Published : 03 Jul 2023 04:58 AM
Last Updated : 03 Jul 2023 04:58 AM
கொடியிலே...மல்லிகைப்பூ....மணக்குதே மானே....!
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...!
என்பது போன்ற பல பாடல் வரிகளில் மல்லிகை பூ மணத்திற்கு தனி இடம் உண்டு. இன்று நாம் சூடி பார்க்கின்ற பலவகைப் பூக்கள் எல்லாம் மணக்கின்றனவா? இயற்கையின் படைப்பு ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட நோக்கமும் காரணமும் உண்டு. அவற்றை நாம் உணர்ந்து இருக்கின்றோமா?
இயற்கையில் அமையப் பெற்றிருப்பதைநாம் மாற்றி அமைக்க நினைக்கும் போதுதான் மோசமான விளைவுகளையும், தோல்விகளையும் சந்திக்கின்றோம். அது கடவுளால் மறுக்கப்பட்டது என்று நாம் அர்த்தம் கொள்கிறோம். அப்படி எவற்றையெல்லாம் மாற்ற, மறையச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி சற்று சிந்திப்போமா?
பூக்களின் முதல் அடையாளமே அதன் நறுமணம் தான். இனப்பெருக்கத்திற்கான கவர்ச்சியாக இயற்கை அமைத்துத் தந்த முதல் அச்சாரம் "மணம்". ஆனால் இப்போதெல்லாம் மணமில்லாத கலப்பின வகை மலர்களை உற்பத்தி செய்து, பயன்படுத்துகிறோம். அலங்கார மலர்களின் வணிக ரீதியான உற்பத்தி, தேவைக்கேற்ப ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். இருந்தபோதிலும் வீடுகளில் நாம் வளர்க்கத் தேர்ந்தெடுக்கும் மலர்ச் செடிகளும் அத்தகையதாக இருப்பது சரியா என சிந்தித்தது உண்டா? கலப்பின செடிகளை நம் மண்ணில் வளர்ப்பது அந்நிய ஊடுருவல் என்பதை அறிகிறோமா?
சவால்கள்
அதனால் ஏற்படும் சவால்கள் நிறைய உள்ளன. அதிக செலவு, கூடுதல் தொழில்நுட்பம், அதிகப்படியான இடு பொருட்கள் பயன்பாடு, சத்துக் குறைவு, சுவை குறைவு,
நோய் எதிர்ப்புத் திறன் குறைவு, விதைகளற்ற தன்மையினால் நாற்றுகளைப் பெறுவதில் கால விரயம் மற்றும் பொருள் விரயம், நாட்டு விதைகளின் பயன்பாடு காலப்போக்கில் குறைந்து போகும் நிலை போன்ற பல்வேறு பாதகமான அம்சங்கள் உள்ளன என்பதை உணர வேண்டும்
எனவே பூ, காய்கறி, பழ வகைகளின் நாட்டுப்புற, வட்டார வகைச் செடிகளை விளைவிப்பதே இயற்கையான நன்மைகளைத் தரும். இவைகளுடன் பூச்சி இனங்கள் இருப்பதும், விரைவில் வாடிப்போகும் நிலையும் இயற்கையே. உள்ளூர் சந்தைகளிலும், உழவர் சந்தைகளிலும், தெருவில் கூடைகளில் கொண்டு வந்து நேரடியாக விற்கப்படுபவையும் பெரும்பாலும் நாட்டுப்புற வகைகள்தான்.
கலப்புயிரித் தாவரங்கள்
"வேளாண்மைப் பொருட்கள் உற்பத்தி தற்சார்பு உடையதாக மாற வேண்டும்" என்றார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நமது ஒவ்வொருவரின் வீட்டிலும் நமக்குத் தேவையான பூக்கள், காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்ய வேண்டும். கலப்புயிரித் தாவரங்களை வீடுகளில் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறைகள், வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் குறித்துதெரிந்து கொள்ள தற்போது நிறையவாய்ப்பு வசதிகள் உள்ளன. நீங்கள் மனது வைத்தால் மல்லிகைப்பூ உங்கள் வீட்டுத் தோட்டத்திலும் மணக்கும் குழந்தைகளே...
முன்பெல்லாம் வீட்டில், திருவிழாக்களில், திருமணம் உள்ளிட்ட வைபங்களில் பெண்கள் மல்லிகைப்பூ சூடி வந்தால் அப்படி மணம் கமழும். இப்போது அதுபோல மணம் வீசுவதேயில்லை. முன்பு போல மணம் வீசும் மல்லிகைப் பூ சாகுபடி செய்ய அரசு, விவசாயிகள், வேளாண் பல்கலைக்கழகம் என அனைத்து தரப்பினரும் முயற்சி செய்தால் மட்டுமே மணம் வீசும் மல்லிகைப் பூக்கள் மீண்டும் வலம் வரும்.
- தே. இளவரசி,
கட்டுரையாளர் முதுகலை ஆசிரியர் (தாவரவியல்)
அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT