Published : 05 Sep 2023 04:18 AM
Last Updated : 05 Sep 2023 04:18 AM
கற்றலின் இன்பத்தை கற்றுக் கொள்ளும் கணத்திலேயே உணர கற்பிப்பவரே ஆசிரியம் அறிந்த ஆசிரியர். ஆயிரம் பக்கம் கொண்ட ஒரு நாவலை படிக்கிறோம். உணர்வெழுச்சி அடைவதோ ஒன்றிரண்டு பக்கங்களில் மட்டுமே. ஒரு வாழ்நாளையே வாழ்ந்து கழிக்கிறோம் எப்பொழுதெல்லாம் வாழ்ந்தோம் என்று யோசித்தால் எஞ்சுவது கொஞ்சமே. ஆற அமர யோசிக்கையில் அரிதாய் பூக்கும் மலரை சாகுபடி செய்ய விரும்பிய விசித்திரம் புரிந்தது.
ஆசிரியர் பயிற்சியில் பெருமாள்சாமி என்ற விரிவுரையாளர் ஒரு வெள்ளை தாளில் ஒரு பக்கத்தில் பிடித்த ஆசிரியர் பற்றியும் மறுபக்கம் பிடிக்காத ஆசிரியர் பற்றியும் எங்களை எழுதி வரச் சொன்னார். எங்கள் அனைவரது பேப்பரையும் வரி வரியாக வாசிப்பதிலேயே முதலாமாண்டு உளவியல் பாடம் முழுவதையும் கற்பித்த விதம் இன்றும் மனதுக்குள் மணக்கிறது.
மைனஸ்சையும் மைனஸ்சையும் பெருக்கினால் ஏன் பிளஸ் வருகிறது? ஒரு பயிற்சியில் விவாதம் வருகிறது. என்னென்னவோ விளக்கம். எதுவும் பொருந்தவில்லை. "நட்டத்தை குறைப்பது லாபமே" ஒரு இலக்கிய மூளை கூற, 'நட்டத்தை குறைப்பது லாபத்தை நோக்கிய பயணமா? அல்லது லாபமா?" ஒரு தர்க்க மூளை எதிர் கேள்வி.
பார்வையற்றவர் தடவிய யானை போல வினா, விடை காணப்படாமலேயே முழித்துக் கொண்டிருந்தது. வீட்டில் சென்று எண் கோடு வரைந்து தரையில் சிறுபிள்ளை போல நடக்கிறேன். தாவுகிறேன், தூங்க முடியவில்லை. கணித வாய்ப்பாடு செயல்பாடாக காலடியில் விரிகிறது. வகுப்பில் பரிசோதித்த போது பச்சிளம் மூளைகள் பிரகாசித்தன. ஆசிரியம் மீண்டும் மலர்ந்தது.
அடிமனதில் கற்பித்தல் விளைவு! - நம்ம பள்ளிக்கூடத்து பப்பாளி மரத்து பழத்தை பறிக்காமல் விட்டு விட்டால் காக்கா குருவி தானே கொத்துகிறது. அந்த பப்பாளி மரமே சாப்பிட வில்லையே ஏன்? தாவரங்கள் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரிக்கின்றன என்று சொன்னதற்கு நான்காம் வகுப்புக்காரனின் தர்க்கம். அப்புறம், உணவு என்றால் என்ன என்று ஆரம்பிக்க தள்ளப்பட்டேன். ஆசிரியம் அரும்பவும் மொக்கு விடவும் ஒரு பரவசம்.
ஆசிரியருக்கு இலக்கணம் கூறும் நன்னூல் பாடல் நடுவு நிலைமைக்கு நிறைகோலை உவமை கூறும் மனுநீதிச் சோழன் கதை, நான்காம் வகுப்பு பாடம். இறுதியில் ஒரு செயல்பாடு. உன் மகன் இப்படி செய்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய் என்று மாணவர்களிடம் கேட்டு அவர்களை உரையாட செய்ய வேண்டும்.
அரசன் தன்மகனைக் கொன்றது சிலருக்கு பிடிக்கவில்லை. கன்று குட்டியும் பாவம் . பசுவும் பரிதாபமாக தெரிகிறது. ஒரு மாணவி என்னிடம் கேட்டாள் "சார் உங்க பொண்ணு கன்னுக்குட்டியை கொன்றிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் நீங்க சொல்லுங்க முதல்ல"
கார் டயருக்கு அடியில் என் மகளைப் படுக்க வைத்து விட்டு எனக்கு டிரைவர் சீட்டை காட்டுகிறாள். முடிவெடுக்க முடியவில்லை இன்று வரை. அந்தப் பாடத்தின் கற்றல் விளைவு எனக்கு மறந்து விட்டது,கற்பித்தல் விளைவு இன்னமும் அடிமனதில்.
நீளம், நிறை, கொள்ளளவு போல வெற்றிடத்தை எப்படி அளப்பது? ஐந்தாம் வகுப்புகாரன், கற்றல் குறைபாடு என்று சகலரும் தீர்ப்பளித்த ஒருவன் பூமி உருண்டை அல்ல என்று என்னோடு தர்க்கம் புரிந்த தருணம் என்று அறிவும் உணர்வும் நுட்பமாய் இழையோட ஆசிரியத்தை எப்போதும் மலர்விக்கப் பேராசை வருகிறது, ஆனால் அதுவோ தான் அரிதாய் பூக்கும் மலர் என நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.
நான் வெறும் ஆனா ஆவன்னா சொல்லிக் கொடுக்கும் ஆசிரியன் அல்ல. மனித மூளையைப் பரிணாமம் அடையச் செய்யும் உன்னத பணியை செய்வதால் அறிவியலாளர், பிஞ்சு மனங்களில் உணர்வின் திரட்சியை முகிழ்க்கச் செய்வதால் படைப்பாளி. இந்த உணர்வை ஆசிரியம் தருகிறது .
- கட்டுரையாளர்: ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அ.வலையபட்டி, மேலூர் ஒன்றியம், மதுரை மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT