Published : 24 Aug 2023 04:30 AM
Last Updated : 24 Aug 2023 04:30 AM
மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு சென்று மாணவர்களை வாசிக்கவைப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தகம் தந்து ஒரு கதை வாசியுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்கள் வாசிப்பதை கவனிப்பதே என் வேலை.
நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட வாசிக்க சிரமப்பட்டனர். கதைகளில் இருந்த கடினமான சொற்கள்,பெரிய பெரிய பத்திகள் வாசிப்பதில் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. அப்போதுதான் கவனித்தேன். நான்காம் வகுப்பு படிக்கும் நிர்மலா ஒரு மூலையில் தலையை கீழே தொங்கப் போட்டபடி உட்கார்ந்திருந்தாள். கையில் எந்த புத்தகமும் இல்லை. சத்தம்வராமல் அழுது கொண்டிருந்தாள்.
‘‘என்ன ஆச்சு?’’ என பதறியபடி விசாரித்ததும், "எனக்கு படிக்கத் தெரியாது மிஸ்" என மீண்டும் அழுதாள். "சரி நீ படிக்க வேணாம்" என அவளை சற்று பேசி ஆசுவாசப்படுத்தினோம். அவளை தன்னார்வலருடன் விளையாட வைத்து, மெல்ல எழுத்துக்கள் கூட்டிக் கூட்டி படிக்க வைத்தோம். நிர்மலா வாசிப்பதற்கு ஏதுவாக எளிமையான புத்தகங்கள் தேடினேன். கிடைக்கவில்லை.
ஏன் வாசிக்க முடியவில்லை? - இன்றைய அரசு பள்ளிக் குழந்தைகளின் வாசிப்புத் திறன் மிகவும் பின்தங்கியுள்ளது. "வெறும் 27.5% மாணவர்களால் மட்டுமே இரண்டு எழுத்துச் சொற்களை வாசிக்க முடிகிறது" எனக் குறிப்பிடுகிறது 2022 ASER அறிக்கை. அதிர்ச்சியடைய எதுவுமில்லை.
இதற்கு காரணமாக கரோனோ காலத்தை மட்டுமே குறைச்சொல்லி விட முடியாது. அதற்கு முன்னரும் இதே நிலைதான். நிர்மலா வாசிக்க தெரியாமல் இருப்பதற்கு பள்ளி, வகுப்பறை, ஆசிரியர், கற்பித்தல் முறைகள், பாடத்திட்டம் போன்றவையே பெரும்பாலும் காரணமாக முன்வைக்கப்படுகின்றன.
யாருக்கானது பாடப்புத்தகங்கள்: "பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கானது" என்ற சிந்தனையே இங்கு இல்லை. பாடப்புத்தகங்களின் மொழி எளிமையாக இல்லாததே நிர்மலா படிப்பில் ஆர்வம் இல்லாததற்கு முதன்மை காரணம். அவளைப் படிப்பை விட்டு ஓட வைக்கிறது. இதைப் பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
ஒரு நாள். நானும் நிர்மலாவும் வாசிக்க உட்கார்ந்தோம். ஒரு பக்கத்தில் வரிக்கு வரி தெரியாத சொற்கள். ஒரு சொல்லுக்கு அர்த்தம் புரிந்து அடுத்தச் சொல்லுக்கு போவதற்குள் வாசிக்கும் ஆர்வத்தை இழந்துவிட்டாள். அப்போதுதான் கதைப்புத்தகங்களின் கடின மொழி குறித்து யோசிக்க ஆரம்பித்தேன்.
வாசிப்பில் தடுமாறும் குழந்தைகளுக்கு தெரிந்த, எளிய சொற்கள்இருந்தால் ஆர்வமாக வாசிக்கிறார்கள். Known to Unknown மிக முக்கியமான கற்பித்தல் முறை. தெரிந்த சொற்களில் இருந்து தானே தெரியாதசொற்களை அறிந்து கொள்ள முடியும். பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே தமிழ் படிக்கிறார்கள். அவர்களின் மொழித்திறனும் கவலைக்கிடமாக இருக்கும் போது, அவர்களுக்காக உருவாக்கப்படும் கதைப்புத்தகங்களில் எவ்வளவு எளிமையான மொழி கையாளப்பட வேண்டும்!?
"வளாகம்", "பிரயாணம்", "பூர்விகமாகக் கொண்டது", "பெருமிதம் மிளிர்ந்தது", "வியப்பு அகலாத மனதோடு", "முகப்புக் கூரை", "மாட்டேனென்று", "பரிவு காட்டும்","தேரோட்டும் சாரதியென", "மாமிசப்பட்சிணிகள்", "பரிசுப்பொட்டலங்கள்" "இதெல்லாம் வாசிக்க கஷ்டமா இருக்கு" என்றனர். மாணவர்கள் புத்தகத்தின் மீது ஆர்வம் காட்டவில்லை என்பதற்கு இக்கடினச்சொற்களே காரணம் என்பதை ஆய்வு நடத்தியதன் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.
இப்படி தொடர்ச்சியாக கள ஆய்வுகள் செய்யும் போது,"எளிமையான மொழி மட்டுமே வாசிப்பிற்குள் நிர்மலாவைக் கொண்டு வரும்" என்பதை உணர முடிகிறது.
நிர்மலாவைப் பயமுறுத்தாத மிக எளிய மொழி குறித்த உரையாடலை இனியாவது தொடங்க வேண்டும். இல்லையெனில் எதிர்கால தலைமுறை வாசிப்பின் சுவை அறியாமலே போய்விடுவார்கள். ஒரு தலைமுறையின் வாசிப்பு மட்டுமே தாய்மொழியை காப்பாற்றும்.
- கட்டுரையாளர் அரசு பள்ளி ஆசிரியர், சிறார் எழுத்தாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT