Published : 17 Jul 2023 04:18 AM
Last Updated : 17 Jul 2023 04:18 AM
மூன்று வருடங்களுக்கு முன்பு அன்று காலை 11 மணி அளவில் தன் அக்காவுடனும் அம்மாவுடனும் எங்கள் பள்ளியில் சேர்க்கைக்காக வந்திருந்த புவனேஷை முதன் முதலாகப் பார்த்தேன். உதட்டோரம் சிறிய புன்னகை, கண்களில் கலக்கம்..ஏழாம் வகுப்பு சேர்க்கைக்கு வந்திருந்தான்.
மாணவர்கள் அனைவரின் பார்வையிலும் ஒரு வித்தியாசம். ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளவில்லை. சேர்ந்த நாள் முதலே யாரிடமும் பேசமாட்டான், அது ஆசிரியராக இருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி. விக்ரம் என்ற மாணவனோடு மட்டும் பிணக்கம்.
நான் ஏழாம் வகுப்பிற்கு பாடம் ஏதும் எடுப்பதில்லை என்றாலும் அந்த பக்கம் நான் செல்லும்போதெல்லாம் என்னைப் பார்த்து ஒரு புன்னகை மட்டுமே செய்வான். ஓரிரு மாதங்களில் அப்புன்னகை சிரிப்பாக மாறியது. மாணவர்களுடன் நான் புகைப்படம் எடுக்கும் நிகழ்வும் அடிக்கடி உண்டு. ஒர் நாள் என்னை தேடி வந்து ‘‘நம்ம போட்டோ எடுக்கலாமா டீச்சர்?’’ என்றான் புவனேஷ். அவன் என்னிடம் பேசிய முதல்வார்த்தை. அதிலிருந்து தினமும் என்னைதேடி வர ஆரம்பித்தான். என்னுடைய போன் காலரியில் புவனேஷின் போட்டோக்களும் நிரம்ப ஆரம்பித்தன.
தினமும் அவன் இரண்டே கேள்விகளை மட்டுமே மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே இருப்பான். ஒன்று “நாம போட்டோ எடுப்போமா டீச்சர்? மற்றொன்று, என்ன கார்ல கூட்டிட்டு போறீங்களா?” நான் பள்ளியை விட்டு புறப்படுவதற்கே மாலை 6 மணி ஆகிவிடும். ஆனால் புவனேஷோ மணி அடித்த அடுத்த நிமிடம் புறப்பட தயாராக இருப்பான். எனவே காரில் பயணிப்பது அவனுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
இனம்புரியாத மகிழ்ச்சி: இடையில் கரோனா காலம் வந்தது.தொலைபேசியிலும் இதே கேள்விகள் தான். மீண்டும் பள்ளி திறந்தபோது புவனேஷ் ஒன்பதாம் வகுப்பிற்கு வந்திருந்தான். ஒன்பதாம் வகுப்பு ஈ பிரிவில் முதல் நாள் காலடி வைத்த எனக்கு மட்டுமல்லாமல் புவனேஷுக்கும் ஏதே இனம் புரியாத மகிழ்ச்சி.
சொல்வதற்கு வார்த்தைகளே வரவில்லை. ABCD மட்டுமல்ல அ ஆ இ ஈயும் தெரியாது புவனேஷுக்கு... அவன் நண்பன் விக்ரமும் சிறப்பு குழந்தைதான்... என்ன காரணத்தாலோ இடம் பெயர்ந்த விக்ரமின் நட்பும் பறிபோன புவனேஷின் புது நட்பு நானாகிப் போனேன். எனது வகுப்பிற்கு தவறாமல் வருவான்.
வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்: நான் மற்ற மாணவர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு புவனேஷ் பதில்சொல்ல முற்பட்டபோது தான் ஆரம்பித்தது அவனிடம் புதிய முயற்சி. நானும் முதல் இரண்டு நிமிடங்கள் அவனுக்கென செலவழித்தேன். ஆர்வம் அதிகமாயிற்று. ABCD. அ ஆ இ ஈ எழுத தொடங்கினான். வடிவம் சரியில்லை என்றாலும் நான் எழுதுவது கரெக்டா என விடாது கேட்பான்.
அவனுக்கு மகிழ்ச்சியளித்தது ஒரு டிக், ஒரு வெரிகுட், கூடவே ஒரு ஸ்மைலி படம் அவ்வளவே. அவன் செய்யும் செயல்களை அன்றைய தின என் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்ல் வைத்தால் போதும். மிக்க மகிழ்ச்சியடைந்து உடனே எனக்கு ஒரு போன் செய்துவிடுவான்.
குதூகலம்தான்... பத்தாம் வகுப்பு வந்ததும் இன்னும் முன்னேற்றம். பாடம் தொடர்பான வினாக்களுக்கு பதில் அளித்தல். மனப்பாட பாடல் பாடுதல் என குதூகலம் தான். “ஆசிரியர் தினத்தன்று அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து வீடியோ எடுத்து அனுப்புகிறாயா?” என்று கேட்டபோது சரி என்று சொன்னதுடன் செய்தும் காட்டினான்.
மறக்க முடியாத ஒன்று: மாணவர்கள் வழிபாட்டுக் கூட்டத்தில் சொல்லுகின்ற உறுதிமொழியையும் அனிச்சையாக சொல்ல ஆரம்பித்தான். மே மாதத்தில் நடைபெற்ற STEM வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சியாளர் சங்கீதா பயிற்றுவித்த led விளக்குகளை எரியச் செய்து வழிபாட்டு கூட்டத்தில் பரிசையும் பெற்றது மறக்க முடியாத ஒன்று.
ஆங்கிலத்தேர்வு பள்ளியில் நடைபெற்றால், 4 பக்கம் முழுவதும் ABCD போட்டுவிடுவான். இன்று சொல்வதை எழுதுபவர் துணைகொண்டு பத்தாம் வகுப்பை வெற்றியுடன் முடித்து கிண்டியில் உள்ள சிறப்பு மாணவர்களுக்கான பயிற்சிபட்டறையில் புவனேஷ். எனது 22 காலபணி அனுபவத்தில் மனநிறைவுடன்இருக்கிறேன். சிறப்பு வகுப்புகளுக்கும் தவறாது வரும் புவனேஷின் கார்பயணமும் நிறைவேறியது. இன்னும் சில புவனேஷுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது என் மனது.
- பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்); அரசு உயர்நிலைப்பள்ளி கண்டிகை செங்கல்பட்டு மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT