Published : 31 Jul 2023 04:18 AM
Last Updated : 31 Jul 2023 04:18 AM
கட்டிட வடிவமைப்பில் தனித்துவத்தை யும், வளம் மிகுந்த பாரம்பரியத்தையும் இந்தியா கொண்டிருக்கிறது. இவற்றுடன் நவீனத்தையும் சுதந்திரத்திற்குப் பிந்தைய கட்டிடங்கள் சுவீகரித்துக்கொண்டுள்ளன. அத்தகைய கட்டிடங்களில் முக்கியத்துவம் வாய்ந்த சில:
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, சென்னை: சென்னை அண்ணா சாலை ஓமந் தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்து்ள இந்தக் கட்டிடத்தை பெர்லினைச் சேர்ந்த கட்டிடக்கலை வல்லுநர் ஹுயுபெர்ட் நீன்ஹாஃப் வடிவமைத்துள்ளார். தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட இந்த வளாகம், 2011இல் தமிழ் நாட்டில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், தமிழ் நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
விதான சௌதா, பெங்களூரு: பெங்களூருவிலிருக்கும் இந்தக் கட்டிடம் நவீன திராவிட கட்டிடக் கலையின் நிகழ்கால அதிசயம். இடைக்கால சாளுக்கியர், ஹொய்சாளர், விஜயநகரப் பேரரசு ஆகியவற்றின் முதன்மைக் கூறுகளை இந்தக் கட்டிடம் கொண்டிருக்கிறது. 1956இல் கட்டப்பட்ட இதுவே கர்நாடக மாநில சட்டமன்றம்.
லோட்டஸ் டெம்பிள், டெல்லி: சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் லோட்டஸ் டெம்பிள் அமைதியும் அழகும் நிரம்பியது. பஹாய் மதத்தினரின் வழிப்பாட்டு தலமான இந்தக் கோயில் வெள்ளை நிறத்தில், தாமரை மலரின் வடிவத்தில் அமைந்துள்ளது. 1986இல் இதை வடிவமைத்தவர் கட்டிடக் கலைஞர் ஃபரிபோர்ஸ் சாஹ்பா.
வள்ளுவர் கோட்டம், சென்னை: திருவள்ளுவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச்சின்னமே வள்ளுவர் கோட்டம். 1975இல் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டிப்பட்டது. திருவாரூர் தேரைப் போன்று செதுக்கப்பட்டிருக்கும் கல் தேர், வள்ளுவர் கோட்டத்தின் மையப்பகுதியாக உள்ளது. கோட்டத்தின் மேல்தளமான வேயா மாடத்தில் கருங்கல்லில் செதுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை உயிரோட்டமாக நிறுவப்பட்டுள்ளது.
(தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT