Published : 21 Jun 2023 04:02 AM
Last Updated : 21 Jun 2023 04:02 AM
மு ன்பு இல்லாத அளவு கல்விப் பரப்பில் இப்போது சவால்கள் அதிகரித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு செயலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மாணவர்களின் வாழ்வில் கைபேசிகள் ஏற்கெனவே பிரிக்கமுடியா அங்கமாக மாறிவிட்ட நிலையில் இந்த வகைச் செயலிகள் ஆசிரியர்களுக்கெல்லாம் சவாலாக இருக்கும்.
நிஜ உலகின் தன்மைகளை மறக்கடிக்கும் வலிமை பெற்ற இந்த தொழில்நுட்பத்தை எப்படி கல்வி பரப்பில் கையாள்வது என்பதற்கான தெளிவும், செயல்பாடும் அவசரமாகத் தேவைப்படுகிறது. சரியான தகவல்களையும், விளக்கங்களையும் அவைதருவதில்லை என்பது நீருபிக்கப்பட்ட உண்மை.எப்படி நிஜ உலகின் அனுபவங்களை கல்விக்கான நுட்பத்துடன் வகுப்பறைகளில் இந்த தொழில்நுட்பங்களின் உதவியுடன் கொண்டு வரப்போகிறோம் என்பது பற்றிய சிந்தனை உடனடித் தேவை.
அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளி மாணவர்களுக்கும், மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே கட்டக்கூடிய நிலை கொண்ட மாணவர்களுக்கும் இடையே வேற்றுமையை இன்றைய கல்விச் சூழல் ஏற்படுத்தி வருகின்றது. இதில் எல்லோருக்குமான தரமான கல்வியை அரசுத் திட்டங்கள் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், ஆசிரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகிறது.
இங்கு தொழில்நுட்பத்தை எப்படி தேவையான அளவு கற்பித்தலுடன், கற்றலுடன் இணைப்பதுஎன்பது குறித்த தனிப்பட்ட புரிதல் ஆசிரியர்களுக்குத் தேவை. முதலாவதாக, செயலிகள் பயன்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதும் அவசியம்.
கல்வியின் அடிப்படை நோக்கங்கள் யாவை?அவை நிறைவேற நாம் கடைபிடித்து வரும் கற்பித்தல்முறைகள் எவ்வளவு தூரம் பயனளிக்கிறது என்பதுபற்றி சுய பரிசோதனை செய்து பார்த்தால் நிச்சயம்புதிய பதில்கள் கிடைக்கும். முன்னால் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு மாணவரும் தனித்தன்மையுடன் தென்படுவார்.
செல்ல வேண்டிய பாதை
கல்வியின் நோக்கங்கள் எனும்போது லட்சக்கணக்கில் சம்பாதிப்பதற்கான திறன்களை மாணவர்களிடம் வளர்ப்பது மட்டுமல்ல. அவற்றையும் தாண்டி சமூக நல்லிணக்கம் பேணி, சாதி மத பேதமற்ற அன்பு நெறியை எப்படி இளம் நெஞ்சங்களில் உருவாக்குவது, அதற்கான நுணுக்கமான அணுகுமுறைகள் யாவை என்பதேமுதன்மையான நோக்கமாகும்.
அறிவியல் பூர்வமாக எப்படி சிந்திக்க வைப்பது என்பது தொடங்கி, அறம்காக்கும் உணர்வுகளை ஊட்டுவதும், சுற்றுச்சூழல்குறித்த அக்கறையை வளர்ப்பதும், ஜனநாயகப் பண்புகளை வாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் எப்படி கடைபிடிப்பது என்பது பற்றிய தெளிவும், இன்னும் பல மானுட மேம்பாட்டிற்கான விழுமியங்களை எப்படி விதைப்பது என்பதும் ஆரோக்கியமான கல்வியின் முக்கிய நோக்கங்களாக இருக்கும். இவற்றை முக்கியமாகக் கொள்ளாமல் தகவல் மையங்களாக மட்டும் மாணவர்களை மூளை திணிப்பு செய்து, தேர்வு எனும் ஓட்டப் பந்தயங்கள் வைத்து ஒற்றைப்பரிமாண மனிதர்களாக உருவாக்குவது ஆபத்தானது.
ஒவ்வொரு நாளும் புதுப்பிப்பு
ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிலரங்கம் ஒரு புறம் நடத்தப் பட்டாலும், ஆசிரியர்கள் தங்களை ஒவ்வொரு நாளும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலக்கட்டம் இது. இவ்வாறெல்லாம் செயல்பட இயலாமல் இருக்க பல தடைகள் ஆசிரியர்களுக்கு உள்ளன. அதையும் தாண்டி நாம் ஆசிரியர் என்றஉணர்வு மட்டுமே அவற்றையெல்லாம் மறந்து செயல்பட வைக்கும். வகுப்பறைகளுக்கும், பாடத்திட்டங்களுக்கும் வெளியே அறிவுக்கான களம் விரிந்து கிடக்கின்றது. மாணவர்களை கைபிடித்து அந்த நிஜஉலகின் சவால்களை தரிசிக்க வைப்பது ஆசிரியரைத் தவிர யாரால் முடியும்? நமது நாட்டின் எதிர்காலம் என்பது வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகின்றது என்ற மகா வாக்கியத்தை ஆராய்ந்தால் நாம் பயணிக்கவேண்டிய பாதைகள் புலப்படும்.
- இரா.முரளி
கட்டுரையாளர்: மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர், கல்விச் செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு:royammurali@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT