Published : 28 Feb 2020 10:49 AM
Last Updated : 28 Feb 2020 10:49 AM
பிரியசகி
பெண்களின் மாதவிலக்கு குறித்த அறிவியல் உண்மைகள் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தனர் தன்ராஜ் குடும்பத்தினர்.
கீர்த்தி: சயின்ஸ் சார் மாதவிலக்கு பற்றி வீடியோ காட்டி விளக்குறதுக்கு முன்னாடிஎங்க கிளாஸ் பாய்ஸ் எங்களைப் பார்த்தபார்வைக்கும் இப்ப பார்க்கும் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்மா.முன்னாடியெல்லாம் பொண்ணுங்க வயிறுவலின்னு சோர்வா உட்கார்ந்திருந்தாபசங்க ஜாடை மாடையா கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இப்பல்லாம் எங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா தானா முன்வந்து உதவி செய்யுறாங்க. அப்ப இதைப் பத்திய புரிதல் எல்லா பசங்களுக்கும் தேவை இல்லையா?
ராஜா: ஆமா, கண்டிப்பா தேவை; அதேநேரம் பெண்களும் இது பெண்கள் மட்டுமே சம்மந்தப்பட்ட பிரச்சனைன்னு நினைக்கும் மனத்தடையைகடந்து, தனக்கு நன்கு தெரிந்த ஆண்களுடனும் பகிர்ந்துகிட்டாதான் அவங்களுக்கும் புரியும். கீர்த்தி பருவமடைந்த புதுசுல ரொம்ப அதிகமா பிளீடிங் ஆனபோது நான்தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன். அந்த டாக்டரே, பொண்ணோட அம்மா வரலையான்னு தயக்கத்தோடகேட்டாங்க. நான் அப்பாதான், என்கிட்ட சொல்லுங்கன்ன பிறகுதான் பேச ஆரம்பிச்சாங்க.
சுதாகர்: அது ஏன் சிலருக்கு அதிகமாபிளீடிங் ஆகுது. அதிக வலியில கஷ்டப்படுறாங்க. சிலருக்கு எந்த பிரச்சனையும் இல்லாம சாதாரணமா இருக்காங்க.
ராணி: மனித உடலமைப்பு வெளிய பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பல நுட்பமான வேறுபாடுகள் உண்டு. கரு உருவாகாத போது கருப்பையின் வெளிப்புறத்தில் உள்ள தசை நார்கள் கருப்பையின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளே இருக்கும் ரத்த நாளங்களான திசுக்களை கருப்பையின் வாய் பகுதி வழியே வெளியேற்றுவதால் கருப்பையை தாங்கி பிடித்திருக்கும் இடுப்பு எலும்புகளில் வலி ஏற்படும். பருவ வயதுப் பெண்களுக்குக் கருப்பையின் வாய் குறுகலா இருப்பதால் தசை நார்கள் அதிகமான அழுத்ததை ஏற்படுத்தி அடிவயிற்றுவலிக்கு காரணமாகிறது. தாங்கமுடியாத வலி இருந்தாலோ அல்லது ரொம்ப அதிகமான பிளீடிங் இருந்தாலோ கண்டிப்பா மருத்துவரை பார்க்கணும் .
சுதாகர்: பீரியட்ஸ் டைம்ல பெண்கள் ஏன் ரொம்ப கோவமா டென்சனா இருக்காங்க அப்பா ?
ராஜா: வயிறு வலியோட, ஹார்மோன் மாற்றங்களால ஏற்படும் தலைவலி, முதுகுவலி, சோர்வு எல்லாம் சேருவதால, டென்ஷன், கோபம், எரிச்சல் இருக்கும். வீட்ல இருக்கும் மத்தவங்க இதை புரிஞ்சுக்கலைனா சண்டைதான் வரும்.
கீர்த்தி: என் கூட ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ்பண்ண ஒரு பொண்ணு வருவா. அவ ஸ்கூல்ல ரொம்ப தண்ணி பிரச்சினை இருக்குறதால பாத்ரூம் போக வசதி இருக்காதுன்னு பீரியட்ஸ் டைம்ல லீவு போட்டாளாம். அதுக்கு சில டீச்சருங்க அவளை மிக மோசமான வார்த்தைகளால திட்டுனாங்களாம் .
ராணி: பள்ளிகள்ள அடிப்படை வசதிகள் மட்டும்தான் பிரச்சினைனா பணமும், மனமும் இருக்கும் நல்லவங்களோட உதவியால சரி செய்திடலாம்; மனுஷங்களோட மனப்பான்மைல பிரச்சினைன்னா என்ன செய்ய முடியும்!
தன்ராஜ்: என்னதான் பெண்களுக்குஎதிரான வன்முறைகளைத் தடுக்கசட்டங்கள் போட்டாலும், படிச்சு நவநாகரீகமாகிட்டோம்னு வார்த்தை ஜாலங்களைபயன்படுத்தினாலும் பெண்களைப் புரிந்துகொள்வதில் பெரும்பான்மை சமூகம்பின்தங்கிதான் இருக்கு. பெண்களின்வலியையும், உணர்வுகளையும் புரிந்து நடந்து கொள்வதும்கூட பெண் முன்னேற்றத்துக்கான செயல்பாடுதான்னு இந்த சமூகம் புரிஞ்சுக்கணும். அதுதான் அறமும் கூட.
கீர்த்தி: ஏழைகளுக்கு உதவுவதுதானே அறம்னு சொல்லுவாங்க தாத்தா?
தன்ராஜ்: அதுமட்டும் அறம் இல்லம்மா, தவறானவற்றை சரி செய்வதும்; சரியானவற்றை தொடர்ந்து செய்வதும் அறம்தான்.
(தொடரும்)
கட்டுரையாளர்: நிறைவகம், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT