Published : 05 Sep 2023 04:28 AM
Last Updated : 05 Sep 2023 04:28 AM

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு

மலம் பொதுவாக உரையாடலின் விருப்பமான தலைப்பு அல்ல, ஆனால் பசுவின் சாணம் விவாதிக்கத்தக்கது. இது பல்வேறு வழிகளில் நமக்கு உதவும் ஒரு பயனுள்ள பொருள். கால்நடைக் கழிவுகளை புதுப்பிக்கத்தக்க வளங்களாக பயன்படுத்துவது நமது மரபு.

ஆன்மீக ரீதியாகவும் பசுவிற்கு நமது பண்பாட்டில் அதிக முக்கியத்துவம் உண்டு. பசுவின் சாணமும் கோமியமும் புனிதப் பொருளாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எங்கே என்ன நிகழ்ச்சி நடந்தாலும் மாட்டுசாணத்தில் பிள்ளையார் பிடித்து வைப்பது தமிழர்களின் மரபு. தெய்வீக மயமான திருநீறு தூய பசுஞ்சாணத்திலிருந்தே பெறப்படுகிறது.

அடுப்பு எரிக்கப் பயன்படும் வரட்டி, சாண எரிவாயு (மீத்தேன்), இயற்கை எரு, தரை மற்றும் சுவர்களை மொழுகி சுத்தப்படுத்தும் கிருமி நாசினி என்று பல்வேறு வகைகளில் கால்நடை சாணம் பயன்படுத்தப்படுகிறது.

சாண எரிவாயு மிகவும் பாதுகாப்பான எரிபொருள். ஏனெனில் இது வெடிக்காது. ஒரு கிலோ பசும் சாணத்தில் 55% முதல் 65% வரை எரிவாயு கிடைக்கும். ஒரு மாடு 9 முதல் 15 கிலோ சாணம் ஒரு நாளைக்கு கொடுக்கிறது. நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு ஒருமாடு இருந்தாலே அவர்கள் சமையலுக்குப் போதுமான எரிவாயு கிடைக்கும்.

சித்த மருத்துவத்தில் மருந்துகளை புடம் போடுவதற்கும், கொசுக்கள் அண்டாதிருப்பதற்கும் வரட்டி பயன்படுகிறது. சாணத்தில் வீடு மொழுகும்போது விஷப்பூச்சிகள் அண்டாது. சாணத்தில் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற அதிகமான பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் புழுக்கள் உள்ளன. இவற்றின் நொதிக்கும் தன்மையால் இது இயற்கை உரமாக மாறுகிறது. விதை நடுவதற்கு முன்பு மாட்டுச்சாணத்தில் முக்கி எடுப்பதும் தொன்றுதொட்டு நடைபெறும் ஒன்று.

முக்கியத்துவம்: பசுவின் சாணத்தில் நைட்ரஜன், பொட்டாசியம், சல்பர், இரும்புசத்து, கோபால்ட்,மெக்னீசியம், காப்பர் போன்ற 24 ஊட்டச்சத்துக்கள் (மனிதர்கள் உண்ணக்கூடியது அல்ல) அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக இந்திய ரக பசுக்களில் கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துக்களும் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. பால், தயிர்,நெய், கோமியம், மாட்டுச்சாணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பஞ்சகாவ்யம் விவசாயப் பயிர்களுக்கு முழுமையான உயிர்ஊட்டம் தருவதாக உள்ளது.

இது 75% உரமாக வும், 25% பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது. பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் நாளடைவில் மண்ணில் மண்புழுக்களும், நுண்ணுயிரிகளும் அதிகரிக்கின்றன. மண்ணில் காற்றோட்டம் ஏற்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை. எனவே நல்ல மகசூல் கிடைக்கிறது.

தேவைகள்: மத்திய அரசு கால்நடைத்துறையின் மூலம் 1992-ல் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கணக்கெடுப்பில் 92 சதவிகித அளவுக்கு இருந்த பாரம்பரிய இனங்கள், இன்றைக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது தெரியவந்துள்ளது. மாடுகளிடமிருந்து பால் மூலமாக கிடைத்து வரும் 18% வருமானத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள் ளப்படுகிறது.

மாடுகளின் மூலமாக கிடைக்கும் சாணம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவற்றில் இருந்து வரும் 60% வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. பாரம்பரிய இனங்களைக் காப்பாற்றச் சொல்வது வெற்றுப் பெருமைக்காக அல்ல. இன்னும் பல ஆயிரம், பலகோடி ஆண்டுகளாக வாழப்போகும் நாளைய தலைமுறையின் சந்தோஷத்துக்காகத்தான்.

கழிவுகளால் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உரமாக்கல் (Composting)முறை பயனுள்ள நிலையான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். கழிவு சிதைப்பான் (Waste decomposer) மூலம் விரைவாக உரமாக மாற்றும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.

இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாட்டு சாணத்திலிருந்து நன்மை செய்யும் பாக்டீரிய நுண்ணுயிரிகளைப் பிரித்தெடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. கழிவு சிதைப்பான் ஒரு பாட்டில் (30 கிராம்) ரூ. 20 என்ற அளவில்கரிம வேளாண்மை தேசியமையங்களால் விற்பனை செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x