Published : 14 Aug 2023 04:33 AM
Last Updated : 14 Aug 2023 04:33 AM
நம் எதிரில் 5 அடி தூரத்தில் இருக்கும் ஒரு பொருள் 5 அடி தூரத்தில் இருப்பதாகத் தெரிவது மெய். ஆனால், கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள ஞாயிறும், திங்களும், நட்சத்திரங்களும் சில மைல் தூரத்திலிருப்பது போல் தோன்றுவது கண்களின் மயக்கம்.
வாழ்க்கைப் பாதையில் நம்மில் பலருக்கு, அருகில் இருக்கும் குறிக்கோளின் வெற்றி அதனை நோக்கி செல்லச்செல்ல, கண்களின் மயக்கத்திற்கு நேரெதிரானமனதின் மயக்கத்தால், விலகிச் சென்றுகொண்டேயிருப்பது போல் தோன்றும். அதிலும் தோல்விகளுக்கிடையே வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டிருப்ப வர்களுக்கு வெற்றி இன்னும் வெகு தூரத்தில் இருப்பது போல் தோன்றும்.
ஆனால், இந்த மனதின் மயக்கத்தை புறந்தள்ளி வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தால், அதை தொட்டுவிட முடியும் என்பதை புரிந்துணர்ந்து கொண்டவர்கள் தொடர்ந்து ஓடி வெற்றி பெறுகிறார்கள்.
மனதின் மயக்கத்தால், வெற்றி இன்னும் வெகு தூரம் இருக்கிறது என்று மனம் தளர்ந்து நின்று விடுபவர்களுக்கு அந்த வெற்றி, தூரத்தில் தான் இருக்கும். ‘’தோல்விகளுக்கு எல்லையும் எண்ணிக்கையும் உண்டு. ஆனால், தன்னம்பிக்கைக்கு எல்லையே இல்லை’’.
எத்தனை முறை தோற்க முடியும். ஆயிரம் முறைகள்? அல்லது இரண்டாயிரம் முறைகள்? ஆனால், அதற்கு அடுத்த முறை வெற்றி வந்தே தீரும். தாமஸ் ஆல்வா எடிசன் பத்தாயிரம் முறை தோல்வியுற்ற பின் தான் பல்பை கண்டுபிடித்தார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும்,
பத்தாயிரம் முறை தோல்வியிலும் எடிசன் தளர்ந்து போகாததற்கு காரணம் அவரின் தன்னம்பிக்கையின் உயரம் இமயம் போல் பெரிது. அதுமட்டுமன்றி, அத்தோல்விகளைத் தோல்விகளாக எண்ணாமல் சிறு சறுக்கல்கள், அனுபவம் எனும் கற்றறிதல்கள், பகுதி வெற்றிகள் என எண்ணியிருக்கலாம்.
நாம் தோல்வியாகக் கருதும் ஒவ்வொன்றும் நமக்கு அனுபவம் எனும் கற்றறிதலை கொடுக்கின்ற செயல்களாகவும் மாறுகின்றன. இந்த கற்றறிதலினால், புதிய உத்திகள் நமக்குள் எற்படும் வாய்ப்புகள் அதிகமாவதால், நம் செயலின் தன்மை மேன்மையுற்று சிறப்பானதொரு வெற்றிக்கான வாய்ப்பும் அதிகமாகிறது.
நாம் தோல்வியாக கருதியவை தோல்வியல்ல. அவை பகுதி வெற்றிகள். 100 கி.மீ.சாலை பயணத்தில் ஒவ்வொரு 1 கி.மீ. கல்லையும் கடப்பது பகுதி வெற்றி என்பது போல் தான், குறிக்கோளை அடையும் பயணத்தில் ஏற்படும் தோல்விகள் ஒவ்வொன்றும் பகுதி வெற்றிகளாகின்றன. ‘’வெற்றி என்பது பல சிறு தோல்விகளின் (பகுதி வெற்றிகளின்) கூட்டலேயாகும்’’.
இந்த மனப்பான்மையைப் அனைவரும் வளர்த்துக்கொண்டால், எத்தனை முறை தோல்வியுற்றாலும் அல்லது எவ்வளவு பெரிய தோல்வியாக இருந்தாலும் என்றும் மனம் தளரமாட்டோம் மற்றும் அஞ்சிநடுங்கி இன்னுயிரை மாய்த்துக்கொள்ளவும் மாட்டோம்.
நிறைய முறை முயன்றும் வெற்றிநம் வசமாகவில்லை என்று குறிக்கோளை கைவிட்டாலும், அதனால் ஏற்படுகின்ற இழப்பு இன்னுயிரை மாய்த்துக்கொள்வதைவிட பெரிய இழப்பாக இருக்கப்போவதில்லை. ‘’வாழ்க்கை என்பது வாய்ப்புகளின் அட்சயபாத்திரம்’’. அது எப்பொழுதும் நமக்கு புதிய வாய்ப்புகளை அளித்துக் கொண்டேயிருக்கும்.
வாழ்க்கை எடிசனுக்கு தந்த வாய்ப்புகளில் ஒன்று பல்பை கண்டுபிடித்தலாகும். அதில், பல சறுக்கல்கள், கற்றறிதல்கள் மற்றும் தோல்வியெனும் பகுதி வெற்றி களை கடந்து உறுதியாக நின்று மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றார். அது ஒரு வகை வெற்றிப்பயணம்.
வாழ்க்கை தந்த நிறைய வாய்ப்புகளில் சறுக்கிய எனக்கு அது கொடுத்துள்ள அடுத்த வாய்ப்பு தான் இந்த எழுதுதலாகும். இதில் சறுக்கினாலும் வெற்றிபெறக்கூடிய அடுத்த வாய்ப்பினை வாழ்க்கை அளிக்கும் என்ற நம்பிக்கையோடு ஒடிக்கொண்டிருப்பது மற்றொரு வகையான பயணம். அதனால், பயணத்தை முடித்துக்கொள்ளாமல், தன்னம்பிக்கையோடு ஓடுவோம். வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டேயிருப்போம்.
- கட்டுரையாளர்: எழுத்தாளர், வல்லமை சேர் மற்றும் வேர்களின் கண்ணீர் புத்தகங்களின் ஆசிரியர், சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT