Published : 25 Jul 2023 04:15 AM
Last Updated : 25 Jul 2023 04:15 AM
சுதந்திர இந்தியாவில் மக்களவைக்கான முதல் பொதுத் தேர்தல் 25 அக்டோபர் 1951 முதல் 21 பிப்ரவரி 1952 வரை நடைபெற்றது. 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள்தொகை 36 கோடி. தேர்தலில் வாக்களிக்கும் வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட, சுமார் 17.3 கோடி பேர் வாக்களிக்கும் தகுதிபெற்றனர்.
பருவநிலை, போக்குவரத்து உள்ளிட்ட காரணங் களால் 68 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 1,96,084 வாக்குச்சாவடிகளில், பெண்களுக்குத் தனியாக 27,527 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
489 இடங்களுக்காக 53 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,949 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 18% ஆக இருந்த இந்தியாவின் எழுத்தறிவு விகிதம், வாக்குப்பதிவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. எனவே, இந்திய வாழ்வின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்த அம்சங்கள் சின்னங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன.
நாட்டின் முதல் வாக்காளர்: வாக்குப்பதிவு 45.7% ஆகப் பதிவானது. 25 அக்டோபர் 1951 அன்று இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த முதல்கட்ட தேர்தலில் வாக்களித்த சியாம் சரண் நெகி இந்தியாவில் முதல் வாக்காளராக வரலாற்றில் இடம்பெற்றார். நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் செயல்பட்டார்.
போட்டியிட்ட 489 இடங்களில் 45% வாக்குகளுடன் 364 இடங்களில் வென்று இந்திய தேசிய காங்கிரஸ் மிகப் பெரிய வரலாற்று வெற்றியைப் பெற்றது. இது இரண்டாவது அதிக இடங்களைப் பெற்ற கட்சியைவிட நான்கு மடங்கு அதிகமாகும்.
சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். அக்காலகட்டத்தில் நடந்த மிகப் பிரமாண்டமான தேர்தலாக இது அமைந்தது. அந்தப் பிரமாண்டம் இன்றும் தொடர்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT