Published : 13 Jul 2023 04:15 AM
Last Updated : 13 Jul 2023 04:15 AM
குழந்தைகள் - உண்மையில் இவர்கள் யார்? நம்மிடம் இருந்து வந்தாலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள். சுதந்திரமானவர்கள், மிகவும் புத்திசாலிகள், பிடித்ததை வெகுசீக்கிரமே கற்றுக் கொள்பவர்கள். ஒரு குழந்தை நல்லதாக வளர அன்னை மட்டுமே காரணமாகிவிட முடியாது. அதன் வீட்டுச் சூழலும் சுற்றுப்புறச் சூழலும்கூட முக்கியக் காரணங்கள் ஆகும்.
இன்றைய குழந்தைகள் நாம் சொல்வதை கேட்பதில்லை. நாம் செய்வதைப் பார்க்கிறார்கள். செய்கிறார்கள். அவர்களுக்கு தேவை அறிவுரை இல்லை. மாதிரி மனிதர்கள் (RoleModel) தான். கோபப்படும் பெற்றோரைப் பார்த்து கோபப்பட கற்றுக் கொள்கிறார்கள். எடுத்தெறிந்து பேசுவதையும் பதில் சொல்லாமல் செல்வதையும் நம்மிடம் இருந்து தான் அறிந்து கொள்கிறார்கள்.
மற்றவரை மதிக்கும் பண்பு: மற்றவரை மதிப்பதற்கும், மரியாதையுடன் நடந்து கொள்வதற்கும் நல்லநேர்மறை வார்த்தைகளை பேசுவதற்கும் நாம் தான் கற்றுக் கொடுக்க வேண்டும். சிறுபிள்ளை உறவினரிடம் "செத்துப்போ" “அரிவாள எடுத்து வெட்டிடுவேன்" எனச் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்து ரசிக்காதீர்கள். “யாருக்கும் எதுவும் கொடுக்காதே" என்று சொல்லிக் கொடுக்காதீர்கள்.
அவர்களது புத்தகப் பையை அவர்களே தூக்கட்டும். சிறுசுமைகூட தூக்கிப் பழகாவிட்டால் எலும்புகள் வலுவாவது எப்படி? பாடவேளைப்படி புத்தகங்களை எடுத்துச் செல்ல பழக்குங்கள். செல்போனை கொடுத்துப் பழக்கிவிட்டு அதற்கு அடிமை ஆகாதே என்றால் எப்படி?
பெற்றோர் செய்யும் தப்பு என்ன? - அவர்களைக் குறைசொல்லும் முன்பு நாம் செய்த தப்பு என்ன என்று யோசிக்க வேண்டும். வேகமான சிசி (CC) கொண்ட பைக்குகளை வாங்கிக் கொடுத்துவிட்டு துடிப்பும், வேகமும் நிறைந்த பதின்ம வயதினரை வேகமாகப் போகாதே என்று சொல்வது சரியா? நம்மிடம் இல்லாத பொறுமையை குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம்?
வகுப்பறையைத் தாண்டி தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் தான் மாணவர்கள் அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். எல்லா சேற்றிலும் செந்தாமரைகள் மலருவதில்லை. களர் நிலத்தில் விழுந்த விதை முளைப்பதில்லை. சமூகச் சீர்கேடு நிறைந்திருக்கும் இடத்தில் நல்லது நடக்க மிகுந்த கவனமும், பொறுப்புணர்வும் தேவை. இன்றைய இளம் தலைமுறை விரும்புவது தோழமை உணர்வுதான்.
தனி கனவு: பெற்றோரோ, ஆசிரியரோ, மற்றவர்களோ தங்களை மதித்து நட்பு பாராட்டுவதைத் தான் விரும்புகிறார்கள். உங்கள் கனவை எங்கள் மேல் திணிக்காதீர்கள். எங்களுக்கு என்று தனிகனவு உண்டு. தவறை சுட்டிக்காட்டினால் போதும் என்கிறார்கள். மேலும், வேண்டாம் அறிவுரை. இயல்பாய் இருக்க விடுங்கள். விதிமுறைகளை வகுக்காதீர்கள்.
எங்களை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் சொல்வதை முதலில் முழுவதும் காது கொடுத்துக் கேளுங்கள் என்கிறார்கள்.
"நீ அவனை ஆதரிப்பதால் தான்,செல்லம் கொடுப்பதால்தான் அவன்இப்படி இருக்கிறான் என பெற்றோர்கள் தங்களுக்குள்ளேயே குற்றம்சாட்டி சண்டையிடுவதை வெறுக்கிறார்கள். மிரட்டாதீர்கள். எங்களைக் காரணம் காட்டி நீங்கள் சண்டை போடாதீர்கள். என அழுத்தம் திருத்தமாய் கூறுகிறார்கள்.
பெற்றோர்களிடம் இவர்கள் கேட்பதுComfort Zone அதாவது மன அழுத்தமில்லாத, பாதுகாப்பாய் உணரக்கூடிய அரவணைப்பு மற்றும் புரிந்து கொள்ளுதல்தான்.
என்ன எதிர்பார்க்கிறார்கள்? - ஆசிரியரிடம் எதிர்பார்ப்பது - பாடத்தை தங்களுக்கு எற்றவிதத்தில் புரிகிற மாதிரி நடத்த வேண்டும். தங்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்பதுடன் தங்களை குறைத்து மதிப்பீடு செய்யக்கூடாது. மடக்க நினைக்கக்கூடாது. இப்படித்தான் என்று தீர்ப்பிடக்கூடாது என்பதைத்தான். கண்டிப்பான, ஒழுங்கான நல்ல ஆசிரியரிடம் நாங்கள் "நன்றாகவே நடந்து கொள்கிறோம்" என்கிறார்கள்.
பேசுங்கள், உங்கள் குழந்தைகளிடம் தினமும் மனம்விட்டு பேசுங்கள். அவர்கள் அனுபவத்தைக் கேளுங்கள். நல்லதை பாராட்டுங்கள், தீயதை எடுத்துச் சொல்லுங்கள், குற்றம் சாட்டாமல் அவர்கள் தவறை புரிய வையுங்கள். அப்போதுதான் தப்பு செய்தாலும் உங்களிடம் மறைக்காமல் கூறுவார்கள். உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை அனுபவங்களை கதையாகக் கூறுங்கள். வாசிக்க நேசிக்கக் கற்றுக் கொடுங்கள். வருங்காலம் வளமாக வளரும் குழந்தைகளை கண்ணும் கருத்துமாய் பேணுவோம்.
- கட்டுரையாளர் முதல்வர், நவ பாரத் வித்யாலயா பள்ளி, இ.வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT