Published : 25 Aug 2023 04:30 AM
Last Updated : 25 Aug 2023 04:30 AM
பூமி உருவாகி 20 கோடி வருடங்கள் கழித்து பூமியை தாக்கிய விண்கற்களில் இருந்து உருவானதுதான் தங்கம். உலகில் பணம் வருவதற்கு முன்பே வந்துவிட்ட உலோகம், மிக விலை உயர்ந்த பொருள், நம் கலாச்சாரத்தில் தங்கம்முக்கியமான பொருளாகும். உலகில் உள்ள மொத்த தங்கத்தின் 11 சதவீதம்இந்திய குடும்பங்களில் உள்ளது. இந்தியாவின் மொத்த தங்க விற்பனையில் தென்னிந்தியாவின் பங்கு 60 சதவீதமாகும்.
தங்கம் விலை இறக்கை கட்டிபறந்தாலும், ராக்கெட் ஏறி உயர்ந்தாலும் நகைக் கடைகளில் கூட்டம் குறைவதே இல்லை. ஒரு கிராம் அல்லது அரை கிராம் பவுனாவது வாங்கிவிட வேண்டும் என அட்சய திருதி நன்னாளில் நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம் தங்கம் மீதான காதலை வெளிப்படுத்துகிறது. தங்க ஆசை நம் ஜீனிலேயே (மரபணு) கலந்து இருக்கிறது.
இலக்கியங்கள் காட்டும் அணிமணிகளிலும், கோவில் சிற்பங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களிலும் இது தெள்ளத்தெளிவாக விளங்கும். தமிழன்னையின் அணிகலனாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களைப் பாருங்கள். சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி, மணிமேகலை, சிலப்பதிகாரம் எல்லாமே அணிகலன் பெயரைக் கொண்டவை.
உச்சி முதல் பாதம் வரை அணிந்துகொள்ள பல்வேறு ஆபரணங்கள் உள்ளன. சூளாமணி எனப்படும் சடைப்பில்லை, சந்திரபிறை, சூரியபிறை, வாகுச்சுட்டி உள்ளிட்டவை தலையில் அணியும் அணிகலன்கள் ஆகும். பாம்படம், குண்டலம், தோடு, குழை, ஓலை, சந்திரபாணி, கம்மல், குதம்பை ,கர்ணப் பூ, செவிப் பூ ஆகியன காதுகளில் அணியும் நகைகள் ஆகும்.
மூக்குத்தி, புல்லாக்கு - மூக்குக்கு, ஒட்டியாணம் - இடுப்புக்கு, அட்டிகை, ஆரம், செயின் - கழுத்துக்கு, வங்கி, வளையல், மோதிரம் - கைக்கு, கொலுசு, தண்டை, மெட்டி- காலுக்கு. இவற்றை பெண்கள் மட்டும் இல்லாமல், ஆண்களும் பலவித நகைகளை அணிகிறார்கள்.
ஏன் இந்த மோகம்? தங்கம் செல்வ செழிப்பின், கௌரவத்தின் அடையாளம். தங்கம் இல்லாத குடும்ப விழாக்கள் இல்லை, பிறப்பிலிருந்து இறப்பு வரை தங்கம் சீர் செய்யும் முறை இருக்கிறது.
கல்யாணத்தில் நகை முக்கியப் பங்கு வகிக்கிறது. வளைகாப்பு, பெயர் சூட்டுதல், காதுகுத்து எல்லாவற்றிலும் சிறு அளவிலாவது தங்கம் இடம் பெற்று விடுகிறது. பணம் மதிப்பிழந்து போகலாம். ஆனால், தங்கமோ விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கம் சேமிக்க எளிமையானது.
நகை சேமிப்பில் ஈடுபடாத குடும்பத் தலைவிகளே இல்லை . பெண்கள் வீடு, நிலத்தை விட தங்க நகைகளை பெரும் சொத்தாக நினைக்கிறார்கள். சமுதாயம் நகைகளைத்தான் பெண்களின் உடைமைப் பொருளாகப் பார்க்கிறது.
அவசரத் தேவைகளுக்கு எளிதாக பணமாக மாற்றக்கூடிய சொத்து தங்கம்தான். அதை எடுத்துச் செல்வதும் எளிது. நம் நாட்டில் தங்க நகை செய்யும் முறை ஐந்தாயிரம் வருட பாரம்பரியம் கொண்ட கலையாகும். கோவில் நகைகள் செய்யும்கலை சோழர்காலத்தில் தோன்றியது. நாகர்கோவிலில் கோவில் நகைகள் செய்யும் கலை தனித்துவமானது. தங்கம் பலருக்கும் வேலை தரும் தொழிலாகவும் இருக்கிறது.
பாதுகாப்பான, எளிதில் பணமாக்கக்கூடிய முதலீடாக தங்கம் உள்ளது. தமிழ்த் திரையுலகின் பிரபல திரைப்படமான பாசமலர் படத்தில், "தங்க கடியாரம், வைர மணியாரம் தந்து மணம் பேசுவார்" என்று மாமனைப் பற்றி பாடும் அளவிற்கும், "தங்கமே" எனபிள்ளைகளை கொஞ்சம் அளவிற்கும்தங்கம் நம் உணர்வுப்பூர்வமாக பாரம்பரியத்தில் கலந்து இருக்கிறது.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், முதல்வர், நவபாரத் வித்யாலயா பள்ளி, இ. வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT