Published : 24 Feb 2020 10:17 AM
Last Updated : 24 Feb 2020 10:17 AM

நதிகள் பிறந்தது நமக்காக! 16- அடடா என்ன சுவை சிறுவாணி!

இந்தியாவில் உள்ள எல்லா நதிகளுமே, மக்களின் தாகம் தீர்க்க குடிநீர் வழங்குகின்றன. வறட்சி நீக்குதல், சுற்றுச்சூழல் பராமரித்தல், கால்நடைகள், விலங்குகளுக்கு வாழ்வாதாரமாக விளங்குதல் என்று பல பயன்களை, ஆறுகள் நமக்கு அள்ளித் தருகின்றன.

இவற்றிலும், வேளாண் உற்பத்தியில், பயிர் வளர்ப்பில், பாசனத்துக்குப் போதுமான தண்ணீர் வழங்குவதில் ஆறுகளின் பங்கு மகத்தானது. விவசாயத்தைப் புனிதமான தொழிலாக ஏற்று மதிப்பளித்த மக்கள், அதோடு நெருங்கிய தொடர்புடைய ஆறுகளை தெய்வமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள்.

ஊரின் பெயர் தாங்கி ஓடும் நதி

பாசனத்துக்கு அடுத்ததாக, மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதில், ஆறுகளின் பங்கு மிக அதிகம். அளவுக்கு அதிகமான மாசு, கழிவு காரணமாக குடிநீருக்குத் தகுதியற்றதாய் சில ஆறுகள் மாறி வருகின்றன. இது இன்றைய நிலை. ஆனால், இந்தியாவின் அத்தனை ஆற்று நீரும், குடிப்பதற்கு உகந்தவைதாம். அதிலும் சில நதிகள், மிக ஆரோக்கியமான சுவையான குடிநீரைத் தாங்கி வருகின்றன. அவற்றுள் முதன்மையானது சிறுவாணி.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் அருகே ஓடுகிறது சிறுவாணி. இது பவானி ஆற்றின் கிளை ஆறு ஆகும். பவானி காவிரி நதியின் கிளை. கேரள மாநிலம் மன்னர்காட் அருகிலும் சிறுவாணியின் ஒரு பகுதியைக் காணலாம். 'பானன் கோட்டை'க்கு அருகே, கோவையில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, சிறுவாணி நீர் வீழ்ச்சி சுற்றுலாத் தலங்கள் ஆகும். சிறுவாணி என்கிற பெயரில் ஒரு கிராமம் இங்கே இருக்கிறது. அதுவே நதியின் பெயராக மாறிவிட்டது என்கின்றனர் சிலர்.

திட்டத்துக்கு எதிர்ப்பு!

2012-ல் சிறுவாணி நதியின் மீது ஒரு தடுப்பணை கட்ட கேரள அரசு முயன்றது. இதன் காரணமாக கோவை மாநகரின் குடிநீர்த் தேவை மோசமாக பாதிக்கப்படும்; பவானி ஆற்றுக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாகக் குறைந்துவிடும். ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயம் கேள்விக் குறியாகிவிடும். எனவே, தமிழக அரசு இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி, வற்றாத ஜீவ நதியாகவே பாய்கிறது. முத்திக்குளம் நீர்வீழ்ச்சியில் நதியாக உருப்பெறுகிற சிறுவாணியில், பட்டியார் மற்றும் பம்பார் ஆகிய நீரோடைகள் வந்து கலக்கின்றன. ஒரத்துப்பாளையம், ஆத்துப்பாளையம் அணைக்கட்டுகள் இதன் மீது உள்ளன.

அதீத சுவை

கோயம்புத்தூர், திருப்பூர், பல்லடம், ஒரத்துப்பாளையம் உள்ளிட்ட பல ஊர்கள், சிறுவாணி நதியால் பயன் பெறுகின்றன. சிறுவாணி போலவேதான் நொய்யல் நதியும் கேரளாவை ஒட்டிப் பாய்ந்து, கோவை, திருப்பூர் நகரங்களுக்குப் பயன் தருகிறது. பொதுவாக ஆற்று நீர் என்றாலே சுவையாகத்தான் இருக்கும். இந்த வகையில், சிறுவாணி பன்மடங்கு உயர்ந்தது. 'சிறுவாணித் தண்ணி' குடிச்சு வளர்ந்தவன்.., வேற எந்தவூரு தண்ணியும் பிடிக்க மாட்டேங்குது..'என்று பலர், பெருமையாகச் சொல்வதைக் கேட்கலாம். உண்மைதான். மிகவும் அருமையான சுவை கொண்டது சிறுவாணி நீர். இதற்கு இணை வேறு ஒன்று இல்லை. அதனை சற்றும் மாசு படாமல் காக்க வேண்டிய முழுப் பொறுப்பும் நம்மிடம் உள்ளது.

சிறுவாணியில் கால் நனைக்கலாம்; போதாது. கூடவே கொஞ்சம் தொண்டையும் நனைக்க வேண்டும். அப்போதுதான் சிறுவாணியைப் பார்த்த திருப்தி ஏற்படும்.

(தொடர்வோம்)

கட்டுரையாளர்: ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x