Last Updated : 30 Jun, 2023 04:04 AM

 

Published : 30 Jun 2023 04:04 AM
Last Updated : 30 Jun 2023 04:04 AM

4, 5 ஆம் வகுப்பிற்கும் எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம்

2025-ம் ஆண்டில் எட்டு வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் தங்குதடையின்றி படிக்கவும் எழுதவும் கணக்குகளை செய்யவும் அறிந்திருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம் 2022-ம் ஆண்டு 1 முதல் 3 வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

"வகுப்புக்கு உரிய கற்பித்தல் நிலைக்கு மாற்றாக மாணவர் நிலைக்கேற்ற கற்பித்தல், செயல்முறைகளின் அடிப்படையிலான கற்றல் கற்பித்தல்,செயல்முறைகளின் அடிப்படையிலான மதிப்பீடு, மொழி, கணக்கு ஆகியவற்றோடு சூழ்நிலைகளை ஒருங்கிணைந்து கற்பித்தல், நிகழ்த்துக் கலைகளின் பட்டறையாக, தனி திறன்களின் வெளிப்பாட்டு மேடையாக, இசை அரங்கமாக, கதைக் களமாக, விளையாட்டுக் கூடமாக, கலைகளின் செயற்களமாக, ஓவியக் கூடமாக என உருமாற்றம் பெறும் உயிரோட்டமான வகுப்பறை, முதல் மூன்று வகுப்புகளுக்கும் பயிற்சி நூல் அரும்பு, மொட்டு,மலர் என வகைப்படுத்தப்பட்டுள்ளன..." இதுதான் எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பு கூறுகள் ஆகும்.

நான்கு வகை களஞ்சியம்

குழந்தைகள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கற்றுக் கொள்வதற்கும், பன்முகத் திறனை வளர்ப்பதற்கான களமாக நான்காம், ஐந்தாம் வகுப்பு வகுப்பறைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. மொழி திறன்களை வளர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக படைப்பாற்றல் களஞ்சியம் அமைகிறது. கணக்குளை உருவாக்கித் தீர்வு காணவும் கணிதச் சிந்தனைகளை தூண்டி வெளிப்படுத்துவதற்கான களமாகசெயல் பாட்டு களஞ்சியம் உள்ளது. சிறுசிறு அறிவியல் சோதனைகளை செய்துபார்த்து அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கு அறிவியல் களஞ்சியம் உதவி செய்கிறது. வரலாற்று உண்மைகளை அறிவதற்கும், தொல்லியல் சார் விழிப்புணர்வு பெறவும் சமூக சிந்தனையை வளர்ப்பதற்கும் வழிவகை செய்கிறது வரலாற்று களஞ்சியம்.

பாடநூல் கருத்துக்களை கற்பதற்கு முன்பாக குழந்தைகளுக்கு முன் திறன்களை நினைவூட்டி அதில் பயிற்சி பெற ஏற்ற வகையில், "தமிழோடு விளையாடு, கணக்கோடு விளையாடு, ஆகா.... அறிவியல், காலச்சுவடி போன்ற பகுதியில் இதில் இடம்பெற்றுள்ளன.

சோ.இராமு

ஆர்வம் அதிகரிக்கும்

முன் கற்றதை நினைவு கூரும் பகுதியான,"தமிழோடு விளையாடு" திறவுகோல்- என்னும் தலைப்பில் கற்பித்தல் செயல்பாடு, வாங்க பேசலாம் - என்ற தலைப்பில் வகுப்பறை கலந்துரையாடல், படைப்பாற்றல் செயல்பாடுகளை செய்வதற்கு வானவில் நேரம்.

கருத்தை வெளிப்படுத்தவும் பேசும் திறனை ஊக்குவிக்கவும் - வானவில் மேடை, பிழையின்றி எழுதும் திறன் பெற - சொல்ல கேட்டு எழுதுவோம் பகுதி, வானம் வசப்படும் எனும் தலைப்பில் பயிற்சி நூல் பாடநூல் செயல்பாடு. கற்றதும் பெற்றதும் என்ற தலைப்பில் குழந்தைகள் பெறவேண்டிய திறன்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பருவத்திற்கு ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ள நான்கு & ஐந்தாம் வகுப்புகளுக்கான இணைந்த கையேட்டில், தமிழ், ஆங்கிலம் தலா
பத்து பாடங்களும், கணக்குஒன்பது பாடங்கள், சமூக அறிவியலில் ஏழு பாடங்களும் இடம்பெற்றுள்ளன. வழக்கமான பாடநூல், பயிற்சி புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கையேட்டில் கற்றல் விளைவுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. துணைக்கருவிகள் செய்து பயன்படுத்த பின் இணைப்பாக படங்கள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் துலங்கள்(QR code) குறியீட்டில் உள்ள மாதிரி காணொளிகள் மற்றும் ஒலி கோப்புகள் வகுப்பறையை சிறப்பாக கையாள வழிகாட்டுகின்றன.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பயின்று வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பள்ளிக்குச் சென்று வகுப்பறையை பார்வையிட வேண்டும். மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில்(1-5 வகுப்பு) எண்ணும் எழுத்தும் திட்டம் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

- சோ.இராமு
கட்டுரையாளர்: ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
அய்யம்பாளையம், ஆத்தூர் ஒன்றியம்
திண்டுக்கல் மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x