Published : 06 Jul 2023 04:15 AM
Last Updated : 06 Jul 2023 04:15 AM
வார்த்தைகள் மகத்துவமானவை, வார்த்தைகளுக்குள் ஒரு உலகம் இருக்கிறது என்று அடிக்கடி சொல்வார் கல்வியாளர் பேரா.ச.மாடசாமி. நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் பலருக்கும் நன்மை பயக்கக்கூடிய வார்த்தைகளா என்பதை சுயபரிசீலனை செய்வது நல்லது.
மூன்று வகையான வார்த்தைகள்: வார்த்தைகளில் பல்வேறு வகைகள்இருந்தாலும்அவற்றில் உற்சாகப்படுத்தும் வார்த்தைகள், தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள், புண்படுத்தும் வார்த்தைகள் என முக்கியமான மூன்றாக வகைப்படுத்தலாம். நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் குழந்தைகளுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
அன்று மனித உரிமைக் கல்விக்கான வகுப்பு. அதில் நம்மைச்சுற்றி பயன்படுத்தப்படும் வார்த்தைகளை மாணவர்கள் பட்டியலிட்டனர். வார்த்தைகள்எங்கெல்லாம் எப்படி பயன்படுத்தப் படுகிறது என உரையாடினோம்.
வார்த்தைகள் நம்முள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்ற கேள்விக்கு ஒரு பெண் குழந்தை பகிர்ந்து கொண்ட கருத்து அனைவரையும் பாதித்தது. வார்த்தைகள் நம்மைக் குறிப்பதாக இருக்க வேண்டியதில்லை. பலரின் உரையாடல்கூட நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாள் சாதாரணமாக.
"எங்க வீட்டில அப்பா, அம்மா எப்பப் பாத்தாலும் சண்டை போடுறாங்க. சண்டை எனக்கு முன்னாடியே நடக்குது. தகாத வார்த்தையில் இரண்டு பேரும் திட்டிக்கிறாங்க. இதை பார்க்கும்போது எனக்கு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்குது. பள்ளிக்கூடம் முடிச்சிட்டு வீட்டுக்கு போய் படிக்க உட்கார்ந்தால் இந்த மாதிரியான பேச்சுக்கள் என்னுடைய மனசை ரொம்ப பாதிக்குது. என்னால படிக்க முடியல" என்று தயக்கமின்றி பகிர்ந்து கொண்டார்.
இப்படியான நிகழ்வுகள் வீட்டில்நடக்கும்போது என்ன செய்யலாம் என்பதை வகுப்பறையில் கலந்துரையாடினோம். நீண்ட நேரத்துக்குப்பின் ஒருயோசனை முடிவானது. அப்படி பெற்றோர் பேசும்போது அவ்விடத்தில் நாம் இருந்தால் நம் காதுகளைப் பொத்திக் கொள்வது என்று முடிவெடுத்தோம்.
அந்த நிகழ்வை பார்த்தவுடன் பெற்றோர் மனம் திருந்தி விடுவார்கள். குறைந்தபட்சம் குழந்தைகளின் முன்பாவது ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளில் திட்டிக் கொள்வதை நிறுத்தி விடுவார்கள் என்று நம்பப்பட்டது.
ஆனால் அடுத்த நாள் அதே குழந்தை பள்ளிக்கு வரும்போது முகத்தில் மாற்றமும் சோர்வும் காணப்பட்டது. முகம் சற்றே வீங்கி இருந்தது. என்ன காரணம் என தனியே அழைத்து கேட்டேன். போங்க சார், நாம் சொன்னது மாதிரி செய்ததோட விளைவுதான் இது என கன்னத்தை காட்டினார். என்ன நடந்தது என மேலும் விசாரித்தேன்.
கவனிக்க வேண்டிய விஷயம்: நான் அவர்கள் சண்டை போடும்போது காதைப்பொத்திக் கொண்டேன். அவர்கள் இருவரும் பேச்சை நிறுத்துவார்கள் என்று நினைத்தேன். அதற்கு மாறாக இருவரும் என்ன நக்கல் பண்றியா என்று திட்டியதுடன் கன்னத்திலும் அடித்தார்கள் என்று கண்ணீர்மல்க கூறினார்.
இது ஒரு வகையில் பலருக்கும் நகைப்புக்கான நிகழ்வாக இருப்பினும், நாம் தீவிர கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்பதை மறுக்க முடியாது. இப்படி குழந்தைகளின் மனம் வருந்தும் ஏராளமான நிகழ்வுகள் வீடுகளில் நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
சின்ன விஷயம் தானே என்று நாம் நினைக்கும் போக்கு பல நேரங்களில் அவர்கள் ஆழ்மனதில் மிகப்பெரிய பலவீனத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும். வார்த்தைகள் மகத்துவமானவை, வார்த்தை பிரயோகம் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு அம்சம் என்ற நிலையில் வீடு, பள்ளி, சமூகம் என்ற அனைத்து தளங்களிலும் கவனத்தோடு பேச வேண்டும். வார்த்தைகளுக்குள் ஒரு உலகம் இருக்கிறது என்பதை புரிந்து பண்பட்ட, உற்சாகமூட்டும், தன்னம்பிக்கை யூட்டும் வார்த்தைகளை பயன்படுத்துவோம்.
- கட்டுரையாளர் தலைமையாசிரியர்,ஆர்.சி. தொடக்கப்பள்ளி, மணியம்பட்டி, விருதுநகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT