Last Updated : 08 Aug, 2023 04:25 AM

 

Published : 08 Aug 2023 04:25 AM
Last Updated : 08 Aug 2023 04:25 AM

நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துகள்...

உடல்நலம் இழந்தால், எல்லாம் இழக்கப்படுகிறது. இன்றைய நமது நிலை இதுவே. உழைப்புக்கேற்ற உணவை உண்டு, ஆரோக்கியத்தை தம் வசப்படுத்தி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். அவர்கள் மலைகளிலும், காடுகளிலும் விளைந்த சிறுதானியங்களையே பிரதான உணவாக உண்டு வந்தனர். கம்பு, சோளம், வரகு, பனிவரகு, கேழ்வரகு (ராகி), சாமை, தினை, குதிரைவாலி போன்றவையே சிறுதானியங்கள். அளவில் சிறியனவாக இருப்பதால் இவை சிறுதானியங்கள் என அழைக்கப்பட்டன.

முக்கியத்துவம்: நம்முடைய பிரதான உணவாகக் கருதப்படும் அரிசியில் இருப்பதைவிட அதிக சத்துக்களையும், வைட்டமின் களையும் சிறுதானியங்கள் கொண்டுள்ளன. இவை புரத பசையமற்ற (Gluten), குறைவான சர்க்கரை அளவு கொண்ட தானிய வகையாகும். இவற்றில் பொதுவாக 7-12% புரதம், 2-5% கொழுப்பு, 65-75% கார்போஹைட்ரேட், 15-20% உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துக்கள், தாவர ரசாயனங்கள் மற்றும் அமினோ அமிலங்களும் உள்ளன.

கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற தாதுக்களின் அதிக செறிவு பெற்றிருப்பதன் மூலம்"சிறந்த" சிறு தானியமாக கம்பு விளங்குகிறது. கணிசமான எண்ணெய் சத்தும், கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் E (2 mg/100 g) கம்பில் உள்ளன. பொதுவாக அதிக பயன்பாடு மற்றும் பிரதான உணவாக இருப்பதால் சோளம் சிறுதானியங்களில் "அரசன்" என அழைக்கப்படுகிறது. அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கிய கேழ்வரகு "ஆரோக்கிய சிறுதானியம்" (Healthiest millet) எனப்படுகிறது.

குறிப்பாக சிறுதானியங்களை உட்கொள்ளும்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும். உடல் பருமன் குறைவதுடன், இதயநோய் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பாரம்பரிய அரிசி வகைகளையும், சிறு தானியங்களையும் அன்றாட முக்கிய உணவாக உட்கொள்ளப் பழகிக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக வாழலாம் என்பதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவசியம். எனவே தான் இந்த ஆண்டு (2023) சிறுதானிய ஆண்டாக மத்திய அரசுஅறிவித்துள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் சிறுதானிய உணவுத் திருவிழா நடத்தலாம்.

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்: சிறுதானியங்களின் விளைநிலங்கள் குறிப்பிட்ட பண்பட்ட நிலங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அவை பொதுவாக மலைகளிலும் காடுகளிலும் வறட்சியான இடங்களிலும் கூட வளரக்கூடியவை. புல் வகைத் தாவரங்களில் விளைவதால் அதிக நீர் தேவையில்லை. அதிக பராமரிப்புச் செலவு இல்லை.

சிறுதானியங்களை பட்டை தீட்டாத(unpolished) முழு தானியமாக பயன்படுத்துவது மட்டுமே முழுமையான பலன் தரும். சிறுதானியங்களை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்து சமைக்க வேண்டும். சிறுதானிய உணவை அறிமுகப்படுத்தும்போது சிறிது சிறிதாக கூழ் போன்று எடுத்துக் கொண்டு பின்பு அவற்றை முழுதானிய சாதமாக சமைத்து உண்ணலாம்.

ஒரு நாளைக்கு ஒரு சிறுதானிய வகை உணவு மட்டுமே சாப்பிடுவது நல்லது. மூன்று வேளையும் ஒரே வகையான உணவைச் சாப்பிடுவதால் சரிவிகித உணவு கிடைக்காமல் போகலாம். தண்ணீர் ஊற்றி வைத்து லேசாக புளிக்க வைத்து சாப்பிடுவது செரிமானத்திற்கும் முழுமையான சத்துக்களை பெறவும் உதவும்.

சத்துமாவாக அரைத்து சாப்பிடுவது பெரிய அளவில் நன்மை தராது. காரணம் சத்துக்கள் சிறு சிறு அளவில் இருப்பதால் முழுமையாகக் கிடைக்காது. சிறுதானிய நொறுக்கு தீனிகளும் பெரிய அளவில் பயன்தராது.

எனவே, கம்பங்கூழ், ராகிக்களி, சோளச்சோறு, சாமை அரிசி சோறு, குதிரைவாலி பொங்கல், வரகு அரிசி தோசை, கேழ்வரகு அடை, தினை மாவுப் புட்டு, பனி வரகு உப்புமா. உங்கள் பட்டியல் இன்னும் நீளும் என்பதில் சந்தேகமில்லை.

- கட்டுரையாளர்: ஆசிரியர் (தாவரவியல்), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x