Last Updated : 14 Aug, 2023 04:10 AM

 

Published : 14 Aug 2023 04:10 AM
Last Updated : 14 Aug 2023 04:10 AM

பல்துறை வித்தகர் கமலாதேவி!

அன்றைய மதராஸ் மாகாணத்தில் மங்களூரில் செல்வாக்கு மிக்கக் குடும்பத்தில் பிறந்து, 14 வயதில் திருமணமாகி, 16 வயதில் இணையை இழந்தார் கமலாதேவி. பிறகு லண்டனில் உயர்கல்வி முடித்து இந்தியா திரும்பியவர், 1923இல் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். எழுத்தாளரும் கவிஞருமான ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயவைத் திருமணம் செய்துகொண்டார்.

1926 இல் சென்னை மாகாணச் சட்டசபைக்குப் போட்டியிட்டார். இதன் மூலம் ஆட்சிப் பதவி ஒன்றுக்கான தேர்தலில் நின்ற முதல் இந்தியப் பெண் என்கிற சிறப்பைப் பெற்றார். 1927இல் அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்தினார்.

உப்புச் சத்தியாகிரகத்தில் பெண்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து, காந்தியின் சம்மதத்தைப் பெற்றார். ஆங்கிலேய அரசின் தடையை மீறி உப்பு எடுத்ததால், சட்டத்தை மீறிய குற்றத்துக்காகச் சுமார் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்தார் கமலா.

பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா சென்றபோது எலினார் ரூஸ்வெல்ட், பெண்ணுரிமைப் போராளி மார்கரெட் சாங்கர் ஆகியோருடன் நட்புகொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது லண்டனில் இருந்த கமலா, பல்வேறு நாடுகளில் இருந்த இந்தியர்களை ஒன்றுதிரட்டி, விடுதலைப் போராட்டத்துக்கான ஆதரவைப் பெற்றார்.

நாடு திரும்பியவர், இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட சுமார் 50 ஆயிரம் மக்களுக்கு ஃபரிதாபாத்தில் தங்கும் இடம், உணவு, மருத்துவம் கொடுத்துக் காப்பாற்றினார். குணமடைந்த ஏராளமான பெண்களின் வாழ்வாதாரத்துக்குக் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொடுத்தார். கலை, கைவினைப் பொருள்களை மேம்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினார். நாடு முழுவதும் மத்தியக் கைவினைத் தொழில் காட்சியகத்தை (Central Cottage Industries Emporium) அமைப்பதில் பெரும் பங்காற்றினார்.

பெண்களின் உரிமைகள் தொடர்பாகப் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற பெண்ணியலாளரான குளோரியா ஸ்டீனம் இவருடைய புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு இருந்த கடும் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து மறுமணம், விவாகரத்து, திரைப்பட நடிப்பு போன்றவற்றில் முன்மாதிரியாகத் திகழ்ந்த கமலா, 85 வயதில் மறைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x