Published : 20 Jun 2023 05:02 AM
Last Updated : 20 Jun 2023 05:02 AM

ஆதி திராவிடர் நல பள்ளி கட்டிடங்களின் பரிதாபம்: இடிந்துவிழும் நிலையில் வகுப்பறைகள்

திருச்சி விமானநிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள செம்பட்டு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் தகர கூரையுடன் இயங்கும் வகுப்பறை கட்டிடம். படம் ஜி.செல்லமுத்து.

திருச்சி

திருச்சியில் உள்ள ஆதி திராவிடர் நல பள்ளிகளின் கட்டிங்கள் இடிந்து விழும் நிலையில் பரிதாபமாக காணப்படுகின்றன.

திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் 69 தொடக்கப்பள்ளிகள், 4 நடுநிலைப்பள்ளிகள், 13 உயர்நிலைப்பள்ளிகள், 14 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 100 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அரசு பொதுத்தேர்வுகளில் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்ச்சி வீதம் அதிகரித்து வந்தாலும் கரோனா பொதுமுடக்கத்துக்கு இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது அதிகளவில் குறைந்து வருகிறது. இத்தகைய பள்ளிகளில் கழிவறை, குடிநீர் மற்றும் கூடுதல் கட்டிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

மேலும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த மன்றங்கள் இல்லாதது ஒருபுறம் இருந்தாலும், ஆசிரியர் பற்றாக்குறை என்பது ஆண்டாண்டுகளாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 7 தொடக்கப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளி 5 என மொத்தம் 12 பள்ளிகள் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜ்மோகன் கூறியதாவது:

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 80 சதவீத பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. இதில், 25-க்கும்மேற்பட்ட பள்ளிகள் 1975 கால கட்டங்களில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் போதிய பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. குடிநீர் வசதி என்பது காசு கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது.

திருச்சி விமானநிலையம் அருகே உள்ள செம்பட்டு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தொடக்க காலத்தில் 100-க்கும் மேற்பட்டமாணவர்கள் படித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாததால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தும் அது அகற்றப்படவில்லை. இடிந்துவிழுந்த கட்டிடத்துடன் கூடிய வகுப்பறையில் 1 முதல் 5-ம் வகுப்புவரையில் 24 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சுகாதாரமற்ற கழிவறை என்பது பாழ டைந்த கட்டிடத்தையொட்டி உள்ளதால் மாணவர்களின் உயிர் பயத்துடனே கடந்து செல்கின்றனர். தற்போதைக்கு உள்ள ஒரு கட்டிடமும் தகரத்தால் ஆன மேற்கூரையில் செயல்பட்டு வருகிறது. போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் வகுப்பு பயிலக்கூடிய அளவிற்கு மாணவர்கள் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித பலனில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, "பள்ளி கட்டிடம் நிலை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கிறோம். ஒவ்வொரு ஆண்டுக்கும் அனுப்பி வைக்கப்படும் திட்ட அறிக்கையில், 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவது தாட்கோ மூலமே மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு பாராமரிப்பு செலவு மேற்கொள்ள ரூ.80 லட்சம் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x