Published : 07 Sep 2023 04:30 AM
Last Updated : 07 Sep 2023 04:30 AM
பள்ளிக்கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பின் (NCFSE – National Curriculum Framework for School Education 2023) இறுதி வடிவினை மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. இது தேசியக் கல்விக்கொள்கை 2020-ன்பாடத்திட்டத்தை எப்படிச் செயல்படுத்துவது என விவரித்துள்ளது.
இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை பொதுத்தேர்வுகள் நடத்த பரிந்துரைக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்குள் ளாகி இருக்கிறது.
இது பாதி பாதியாக எழுதும் முறை அல்ல. ஒரு மாணவர், தான் தேர்வுக்கு தயார் என முதல் ஆறு மாதத்தில் நினைத்தால் உடனே தேர்வினை எழுதலாம். மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து மற்றொருமுறை தேர்வினை எழுதலாம். இரண்டு தேர்வுகளும் முழு பாடப்புத்தகத்தில் இருந்துதான். எதில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார்களோ அது தேர்வு செய்யப்படும்.
மேலும் சில வருடங்களில், எப்போது ஒரு மாணவர் தேர்வு எழுத தயார் என்றாலும் உடனடியாக தேர்வு எழுதும் on demand தேர்வுகளையும் கொண்டு வரவேண்டும் என்று இதில் சொல்லப்பட்டிருக்கிறது. பாடத்திட்டத்தையும் அதற்கு ஏற்றவாறுமாற்றி அமைக்கவும் சுட்டிக்காட்டி யுள்ளது.
காலப்போக்கில் 9-ம், 10-ம் வகுப்பினையும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இதேபோல விருப்பமான பாடங்களை தேர்வு செய்வதையும் செமஸ்டர் முறையும் அங்கிருந்தே தொடங்கவும் சொல்லியுள்ளது. இவை அனைத்தும் அடுத்த ஆண்டு முதலே சிபிஎஸ்இ பள்ளிகளில் அமலாகும். மாநில பாடத்திட்டத்தில் படிப்போர்களுக்கும் ஏற்கும்படி மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
யாருக்கு பாதிப்பு? - ஏற்கெனவே வளரிளம் பருவம் தேர்வுகளால் நிரம்பியுள்ளது. 9-ம் வகுப்பின் இறுதியிலேயே தனியார் பள்ளிகள் 10-ம் வகுப்பிற்கான பாடங்களை எடுக்க ஆரம்பித்து விடுகின்றன. விடுமுறைகளே இல்லை. 10-ம்வகுப்பு முழுக்க நெருக்கடி. அதுவும்கடைசி 3 மாதங்கள் பொதுத்தேர் விற்கான தயாரிப்பு தேர்வுகள் மட்டுமே. பள்ளியின் இதர செயல்பாடுகளில் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இது பிளஸ்1-லும் தொடர்கிறது.
கூடுதல் சுமையும் குழப்பமும்: இதில் ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு என்பது கூடுதல் சுமையும் குழப்பமும் ஏற்படுத்தும். முதலாவதாக பாடப்புத்தகங்களை முதல் ஐந்து மாதத்தில் முடித்திடவேண்டும். அதன்பின்னர் மீண்டும் மீண்டும் தேர்வுகள் மட்டுமே. கற்றல் திறன் அதிகரிக்கும் எனக் கல்வி அமைச்சகம் கூறினாலும் இவை களத்தில் நேரெதிராகவே பிரதிபலிக்கும். மகிழ்ச்சியான கற்றலுக்கு வாய்ப்பே இல்லாமல் போய் வெறும் பயிற்சியில் (கோச்சிங்) நின்றுவிடும் அபாயம் உள்ளது.
கோச்சிங் சென்ட்ர்கள் குறையுமா? - இரண்டு முறை தேர்வுகள், செமஸ்டர் முறையில் விரைவில் பாடத்திட்டங்கள் என சொல்லிவிட்டு இதுகோச்சிங் மையங்களைக் குறைக்கும்என குறிப்பிடுகின்றனர். மற்றொரு பக்கம் கலை, அறிவியல் பட்டப்படிப் புக்குக் கூட CUCET நுழைவுத்தேர்வு ஏற்கனவே வந்தாயிற்று. நீட், ஜெஇஇ என ஏற்கெனவே மாணவர்கள் நுழைவுத்தேர்வுகளுக்காக பயிற்சி எடுத்து வருவதால் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இது இன்னும் வசதி. டிசம்பரிலேயே தேர்வுகளை எழுதிவிட்டு மற்ற நேரம் முழுக்க நுழைவுத் தேர்வுகளுக்குப் படிப்பார்கள்.
பொதுத்தேர்வுகளில் மாற்றம் கட்டாயம் வேண்டும். அது எப்படி என்ன என்பதை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆகியோரை நீண்ட உரையாடலில் ஈடுபடுத்தி அங்கிருந்து தீர்வுகளைப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டின் நிலைப்பாடு! - ‘இம்புரூவ்மென்ட்’ தேர்வுகளைத் தமிழ்நாடு 2006-ல் ஒழித்ததற்கான காரணம் வசதியும் வாய்ப்பும் இருக்கும் மாணவர்கள் இரண்டுமுறை தேர்வு எழுதும் வசதி பெறுவார்கள். இதுவே மெல்லக்கற்கும் மாணவர்கள், பள்ளியில் போதிய வசதி இல்லாதவர்கள் என பெரும் பகுதியினருக்கு இருமுறை எழுதும் வாய்ப்புகனவாகிவிடும்.
பொறியியல் கல்லூரிகளுக்கும் இதே காரணங்களுக்காக நுழைவுத்தேர்வுகள் இங்கு ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குழந்தைகளின் கல்விக்கு அரணாக நின்று அந்தந்த வயதில் அவர்கள் அடையவேண்டிய திறன்களுக்கும் அனுபவங்களுக்கும் களன்களை அமைத்துத் தருவதே நம் தலையாயக் கடமை.
- கட்டுரையாளர்: சிறார் எழுத்தாளர். தொடர்புக்கு: umanaths@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT