Published : 29 Aug 2022 06:26 AM
Last Updated : 29 Aug 2022 06:26 AM
வகுப்பறைக்குள் நுழையும்போதே பலத்த ஆரவாரம். சார், தியேட்டருக்குப் போகணும் என்ற குரல்கள். நாம் என்ன பெயர் வைத்துக் கொண்டால் என்ன, மாணவர்களுக்கு அது தியேட்டர் தான். திறன் வகுப்பறைக்குச் சென்றோம்.
"தம்பிகளா, ஆட்சி செய்பவர் கொடுங்கோலர் என்றால் எளிய மனித உயிர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. இப்போது நாம் சில ஆவணப்படங்களைப் பார்க்கப் போகிறோம். இவற்றால் ஹிட்லரின் கொடூரச் செயல்களை உணரலாம்" என்றேன்.
ஹிட்லரின் வதை முகாம்கள் பற்றியகாணொலிகள், ஆன் பிராங்க் பற்றிய காணொ லிகள், ஹிரோஷிமா அணுகுண்டுவீச்சின் அழிவுகள் பற்றிய விளக்கப்படம், இப்போதுஉலகில் உள்ள சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் பற்றிய விளக்கப்படம் ஆகியவற்றைத் திரையிட்டேன்.
அவ்வப்போது மாணவர் களைப் பார்த்தேன். கூர்ந்து முகம் பார்க்காமல் பரவலான பார்வை. கண்ணீர் வழியும் முகங்கள், இறுகிய முகங்கள் என உணர்வுப்பூர்வமாக இருந்தார்கள்.
காணொலிகளைப் பார்த்து முடித்த பிறகும் அமைதி தொடர்ந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. தொண்டை அடைபட்டிருந்தது. எல்லா நேரமும் பேச வேண்டுமா என்று தோன்றியது. போகலாம் என்று கையை அசைத்தேன். மாணவர்கள் மெதுவாக எழுந்து வெளியே சென்றனர்.
மனம் திறந்த உரையாடல்
சிறிது நேரம் கழித்து என் மனம்சற்றே அமைதி அடைந்தது. காணொலி களைப் பார்த்த பிறகு ஏதேனும் கலந்துரையாடியிருக்கலாம் அல்லது என்னநினைக்கிறார்கள் என்றாவது கேட்டிருக்கலாம் என்று தோன்றியது. ஏன் கேட்க வேண்டும் என்று மனதுள் எதிர்க்குரல்.
எல்லாவற்றையும் கேட்டே ஆக வேண்டுமா? அவர்களுக்குள் நிச்சயமாக உரையாடல் நிகழும். அது தான் முற்றிலும் மனம் திறந்த பகிர்வாகவும் இருக்கும். வகுப்பறையில் பேசத் தயங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் நண்பர்களிடம் அப்படி இருப்பதில்லை. இப்படி எனக்குள் ஒரு வழக்காடு மன்றம் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கலந்துரையாட வேண்டியதில்லை, ஏதேனும் பகிர விரும்பும் போது நண்பனிடம் பேசுவது போன்ற தயக்கமற்ற சூழல் வகுப்பறையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
மறுநாள் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே "சார், நாட்குறிப்பு!" என்று எழுந்த சிலஉற்சாகக் குரல்களால் நானும் உற்சாகமானேன். அங்குமிங்குமாகப் பலரும் நாட்குறிப்பு எழுதியிருந்தனர். குறிப்பேடுகளை ஆசிரியர் பார்த்தாலே ‘ரைட்' போட்டுக் கையெழுத்திட வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு என்பதால் குறிப்புகளின் இறுதியில் குட்டியாக ஒரு ‘டிக்' போட்டுச் சுருக்கொப்பமும் இடுவேன். ஏற்கனவே பார்த்தது என்று எனக்கு நினைவூட்ட அது உதவும். நாட்குறிப்புகளில் பலவும் அன்றாடம் தொடரும் செயல்களாக இருந்தாலும் சிலரின் பதிவுகள் மனதிற்கு மிகுந்த உற்சாகம் தந்தன. அந்த எழுத்தாளர்களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்க வேண்டும்.
தயக்கம் வேண்டாம்
கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களை நாட்குறிப்பு எழுதச் சொல்கிறேன். வளரிளம் பருவத்தில் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரியவர்களிடமிருந்து விலகத் தொடங்குகிறார்கள். நாம் எவ்வளவு நட்பாகப் பழகினாலும் அவர்களை அறியாமலேயே சில நேரங்களில் நம்மிடம் ஏதாவது கேட்பதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது. சக நண்பர்களின் குழுக்களே அவர்களை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இப்படியான சூழலில் வளரிளம் பருவத்தினர் ஆசிரியரோடு பேசத் தயங்குபவற்றை எழுதுவதற்கு நாட்குறிப்பு பேருதவியாக இருக்கிறது. தலைமுறை இடைவெளியைக் குறைப்பதாகவும் இருப் பதே நாட்குறிப்பு.
கடிதம் எழுதுங்கள்
"தம்பிகளா, இன்னும் சிலர் எழுதாமல் இருக்கீங்க. தயங்காம எழுதுங்க. எழுதத் தொடங்குவதே முக்கியம். நேற்று நிறைய காணொலிகளைப் பார்த்தோம். எல்லோருக்குமே ரொம்ப வருத்தமா இருந்துச்சுல்ல" என்று கேட்டேன். "ஆமா சார்" என்றார்கள் பலரும். "இன்று நேரம் கிடைக்கும்போது, ஹிட்லர், ஆன் பிராங்க் இருவருக்கு அல்லது யாராவது ஒருவருக்குக் கடிதம் எழுதுங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதை எழுதுங்க. இப்போது முதல் பாடத்தைப் பார்க்கலாமா" என்றேன்.
கலந்து பேசுங்கள்
மாணவர்களை நான்கு குழுக்களாக ஆக்கினேன். ‘நீர் 'மேலாண்மை' நமக்குப் பாடம். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைப்பு. குழுவாக உட்கார்ந்து ஒருவர் வாசிக்க மற்றவர்கள் கேளுங்க. உங்களுக்கான பகுதியை எவ்வாறு நாடகமாக ஆக்கலாம் என்று கலந்து பேசுங்க. நாளைய வகுப்பில் ஒவ்வொரு குழுவும் முன்னாடி வந்து நடிச்சுக்காட்டணும் என்று கூறினேன்.
மாணவர்களுக்குள் உரையாடல் தொடங்கியது. இத்தனைக்கும் இடையே நான்கு பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். வகுப்பறையில் தூங்குபவர்களை உடனே எழுப்பும் பழக்கம் எப்போதுமே எனக்கில்லை என்பதால் லேசாகச் சிரித்தபடி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
வகுப்பெங்கும் சிரிப்பலைகள். அருகிலி ருந்தவர்கள் எழுப்பிவிட திடுக்கிட்டு விழித்தவர்கள் அப்படியே அசடு வழிந் தார்கள்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘கலகல வகுப்பறை, சீருடை-ஆசிரியர்கள் குறித்த திரைப்படங்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்
தொடர்புக்கு: artsiva13@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT