Published : 11 Jan 2023 06:15 AM
Last Updated : 11 Jan 2023 06:15 AM

அறிவோம் அறுவடைத் திருநாளை...

அருணா ஹரி

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்: அதனால்
உழந்தும் உழவே தலை"

என்கிறார் திருவள்ளுவர்.

விவசாயியின் ஏரின் பின்னால் தான் உலகம் போக வேண்டும். கடினமாக இருந்தாலும் உழவுதான் முதன்மையான தொழில். ஏனென்றால் உயிர் வாழ்வதற்கு உணவு தேவை. அந்த உணவைத் தரும் "உழவுத் தொழிலை வந்தனை செய்வோம்" என வாழ்த்தி வணங்கினார்கள் நம் முன்னோர்கள். “அறுவடைத் திருநாள்" - கழனி விளைந்து களஞ்சியத்திற்கு போகும் நாள். தமிழனுக்கும், உழவுக்கும் உள்ள உறவை உறுதிப்படுத்தும் நாள். விவசாயி வெய்யோனுக்கு நன்றி செலுத்தும் நாள். நம் மண்ணை பெருமைப்படுத்தும் நாள்.

பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் திருநாளாகும். முதல் நாள் போகிப் பண்டிகை. “பழையன கழிதலும், புதியன புகுதலுமாய்", வேண்டாத பொருட்கள் எல்லாம் தீக்கு இரையாகும். பொங்கலன்று புத்தம்புது பானையைக் கழுவி பொட்டு வைத்து, மஞ்சள் கொத்தை கட்டிவைத்து, வீ்ட்டுக்கு வெளியே புது அடுப்பை மூட்டி அறுவடையான புது நெல் அரிசியை பானையிலிட்டு பொங்கல் செய்வார்கள்.

பொங்கல் பொங்கி வரும்போது குழந்தைகளும், பெரியவர்களும் இணைத்து "பொங்கலோ பொங் கல்" என உற்சாகமாய் முழங்குவார்கள். பொங்கல் நன்கு பொங்கினால் வளம் எல்லாம் பொங்கும் என்பது நம்பிக்கை. சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பரங்கிக்காய் புளிக்குழம்பு, காய்கறிகள் கலந்த கதம்பக்கூட்டு வீடெங்கும் மணக்கும்.

சூரியனை நோக்கி பொங்கல் பானைகளை வைத்து செங்கரும்பால் பந்தலிடுவர். பூசணிக்காய், பரங்கிக்காய், வாழைத்தார் வீற்றிருக்க வாழை இலையில் சிறிதளவு பொங்கலை எடுத்துவைத்து வெற்றிலை பாக்கு ஊதுபத்தி மணக்க தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி சூரியனுக்கு நன்றி சொல்லி வணங்குவர். “செங்கரும்பு என்றாலே வாய்சுவைக்கும்". கரும்புத் துண்டை பல்லால் கடித்து இழுத்து உரித்து மென்று சுவைத்து விழுங்கும் கரும்புச் சாற்றின் சுவைக்கு ஈடு உண்டா?

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், வாசலில் கோலத்தின் நடுவில் சாணத்தால் பட்டிக்கட்டுவர். அதில் பிள்ளையார் பிடித்துவைத்து பொட்டு வைப்பார்கள். அப்பட்டியில் மஞ்சள் நீர், செம்மண் நீர், பால், தயிர் ஊற்றுவர். அருகம்புல், கூலப்பூ, வேப்பிலை, ஆவாரம் பூ, ஊமத்தம் பூ, செவ்வந்திப் பூ போன்றவற்றை அதில் செருகுவார்கள்.

கற்றாழையை ஊற வைத்து கல்லில் அடித்து நார் நாராய் பிரிந்த ஜல்லியை கயிறாய் திரித்து மாலையாய் கட்டுவார்கள். அதனை குளிப்பாட்டி வண்ண பொட்டு வைத்து மாடுகளுக்கு கட்டு வார்கள். மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசுவார்கள். உழவுக் கருவிகளை கழுவி பொட்டு வைப்பார் கள். மாலையில் வெண் பொங்கல் வைத்து தட்டுகளும், தாம்பாளங்களும் மேளமாக மாறி, மாட்டின் வாயைக் கழுவி பொங்கல் ஊட்டுவார்கள்.

நான்காம் நாள் "மஞ்சுவிரட்டு" எனப்படும் ஜல்லிக்கட்டு நடைபெறும். வீடு, வீடாய் சென்று தேங்காய் உடைத்து சூடம் காட்டி மாடுகளை அவிழ்த்துவிடுவர். மாடுகளின் கழுத்தில் இருக்கும் ஜல்லிகளையும், வண்ணமாலைகளையும் அறுக்க இளைஞர்களிடையே போட்டி நடக்கும். கதிரவன், மாடுகள் இவற்றை வணங்கி நன்றி தெரிவிக்கும் பெருவிழாவான பொங்கல் நம் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் மண் மணக்கும் விழாவாகும்.

கட்டுரையாளர் எழுத்தாளர், முதல்வர் நவபாரத் வித்யாலயா பள்ளி இ.வெள்ளனூர், திருச்சி மாவட்டம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x