Last Updated : 18 Aug, 2023 06:25 AM

 

Published : 18 Aug 2023 06:25 AM
Last Updated : 18 Aug 2023 06:25 AM

விருதுநகர் | அரசு பள்ளி மாணவர்கள் 7,395 பேர் கல்லூரி களப்பயணம் - ‘நான் முதல்வன்' திட்டத்தில் சிறப்பு ஏற்பாடு

மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரிகளை பார்வையிடச் செல்லும் விருதுநகர் மாவட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் களப்பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்.

விருதுநகர்: உயர் கல்வி பயிலும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 7,395 பேர் பல்வேறு கல்லூரிகளுக்கு களப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ‘நான்முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளிமாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் 100 சதவீதம் பேர் கல்லூரிகளில் சேர்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், அடுத்த ஆண்டு கல்லூரிகளில் சேர்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் களப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த1,200 மாணவ, மாணவிகள் நேற்றுமதுரை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப் பட்டனர். மாணவர்கள் களப்பயணம் சென்ற பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

களப்பயணம் குறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தின் 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் கலை, அறிவியல் பிரிவு மாணவர்கள் உட்பட அனைத்து பாடப் பிரிவுகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் மொத்தம் 7,395 பேர் களப்பயணம் அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள், வசதிகள், படித்துமுடிக்கும்போது கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு இப்பயணத்தில் எடுத்துரைக்கப்படும். நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்று அடுத்த கல்வியாண்டில் 100 சதவீதம் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிப்பதற்காகவே இந்த கல்லூரி களப்பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x