Last Updated : 27 Jun, 2023 04:18 AM

 

Published : 27 Jun 2023 04:18 AM
Last Updated : 27 Jun 2023 04:18 AM

மாணவர்களின் சிரிப்பு: அன்றும்... இன்றும்: பெற்றோர் சற்றே சிந்திப்பீர்...

1982-ம் ஆண்டு நடந்த நிகழ்வு இது. அந்தப் பள்ளியில் காலை இறை வணக்கக் கூட்டம் முடிந்து, முதல் பாட வேளை தொடங்கியது. எட்டாம் வகுப்பிற்குள் தமிழ் ஆசிரியர் நுழைந்தார். உள்ளே நுழைந்தபோது, சற்றே கால் தடுமாறி தவறி கீழே விழுந்தார். ‘ஐயோ! என்ன ஐயா, கீழே விழுந்திட்டீங்களே’ என்று பதறியபடி ஒரு மாணவன் ஓடிவந்தான். அவனுடன் இன்னும் சில மாணவர்கள் விரைந்து வந்தனர். ஆசிரியரின் கையைப் பிடித்து தூக்கிவிட்டனர். அதற்குள் ஒரு மாணவன் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான்.

இதே போன்ற ஒரு நிகழ்வு, இன்றைய நாளில், அதாவது 2023-ம் ஆண்டில் நடைபெற்றபோது, மாணவர்களின் வெளிப்பாடு எப்படி இருந்தது தெரியுமா? ஆசிரியர் விழுந்ததைப் பார்த்த மாணவர்கள் அனைவரும் ‘கொல்’ என்று வாய்விட்டு சத்தமாக சிரித்தனர். ஆசிரியரை, தூக்கிவிட வந்த மாணவனும்கூட சிரித்துக் கொண்டேதான், தூக்கிவிட்டான். விழுந்த ஆசிரியரை, ஏளனமாகப் பார்த்து, கேலி செய்த மாணவர்களும் சிலர் இருந்தனர்.

தவறான உணர்ச்சி: மாணவர்களின் இத்தகைய தவறான உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு, அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. உணர்ச்சிகளில், எதை, எப்படி,எப்போது, எந்த அளவிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு உணர்த்தாததுதான் காரணம் என்பதே உண்மை.

ஒருவரின் மனதிற்குள் இருந்து வரும் சிரிப்பை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை உணர முடியும். தனக்கு துன்பம் வரும் போது அதனை தாங்கிக்கொண்டு சிரிப்பவர்பலசாலி. ஆனால் அடுத்தவர்துன்பப்படும் போது அதனை ரசித்து சிரிப்பவர் சுயநலவாதி. இந்த சுயநல விதையைத்தான் இக்கால மாணவர்கள் தங்கள் மனதில் விதைத்து வைத்திருக்கின்றனர்.

அதனால்தான் அடுத்தவரின் வலி, இவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளில், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வளர ஆரம்பித்ததோ, அதே அளவிற்கு எதிர்மறை உணர்ச்சிகளும் மிக அதிக அளவில் வெளிப்பட ஆரம்பித்தன. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா?

இக்கால திரைப்படங்கள் நகைச்சுவை என்ற பெயரில் சுயநலத்தைத்தான் விதைக் கின்றன. ஒருவர் மற்றவரை அடிப்பது, தீய வார்த்தைகள் கூறி திட்டுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது இவைகளைத் தான் இக்கால திரைப்படங்கள் நகைச்சுவை என்ற பெயரில் வெளிப்படுத்துகின்றன. இதனைப் பார்ப்பவர்கள் தீயவற்றை ரசிக்கவும், அடுத்தவர் அடிவாங்குவதைப் பார்த்து சிரிக்கவும் கற்றுக் கொள்கின்றனர்.

எவை நம்மை சந்தோஷப்படுத்துகிறதோ அவையெல்லாம் நம் அடிமனதில் பதிந்துவிடும். எனவே அடுத்தவர் அடிவாங்குவதையோ, தீயச் சொல் பேசுவதையோ நமது குழந்தைகள் சிறு வயதிலேயே ரசித்து சிரிக்க கற்றுக் கொண்டால், அது அவர்களின் பிற்கால வாழ்க்கையையே புரட்டிப் போடும். அதனால் திரைப்படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் எதற்கெல்லாம் சிரிக்கிறார்கள் என உற்று நோக்குங்கள். இவை போன்ற காட்சிகள் வரும் போது, முதலில் நீங்கள் அதை ரசித்து சிரிக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் வெளிப்பாடுகளே, உங்கள் குழந்தையின் வாழ்க்கை என்பதை மறக்கக் கூடாது.

மெல்ல சொல்லி புரியவையுங்கள்: “என்ன, கண்ணா, பாவம் அவர், யார் கிட்டயோ அடி வாங்கறார், அதை பார்த்து சிரிக்கிறயே, இதுவேநீ அடி வாங்கும் போது யாராவது சிரிச்சா உனக்குஎப்படி இருக்கும்?” என்று மெல்ல சொல்லி புரியவையுங்கள். பெற்றோர் மட்டுமல்லாமல், ஆசிரியர்களும், நீதிபோதனை பாட வேளைகளின்போதும், மன்ற செயல்பாடுகளின் போதும், மாணவர்களின் உள்ளம் பண்படக்கூடிய நிகழ்வுகளை கூறி நெறிப்படுத்துவது இன்றைய காலகட்டத்தில், மிக முக்கிய தேவையாக உள்ளது.

- கட்டுரையாளர்: தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி துண்டல்கழனி, காஞ்சி மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x