Published : 28 Aug 2023 04:18 AM
Last Updated : 28 Aug 2023 04:18 AM
"யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறருக்கு ஒரு இன்னுரை தானே"
என திருமூலர் தன் திருமந்திரத்தில் இறைவன் முதல் பிற உயிர்கள் வரை நாம் காட்ட வேண்டிய அக்கறையையும் அன்பையும் எடுத்துக் கூறுகின்றார். ஆனால் நாம் எந்தவித அக்கறையும் கவனமும் இன்றி புறக்கணிக்கும் உயிரினங்கள் கண்ணுக்கு தெரியாமல் வாழ்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கிறோமா?.
நாம் வேண்டாம் என வீசிஎறியும் குப்பைகளையும் கழிவுகளையும் தன் உணவாக உண்டு செரித்து, இந்தஉலகைத் தூய்மையாக்கும் நுண்ணுயிரிகளை பற்றி நாம் சிந்திக்கிறோமா?. அவைகள் இல்லாவிட்டால் நாம் என்ன ஆவோம் என்பதை இந்த கட்டுரையின் முடிவில் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
பேருயிரிகள் அனைத்தும் இவ்வுலகில் இருந்தாலும் அவைகளின் வாழ்விற்கு ஆதாரமாய் இருப்பது நுண்ணுயிர்களே. "நித்தம் நடக்குது சுத்தம்; அது நின்றால் பூமியே அசுத்தம்". பொதுவாக மண்ணில் வாழும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் கனிம கரிம மாசுபடுத்திகளை உணவாக உட்கொண்டு அவற்றை மட்கச் செய்வதால் அவை சிதைப்பவர்கள் எனப்படுகின்றன.
இவற்றுடன் சற்று பெரிய உயிரினங்களான மண்புழு, கரையான், அட்டைப் பூச்சிகளும் சிதைக்கும் வேலையைச் செய்கின்றன. குப்பைகளிலிருந்து நச்சு நீக்குதல், சூழலை தூய்மையாக்குதல் மற்றும் சுழற்சி விவசாயத்திற்கு இவை வழி வகுக்கின்றன.
மண்ணில் உறக்க நிலையில் உள்ளதழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்துக்களை பிரித்து தாவர வேர்கள் உணவாக உறிஞ்ச இவை உதவுகின்றன. தாவர வேர்களை மூடி போன்று பாதுகாத்து நோய்கள் அண்டாமல் காக்கின்றன.
இவை வாழும் உயிர்களுக்கும், அவை இறந்த பிறகு கனிம மறுசுழற்சிக்கும் அத்தியாவசியம். உதாரணத்திற்கு பாக்டீரியாக்கள், சயனோ பாக்டீரியாக்கள், ஆர்கிபாக்டீரியாக்கள் என்னும் தொன்மையான நுண்ணுயிரிகளும், பூஞ்சை, பச்சைப்பாசி, பழுப்புபாசிகள் போன்ற மெய் உட்கரு நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.
இவை உணவுச் சங்கிலி மற்றும் தனிம சுழற்சியில் பெரும் பங்கு வகிப்பதுடன், மனிதனுக்கு சில பயனுள்ள பொருள்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. வேளாண்மை, உயிரித் தொழில்நுட்பம், மதுபானத் தொழில், உணவு பதப்படுத்தும் தொழில் உள்ளிட்ட பல தொழில்களில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்கள் பயன்படுகின்றன.
சிலநுண்ணுயிர்கள் நைட்ரஜன் சுழற்சியில் முக்கியப் பங்காற்றுகின்றன. அத்துடன் சில நுண்ணுயிர்கள் மழை பொழிவதிலும், காலநிலை சுழற்சியிலும் பங்கு வகிப் பதாக அண்மைக் கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கப்பல்களில் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய் எதிர்பாராத விபத்துகளால் கடலில் கொட்டி விடும்போது அங்குள்ள உயிரினங்களும் நிலப்பரப்பும் பெருமளவில் பாதிக்கப்படுவதை செய்திகளில் காண்கிறோம். அவற்றை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல என்பதையும் நாம் அறிவோம்.
அப்படிப்பட்ட எண் ணெய்க் கழிவை சூப்பர் பக் எனும் எண்ணெய் விழுங்கி பாக்டீரியாவான சூடோமோனாஸ் புடிடா (Pseudomonas putida) அகற்றி மட்க செய்யப் பயன்படுகிறது. கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் படலத்தின் மீது வைக்கோல்களை பரப்பி அதன் மீது இந்த பாக்டீரியங்கள் தூவப்படுகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் கழிவை அவை உணவாக உண்டு செரித்து விடுகின்றன.
அமெரிக்க வாழ் இந்திய நுண்ணுயிரியல் துறை விஞ்ஞானி ஆனந்த்மோகன் சக்ரபர்த்தியால் கண்டறியப்பட்டு, வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் ‘சூப்பர் பக்’ (Super Bug) உயிரி தொழில்நுட்பத்தை, இங்கும் பயன்படுத்தலாம்.
மேலும் நுண்ணுயிரிகள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்தவண்ணமும், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தவண்ணமும் உள்ளன. அதேவேளையில் இவை நோய்க்காரணிகளாவும் திகழ்கின்றன என்பதால் குப்பைகளையோ மண்ணையோ கையாண்ட பிறகு கை கால்களை முறையாக கழுவிக் கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
- கட்டுரையாளர்: ஆசிரியர் (தாவரவியல்), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT