Last Updated : 25 Jul, 2023 04:25 AM

 

Published : 25 Jul 2023 04:25 AM
Last Updated : 25 Jul 2023 04:25 AM

வாசிப்பு இயக்கம் எனும் புது வாசல்

நுழை... நட.... ஓடு...பற.... என்ற வார்த்தைகள் 11 மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் இன்று ஒளிர்ந்து் கொண்டிருக்கிறது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வாசிப்பு மேம்பட, நற்பண்புகள் வளர பள்ளிக் கல்வித்துறை "வாசிப்பு இயக்கம்" என்கின்ற ஒரு புதுவாசலை கடந்த 21-ம்தேதி திறந்து வைத்துள்ளது. ஆழமான கருத்துக்களுடன், அழகிய படங்களுடன், எளிய நடையில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த சின்ன,சின்ன புத்தகங்கள் மாணவ மாணவிகளின் மனங்களை கொள்ளையடிக்கப் போகிறது.

11 ஒன்றியங்களில்... வாசிப்பு இயக்கம் முதல் கட்டமாகதிருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம் சிறுவிடைமருதூர் ஒன்றியம், சென்னை தண்டையார்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் ஒன்றியம், கடலூர் மாவட்டத்தில் அண்ணா கிராமம், விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர்ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டத்தில்திருச்செந்தூர் ஒன்றியம், கோவைமாவட்டத்தில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஈரோட்டில் சத்தியமங்கலம் ஒன்றியம் ஆக 11 ஒன்றியங்களில் முதல் கட்டமாக வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது.

வாசிப்பு இயக்கத்திற்கான புத்தகங்கள்

மாணவரின் வாசிப்பு திறனைக் கண்காணிக்க 11 ஒன்றியங்களுக்கும் 163 பேர் களப்பணியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி கடந்த மாதம் இரண்டு நாள் மதுரையில் நடைபெற்றது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்குசென்று கண்காணிக்க வேண்டும்.

அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படித்துவரும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2வரையிலான மாணவ மாணவிகள் வாசிப்புக்காக புத்தகம் வழங்கப் பட்டுள்ளது. படிப்படியாக வாசிப்புமேம்படவும், வாசிப்பின் வேகத்திற் கும், வகுப்புக்களுக்கு தக்கபடி வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் நுழை, நட, ஓடு,பற, பாடல்.... என்ற நிலைகளில் பிரிக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. குட்டி குட்டி புத்தகங்களாய் கண்ணைக்கவரும் வகையில் அழகிய படங்களுடன் எளிய நடையில், ஆழமான கருத்துக்களுடன் மிகக் குறைந்த பக்கங்களுடன் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொன்மொழிகள்: புத்தகங்களின் பின்அட்டையில்,"புத்தகம் என்பது சுமையல்ல சுமையை இறக்கிப் பறக்க வைக்க உங்களுக்குக் கிடைத்த இறக்கை அது", "சிறந்த புத்தகங்களை வாசிப்பது என்பது சிறந்த மனிதர்களுடன் பேசுவதை போன்றது", "எப்போதும் வசந்த காலம் தான் புத்தகங்களோடு வாழ்பவனுக்கு" இதுபோன்ற பொன்மொழிகள் அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு.

ஒவ்வொரு தொடக்க பள்ளிகளுக்கும் 109 புத்தகங்கள் கொண்ட ஒரு செட் வழங்கப்பட்டுள்ளது. 1,2-ம் வகுப்புக்கு தலா 12 புத்தகங்களும், மூன்று,நான்காம் வகுப்புகளுக்கு தலா 23 புத்தகங்களும், ஐந்தாம் வகுப்பிற்கு 39 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் தலா 53 புத்தகங்களும், மேல்நிலைக் கல்வி வகுப்புகளுக்கு தலா 30 புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. 53 தலைப்புகளில் கதை புத்தகங்களும் உள்ளன.

வாசிப்புக்கு புது வாசல்: ஒவ்வொரு நூல்களும் நல்ல பல கருத்துக்களை மாணவர்களுக்கு சொல்வதாக அமைந்துள்ளது. வண்ண வண்ண படங்கள், எளிய நடை, பெரிய எழுத்துக்கள், மிகக் குறைவான பக்க அளவு, மாணவர்களை தொடர்ந்து வாசிக்க தூண்டும் வகையில் இருக்கிறது. "வாசிப்பு இயக்கம்" அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒரு புது வாசலை திறந்துள்ளது. புது வாசலில் மகிழ்ச்சியுடன் உள்ளே நுழையும் மாணவர்கள் படைப்பாளியாகுவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x