Published : 10 Aug 2023 04:25 AM
Last Updated : 10 Aug 2023 04:25 AM
“வேணாம்…விட்ரு…அழுதிடுவேன்…” என்ற இந்த வசனத்தை ஒரு தமிழ்த் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சியாக பயன்படுத்தி இருப்பார்கள். பலவீனமானவராக உருவாக்கப்பட்ட அந்த நகைச்சுவைக் கதாபாத்திரம், பலசாலியான ஒருவர் அடிப்பதை தாங்க இயலாமல், இந்த வசனத்தைக் கூறுவதாக அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
பலவீனமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள இயலாமல் அழுவது, கோழைத்தனம் மட்டுமல்லாமல், மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். பலவீனம், இயலாமை, ஆகியவற்றால் வரும் அழுகை, ஒருவரின் மன பாரத்தை குறைப்பதற்குப் பதிலாக, மனதிற்குள் வஞ்சகம், பழிவாக்குதல், குரூர புத்தி போன்ற தவறான எண்ணங்களை உருவாக்கி, வாழ்வைப் பாழாக்கிவிடும்
எதிர்மறை உணர்வுகள்: அழுவதால், எந்தப் பிரச்சினையிலிருந்தும் விடுபட இயலாது. இந்தஅழுகை உளவியல் ரீதியாக பலஎதிர்மறை உணர்வுகளை தோற்றுவிக்கும். பலம் பொருந்தியவனை தன்னால் திருப்பி அடிக்க இயலவில்லையே என்ற இயலாமை, அந்த இயலாமையினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, தான் எதற்கும் லாயக்கில்லாதவன் என்ற சுய பச்சாதாபம், தான் அனுபவித்த வலி அவனுக்கும் ஏற்பட வேண்டும் என்ற தவறான சிந்தனை போன்ற எதிர்மறை எண்ணங்கள் அவனுள்ளே தோன்றி, அவனது தன்னம்பிக்கையை குலைத்து எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கிவிடும்.
அவ்வாறெனில் அழுகை என்பது அறவே நீக்கப்பட வேண்டிய ஒன்றா? இல்லை. அழுகை என்ற வெளிப்பாடு தேவை தான். ஆனால், அந்த அழுகையை நாம் எப்போது வெளிப்படுத்துகிறோம்? எதற்காக வெளிப்படுத்துகிறோம்? என்பனவற்றைப் பொறுத்தே அதன் மதிப்பீடு அமையும்.
நம்மால் இனி மாற்றவே முடியாத ஒரு நிகழ்வு ஏற்படும்போது அதாவது, நெருங்கியவர் மரணம் போன்ற மிகப்பெரிய துக்கம் ஏற்படும் போது கட்டாயமாக அழ வேண்டும். இந்த அழுகை நம் மன பாரத்தை சற்று மட்டுப்படுத்துவதோடு, நம் உள்ளே உள்ள துக்கத்தை வேறு விதமாய் வெளிப்படுத்த உதவும்.
மாற்ற முடியாத துக்கத்தை தவிர வேறு எதற்காகவும் அழக்கூடாது என்பதை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டியது நமது கடமையாகும்.
தேவையில்லாமல் எதற்கெடுத்தாலும் அழுவது, ஒப்பாரி வைப்பது,ஓலமிடுவது போன்றவை பிரச்சினைக்குரிய தீர்வினை யோசிக்க விடாமல், அந்தப் பிரச்சினைக்குள்ளேயே நம்மைஉழலச் செய்துவிடும்.
பிரச்சினை ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ, ஏமாற்றம் ஏற்பட்டாலோ அதற்காக மனம் வருந்தி அழுவது தீர்வல்ல என்ற உளவியல் உண்மையை குழந்தைப் பருவத்திலேயே புரிய வைக்க வேண்டும்.
உடலளவில் நாம் பலவீனமானவர்களாக இருக்கலாம். அந்த உடல் பலத்தை, எப்போது வேண்டுமானாலும் நம்மால் உருவாக்கிக் கொள்ள இயலும். அதற்கு பயிற்சியும், முயற்சியும் இருந்தாலே போதும். அதனை நம்மால் எளிதில் சாதித்துவிட முடியும்.இவ்வாறு, நம்மால் செய்ய இயலக்கூடிய விஷயத்திற்காக ஒருபோதும் அழக்கூடாது என்ற தெளிவை நம்குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
போட்டியில் ஜெயிக்காவிட்டால் பலர் அழுவதை நாம் காண்கிறோம். தோல்வி என்பது நிரந்தர இழப்பு அல்ல என்பதையும் முயற்சி செய்தால் அடுத்த முறை நம்மால்
வெற்றி பெற முடியும் என்பதையும் புரிய வைக்க வேண்டும். நம்மால் மாற்ற முடியும் என்ற செயல்களுக்கு அழுவது தவறு என்பதை உணர்த்த வேண்டும்.
மொத்தத்தில், மன அளவில் ஏற்படும் பலவீனத்தை புறம்தள்ளி, பலமான சிந்தனைகளை கைக்கொண்டு, வளமான வாழ்வுக்கு அடித்தளம் அமைக்க வேண்டும். அதற்கு அழுகையைத் துறந்து, தீர்வினை சிந்திக்கும் பழக்கத்தை சிறு வயதிலேயே ஏற் படுத்த வேண்டும்.
- கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, துண்டல்கழனி, காஞ்சிபுரம் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT