Published : 10 Jul 2023 04:18 AM
Last Updated : 10 Jul 2023 04:18 AM
பள்ளி வகுப்பறையில் மட்டுமின்றி ஒவ்வொரு விடுமுறை காலங்களிலும் மாணவ மாணவிகள் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் கற்றுக் கொள்வது பாடத்துடன், வாழ்க்கையுடன், எதிர்கால தேவைக்காக, திறன் வளர்ப்பதாக, பொது அறிவை மேம்படுத்துவதாக, உடலையும் மனதையும் பக்குவப்படுத்துவதாக அமைந்தால் மிகச் சிறப்பு.
சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள், அரசு விடுமுறை தினங்கள் என்பதைத் தாண்டி பருவத்தேர்வு, கோடைகால, விழாக்கால விடுமுறை தினங்களை மாணவர்கள் அனுபவிக்கின்றனர். விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் செலவிடுவது, பெற்றோர்களுக்கு உதவியாக நாட்களை கழிப்பது, வாய்ப்புகளை பயன்படுத்தி விடுமுறை பயனுள்ள (பயிற்சி) வகையில் கழிப்பது என்பதில் நகர் பகுதி மாணவ மாணவிகள், கிராமப் பகுதியில் இடையே பெரிய இடைவெளி இருப்பதை காணலாம்.
நகர்ப்புற வாய்ப்புகள்: கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி, தையல், டைப் ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, ஒரிகாமி, அபாகஸ், அழகிய கையெழுத்து, ஓட்டுனர் பயிற்சி, விளையாட்டு பயிற்சி முகாம்கள், அழகு கலை, தற்காப்பு கலை, கம்ப்யூட்டர் வகுப்பு, மாடித் தோட்டம் அமைத்தல் இவற்றிற்கு சென்று பயில நகர் பகுதியில் வாய்ப்புகள் மிக அதிகம்.
இது, கிராமப் பகுதி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. வீட்டு வேலை, பெற்றோர்கள் செய்து வரும் தொழில் அல்லது விவசாயத்திற்கு உதவியாக இருப்பது, நண்பர்களுடன் சுற்றுவது என கிராமப் பகுதி மாணவர்களின் விடுமுறை நாட்கள் நகர்கிறது.
நாளிதழ் வாசிப்பு: சைக்கிள் பழகுதல், நீச்சல், சிலம்பம், கராத்தே, மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டு கிறார்கள். தம் குழந்தைகளுக்காக நிறைய செலவிடும் பெற்றோர்கள் தினசரி நாளிதழ்கள் வாங்கி வாசிப்பதையும், வாசிக்க தூண்டுவதையும் வழக்கமாக்க வேண்டும்.
18 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி தங்கள் வீடுகளில் உள்ள மோட்டார் சைக்கிள் அல்லது உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் ஓட்டி பழகவும், சாலையில் பயணிப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது, பல்வேறு அசம்பாவிதங் கள் ஏற்பட வழிவகை செய்கிறது. பெற் றோர்கள் இதற்கு ஊக்கப்படுத்தக் கூடாது.
ஒவ்வொரு விடுமுறை நாட்களையும் ஏதாவது ஒரு வகையில் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்ற உறுதியை மாணவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள ஊர்ப்புற நூலகம், ஊராட்சி நூலகம், பகுதிநேர நூலகம் செல்வதையும், தினசரிநாளிதழ்கள் வாசிப்பதையும் வழக்கமாக்க வேண்டும்.
தனித்தும் கும்பலாக சேர்ந்தும் ஸ்மார்ட் போனில் பல மணிநேரம் கேம் விளையாடுவதை பரவலாகஅனைத்து இடங்களிலும் பார்க்க முடிகிறது. பாடம் தொடர்பான நல்ல விஷயங்களை பார்க்க மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துவது சிறப்பு. பெற்றோர்கள் இதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
சுற்றுலா செல்வது: விடுமுறை நாட்களில் பெற்றோர்களு டன் சுற்றுலா செல்வது, அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சிக்கு செல்வது, பூங்கா, பொருட்காட்சி, வழிபாட்டுத் தலங்கள், அருவி மலைப்பிரதேசம், முதியோர் இல்லம், சர்க்கஸ், மிருகக்காட்சி சாலை செல்வது உள்ளிட்டவை நல்ல பல அனுபவத்தை கொடுக்கும். சின்னத்திரை, வெள்ளித்திரை, ரசிகர் மன்றம், ஸ்மார்ட்போன், வலை, சாதி மத அரசியல் வலையில் விழாமல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
ஒவ்வொரு விடுமுறை தினமும் உங்களுக்கு விடியல் தர வேண்டும். மாறாக அது உங்களை வீழ்த்தி விடுவதாக அமைந்து விடக்கூடாது மாணவர்களே.
- கட்டுரையாளர், ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அய்யம்பாளையம்,ஆத்தூர் ஒன்றியம், திண்டுக்கல் மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT