியாவசியமான செயல்களை வாழ்வில் நாம் பழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஒரு செயல் நம் மூளையில் பழக்கமாக ஆக்கப்படுவதற்கான அறிவியல் காரணங்களைப் பார்ப்போம். காலைக்கடன் முடித்தல் என்ற செயலைத் தினமும் தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.

அதனால் உடலில் கழிவு வெளியேறி தூய்மை ஆகிறது என்ற நன்மை ஏற்படுகிறது. அப்போது நம் மூளையில் டோபமின் என்ற ஹார்மோன் சுரந்து மகிழ்வை ஏற்படுத்துகிறது. நாளடைவில் காலைக்கடன் முடித்தல் என்ற செயல் நடத்தையாக மாறி எவ்வித அதிகப்படியான உழைப்பை போடாமலே தன்னியல்பாக மூளை பழக்கமாக மாற்றிக்கொண்டு செயல்படுத்த தொடங்கி விடுகிறது.

மூளையில் இந்தச் செயல் தூண்டலுக்கான பாதை வலுவாக ஏற்பட்டிருக்கும். இது தன்னியல்பாக நடக்கும்படி, நம் மூளையின் Sub Consicious எனப்படும் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கும். அந்தச் செயலும் அன்றாடம் இயல்பாக நடந்தேறும். இப்படி அன்றாடம் பல பழக்கங்களை நாம் இளம் வயதிலிருந்தே பழக வேண்டிய தேவை இருக்கிறது.

ஒரு பழக்கத்தை ஏற்படுத்த ஒருசெயலை தொடர்ச்சியாக செய்து, நடத்தை மாறும் வரை நீடிக்கும்போது அது பழக்கமாக மாறுகிறது என்றுஉளவியல் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இயல்பாக வாழத் தேவையான அத்தியாவசியப் பழக்கங்களை இளம்வயதிலேயே பழக வேண்டும். அவ்வாறு குழந்தை பருவத்திலேயே பழகுவது எளிதான ஒன்றாகவும் வாழ்வை எளிதாக நகர்த்தவும் ஏதுவாக அமைகிறது.

மன அழுத்தம், பதற்றம் போன்ற வற்றிலிருந்து தற்காலிகமாகவிடுபட நகம் கடித்தல் போன்றபழக்கங்களுக்கு உள்ளாகிவிடுகின் றனர். அதுவே வளரிளம் பருவத்தில் வேறு கெட்ட பழக்கங்களுக்கும் ஆட்படுகின்றனர்.

நல்ல பழக்கங்கள் உடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. மாறாக நன்மையே புரிகின்றன. அவை அத்தியாவசியமானவையும் கூட. கெட்ட செயல்கள் பழக்கங்களாக மாறி நடத்தையை மாற்றி விடுகிறது. எளிதில் விடமுடியாவிட்டால் வாழ்வே தடம் மாறிப்போகும். அத்தகைய தீய செயல்களில் நாம் அதீத கவனத்தோடு இருக்க வேண்டும். அவற்றைத் தொடர்ச்சியாகச் செய்து டோபமினைச் சுரக்க பழக்கப்படுத்தாமல் சிறப்பாக முழு உடல், உள நலத்தோடு வாழ்வோம். வாழ்விற்குத் தேவையான பழக்கத்தைக் கைக்கொள்வோம். தேவையற்ற பழக்கங்களான மது, போதை போன்றவற்றை தவிர்த்து பெருவாழ்வு வாழ்வோம்.

- கட்டுரையாளர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பூவலை அகரம் கும்மிடிப்பூண்டி திருவள்ளூர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x